Wednesday, January 12, 2011
மீண்டும் அரசியலுக்கு வரமாட்டேன்; எனது பிள்ளைகளும் வரமாட்டார்கள் : சந்திரிகா
மீண்டும் அரசியலில் ஈடுபடுவதற்கான எண்ணம் தன்னிடமில்லை எனவும் தற்போது பிரிட்டனில் வசிக்கும் தனது மகனோ மகளோ அரசியலுக்கு வரமாட்டார்கள் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறினார்.
டெய்லிமிரர் ஆங்கில நாளிதழுக்கும் அதன் சகோதர ஊடகமான தமிழ் மிரருக்கும் நேற்று ஞாயிற்றுக்கிழமை அளித்த பிரத்தியேக செவ்வியொன்றிலேயே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா இவ்வாறு இவ்வாறு கூறினார்.
'நிறைவேற்றதிகார ஜனாதிபதி பதவியை ஒருவர் இரு தடவைகளுக்கு மேல் வகிப்பதற்கு அரசியலமைப்பில் இருந்த தடை நீக்கப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவீர்களா?' என அவரிடம் கேட்டபோது, "இல்லை. ஜனாதிபதி பதவியில் எனக்கு பேராசை கிடையாது. நான் ஏற்கெனவே இரு தடவை அப்பதவியை வகித்துவிட்டேன்.
சிலர் அதிகாரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதற்கு முயற்சிப்பது ஏதாவது தனிப்பட்ட லாபங்களைப் பெறுவதற்கே. நான் ஜனாதிபதி பதவியிலிருந்தபோது எனக்காகவோ பிள்ளைகளுக்காகவோ தனிப்பட்ட ரீதியில் எதுவும் செய்யவில்லை.
பணம் சம்பாதிக்கவில்லை. நான் அரசியலில் ஈடுபடுவதை எனது பிள்ளைகள் விரும்பியிருக்கவில்லை. 60 வயதுக்கு மேல் பதவியிலிருக்க மாட்டேன் என எனது பிள்ளைகளுக்கு வாக்குறுதியளித்திருந்தேன்.
பகிரங்கமாகவும் இதை நான் கூறியிருந்தேன். எனவே எனக்கு மீண்டும் பதவிக்கு வரும் நோக்கம் கிடையாது. எனது பிள்ளைகளும் அரசியலுக்கு வர மாட்டார்கள்" என பதிலளித்தார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF