Saturday, January 15, 2011

கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்: 2 குழந்தைகளை, தந்தையே கொன்றது அம்பலம்


இந்தியா வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் ஜமீலாபாத் 3-வது தெருவை சேர்ந்தவர் முகமது அலி. இவர் சென்னை பூந்தமல்லியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் ஸ்டோர் கீப்பராக வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி ஆஜிராபேகம் இவர்களுக்கு தானியா தாஷிகா (வயது 3), காஜியா நாஷிகா (2) என்ற இரண்டு பெண் குழந்தைகளும், 3 மாத முகமது தாஹா என்ற ஆண் குழந்தையும் இருந்தனர். 

இரண்டு நாட்களுக்கு முன்பு முகமது அலியின் மகள்களான தானியா தாஷிகா, காஜியா நாஷிகா ஆகிய இரண்டு குழந்தைகளையும் திடீரென காணவில்லை. நேற்று முன்தினம் மாலை மேல்விஷாரம் தனியார் மருத்துவமனை அருகே கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்த சிறுவர்கள் பாழடைந்த கிணற்றில் இரண்டு குழந்தைகள் பிணம் மிதப்பதாக அந்த பகுதி மக்களிடம் தெரிவித்தனர். 

இது பற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று பிணங்களை வெளியே எடுத்து பார்த்த போது காணாமல் போன தானியா தாஷிகா, காஜியா நாஷிகா ஆகியோர்கள் தான் என்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியில் உறைந்த போலீசார் இச்சம்பவம் குறித்து தனி போலீஸ் படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை தனது வீட்டிலிருந்த முகமது அலியை போலீசார் ஆற்காடு போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். 

அப்போது அவர், தானே குழந்தைகளை கொன்றுவிட்டு ஒன்றுமே தெரியாத அப்பாவி போல் நாடகமாடிய திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது. அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:- 

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கும், ஆஜிரா பேகத்திற்கும் திருமணம் ஆன போது 35 பவுன் நகை போட்டு திருமணம் செய்து வைத்தனர். நான் தனியார் கம்பெனியில் வேலை செய்வதால் மாத வருமானம் 7 ஆயிரத்து 500 ரூபாய். இதில் எனது குடும்பத்தை நடத்துவது சிரமமாக இருந்தது. எதிர்காலத்தில் இரண்டு குழந்தைகளையும் எவ்வாறு படிக்கவைத்து திருமணம் செய்து வைப்பது என்ற மன உளைச்சலில் இருந்தேன். 

இந்த நிலையில், அதே பகுதியில் ஆசிரியராக வேலை பார்க்கும் எனது தம்பி அஷ்ரப் அலியிடம், அவனது மோட்டார் சைக்கிளை நேற்று முன்தினம் காலை வாங்கினேன். அவனிடம் சொந்த வேலை இருப்பதாக தெரிவித்துவிட்டு அவன் பள்ளிக்கு சென்றதும், வீட்டில் யாரும் பார்க்காத நேரத்தில் எனது இரண்டு பெண் குழந்தைகளையும் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று இரண்டு கி.மீ. தொலைவில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே உள்ள பாழடைந்த கிணற்றில் வீசினேன். 

பின்னர் மோட்டார் சைக்கிளை எனது தம்பியிடம் கொடுத்துவிட்டு வீட்டிற்கு வந்தேன். இவ்வாறு கொலைக்கான காரணம் குறித்து முகமது அலி வாக்கு மூலத்தில் கூறியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக முகமது அலியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF