Tuesday, January 4, 2011

மலேசியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கும் பிரிட்டிஷ் தம்பதியர்


கோலாலம்பூர் போதைப் பொருள் வைத்திருந்ததாகவும் கடத்தியதாகவும் பிரிட்டிஷ் மாது ஒருவர் மீதும் அவரது மலேசியக் கணவர் மீதும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இருவரும் குற்றவாளிகள் என தீர்மானிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று மலேசியப் போலிசார் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
கணவனும் மனைவியும் இரு வாரங்களுக்குமுன் கைது செய்யப்பட்டனர்.
திரெங்கானு மாநிலத்திலுள்ள அவர்களது வீட்டிலிருந்து 75,000 ரிங்கிட்டுக்கு மேல் (S$31,385) மதிப்புள்ள ஹெராயின், எக்ஸ்டசி போதைப் பொருட்களைப் போலிசார் கைப்பற்றினர்.
நாற்பது வயது ஷிவான் ஆர்டன்மீது ஐந்து குற்றச்சாட்டு களும் அவரது 46 வயது கணவர் அப்துல் ஹாரிஸ் ஃபடிலா மீது நான்கு
குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டதாக மாநில போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவின் தலைவர் ரொஸ்லான் அப்துல் வாஹித் தெரிவித்தார்.
“இருவரும் தனித்தனியே போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகின்றனர்.
அதோடு, சட்டவிரோதமாக ஐந்து கஞ்சா செடிகளை வைத்திருந்ததாகக் கூட்டுக் குற்றச்சாட்டையும் எதிர்நோக்குகின்றனர்” என்று அவர் ஏஎப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
“இவ்வளவு அதிக போதைப் பொருட்களைக் கடத்துவதும் வைத்திருப்பதும் மரண தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றம் என்பதால், இருவருக்கும் பிணை மறுக்கப்பட்டது’ என்று திரு ரொஸ்லான் கூறினார்.
இருவர் மீதான வழக்கு ஜனவரி 26ம் தேதி நீதிமன்ற விசாரணைக்கு வரும்.
“இருவரும் குற்றவாளிகளென தீர்மானிக்கப்பட்டால், மரண தண்டனை விதிக்கப்பட்டு, இருவரும் தூக்கிலிடப்படலாம்” என்றார் அவர்.
தம்பதியர் இருவருக்கும் மணமாகி 20 ஆண்டுகளுக்கு மேலாகிறது. செராடிங் கடற்கரை உல்லாசத்தளத்தில் விடுமுறை பங்களா தொழில் நடத்தி வந்தனர். விடுமுறை பங்களாக்களில் வாடிக்கையாளர்களிடம் போதைப் பொருள் விற்கப்பட்டதா என போலிசார் விசாரித்து வருகின்றனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF