கம்ப்யூட்டர் உலகம் தற்போது நான்கு முனைச் சந்திப்பில் நின்று கொண்டிருக்கிறது. எந்தப் பக்கம் எட்டு எடுத்து வைப்பது என்று புரியாமல் உள்ளது. இன்றைக்கு பலருக்கு, முதல் கம்ப்யூட்டர் எது என்றால் அது பெர்சனல் கம்ப்யூட்டராக இல்லை. ஸ்மார்ட் போனாகத்தான் உள்ளது.
ஒரு பெர்சனல் கம்ப்யூட்டர் வீட்டில் அல்லது அலுவலகத்தில் ஒரு மேஜையில் அமர்ந்து கொண்டு செயல்படுகிறது. ஆனால் ஸ்மார்ட் போன்கள் நாம் எங்கு சென்றாலும் உடன் வருகின்றன. அதன் மூலம் நம் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. எவ்வளவுதான் திறனுடன் செயல்பட்டாலும், ஒரு ஸ்மார்ட் போன், பெர்சனல் கம்ப்யூட்டராக முழுமையாக இடம் பெறாது.
எனவே தான் பெர்சனல் கம்ப்யூட்டருக்கும், ஸ்மார்ட் போனுக்கும் இடையே ஒரு சாதனம் இரண்டின் பயன்பாட்டினையும் முழுமையாகத் தரும் வகையில் தேவையாய் இருந்தது. அந்த இடத்தில் டேப்ளட் பிசி வந்து நம் தேவைகளை நிறைவு செய்து வருகிறது.
இதனால், கம்ப்யூட்டர் பயன்பாடு தற்போது இரு வகை கணினிகளில் மேற்கொள்ளப்பட்டு, எதில் தொடர்வது என்ற கேள்விக் குறியுடன் தொடர்கிறது. ஆனால், அண்மையில் லாஸ்வேகாஸ் நகரில் நடந்து முடிந்த தகவல் தொழில் நுட்பக் கருத்தரங்கில் அறிமுகம் செய்யப்பட்ட பட்டயக் கணிப்பொறிகளைக் (Tablet PC) காண்கையில், அதன் மாடல் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்கையில், இவை மொத்தமாக மக்களை சென்றடையும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்றே தெரிகிறது. எனவே நம்மைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், அதன் சில அம்சங்களை இங்கு பார்க்கலாம்.
1. பழைய மாடலில் மாற்றம்: தற்போதைய டேப்ளட் பிசி இதன் முன்னோடிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளது. முதலில் ஒரு டேப்ளட் பிசி, லேப்டாப் கம்ப்யூட்டரில், சுழலும் திரை ஒன்றை இணைத்தது போல வடிவமைக்கப்பட்டது. ஆனால் மக்களிடம் இவை எடுபடவில்லை. பின்னர், ஸ்மார்ட் போன் தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட மாற்றங்களும், ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பேட் சாதனம் உண்டாக்கிய சலசலப்பும், மக்களை புதிய கோணத்தில் பார்க்க வைத்தது. ஐ-பேட் இதுவரை டேப்ளட் பிசி குறித்து நிலவி வந்த அம்சங்களை மாற்றிப் போட வைத்தது. அந்நாளைய காம்போசிசன் நோட்டுப் போல தோற்றத்தில் பல டேப்ளட் பிசிக்கள் வடிவமைப்பு கொண்டுள்ளன. அனைத்தும் டச் ஸ்கிரீன் தொழில் நுட்பத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளன.
2. புதிய ஸ்லேட்கள்: பல டேப்ளட் பிசிக்கள் புதிய டிஜிட்டல் ஸ்லேட்டுகளாகத்தான் வடிவம் பெற்றுள்ளன. இவற்றில் மிகவும் பிரபலமானது ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பேட். 9.5 அங்குல அகலத்தில், 7.5 அங்குல உயரத்தில், 0.5 அங்குல தடிமனில் இது வெளியான போது, இதுவே டேப்ளட் பிசிக்களின், வரையறுக்கப்பட்ட வடிவமாக அமைந்துவிட்டது. பின்னர் சாம்சங் கேலக்ஸி டேப் 7 அங்குல திரையுடன் அறிமுகமான போது, கைகளுக்குள் அடங்குவதற்கான சரியான அளவு அது என வரையறை செய்யப்பட்டது.
தற்போது நாம் விரும்பும் அளவில் திரையுடன் கூடிய டேப்ளட் பிசிக்களை தேர்ந்தெடுக்கலாம். டேப்ளட் பிசிக்களைத் தயாரிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் பெருகிக் கொண்டு வருகிறது. 2011 ஆம் ஆண்டு, கம்ப்யூட்டர் பயன்பாட்டில் நிச்சயம் இது ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
3. ஆப்பரேட்டிங் சிஸ்டம்: பிரியமான அளவில் டேப்ளட் பிசிக்கள் தயார் ஆவது மட்டுமின்றி, இவற்றின் இயக்கத்திற்கான ஆப்பரேட்டிங் சிஸ்டமும் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் உள்ளன. இவற்றில் ஐபோன், ஐபேட், ஐ பாட் டச் ஆகியவற்றில் இயங்கும் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் முன்னணியில் உள்ளது. அடுத்த நிலையில் கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் இடம் பெறுகிறது. ஆண்ட்ராய்ட் சிஸ்டத்துடன், 12க்கும் மேற்பட்ட புதிய டேப்ளட் பிசிக்கள் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆண்ட்ராய்ட் சிஸ்டமும் 1.6, 2.0, 2.1 மற்றும் 2.2 எனப் பல பதிப்புகளில் கிடைக்கிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய விண்டோஸ் 7 சிஸ்டத்தினை, டேப்ளட் பிசிக்கானதாகக் கொண்டு வந்துள்ளது. பிளாக்பெரியைத் தயாரிக்கும் ஆர்.ஐ.எம். நிறுவனம், QNX என்ற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இது யூனிக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஒரு வகையாகும். டேப்ளட் பிசி தயாரிப்பில், பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி, சிறிய நிறுவனங்களும், தங்கள் பங்கைப் பிடிக்க பலத்த போட்டியில் இறங்கி உள்ளன.
4. நிறைய எதிர்பார்ப்புகள்: இத்தனை மாடல் டேப்ளட் பிசிக்களும் போட்டியில் இறங்கியுள்ள நிலையில், இவற்றில் மக்கள் எதிர்பார்க்கும் அம்சங்களும் அதிகரித்து வருகின்றன. எங்கும் எடுத்துச் செல்லுதல், நெட்வொர்க் இணைப்பு பெறுதல் ஆகிய ஸ்மார்ட்போன் வசதிகளுடன், லேப்டாப் ஒன்றின் செயல்பாடுகளையும் இணைத்துத் தருவதால், குறிப்பாக பெரிய திரை, அதிக திறனுடன் கூடிய ப்ராசசர் மற்றும் கேமரா மற்றும் துணை சாதனங்கள் கொண்டு இவை இருப்பதனால், பயன்படுத்துபவர்கள் இதில் இன்னும் பல வேலைகளை முடிக்கப் பயன்படுத்துமா என்று எதிர்பார்க்கின்றனர்.
குறிப்பாக, இயங்கும் இடத்திற்கேற்ற வகையில் இணைய தகவல்களைத் தரும் பணிகளில், டேப்ளட் பிசிக்கள் தங்கள் ஜி.பி.எஸ். திறனுடன் செயல்படுவதால், இவற்றின் பயன்களின் எல்லைகள் விரிந்து கொண்டே செல்கின்றன. மேலும் முன் பகுதியிலும் தரப்படும் கேமரா, வீடியோ கான்பரன்சிங் வசதியை மிக எளிதாகத் தருகிறது. இவை சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களுடனான தொடர்பை இன்னும் எளிதாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆக்குகின்றன.
டேப்ளட் பிசிக்கள், தற்போது கையாளப்படும் மொபைல் கேமிங் வசதிகளை இன்னும் சிறப்பாக்கும். ஆப்பிள் அப்ளிகேஷன் ஸ்டோர் மற்றும் கூகுள் ஆண்ட்ராய்ட் மார்க்கட் தளங்களில் ஹை டெபனிஷன் முப்பரிமாண விளையாட்டுக்கள் இதற்கெனவே குவிந்து கிடக்கின்றன. பலர் ஒரே நேரத்தில் வேறு வேறான இடங்களிலிருந்தவாறே விளையாடுவது டேப்ளட் பிசிக்கள் மூலம் மிக எளிதாகும். குறைந்த கட்டணத்தில், எப்போதும் இணைய இணைப்பில் இருக்கும் வகையிலான கம்ப்யூட்டர்களை, டேப்ளட் பிசிக்கள் தரும். பெரும்பாலான டேப்ளட் பிசிக்கள், வை-பி மற்றும் 3ஜி தொடர்பினைத் தரும் வகையில் வடிவமைக்கப்படுவதால், நெட்வொர்க் இணைப்பு எளிதாகும்.
ஆப்பிள், சாம்சங். எச்.பி. போன்ற நிறுவனங்களின் டேப்ளட் பிசிக்களுடன், டெல், ஏசர் நிறுவனங்களின் டேப்ளட்களும் தற்போது மார்க்கட்டில் இறங்குகின்றன. இதில் நெட்புக் கம்ப்யூட்டர் விற்பனையில், உலக அளவில் 36% பங்கினைக் கொண்டுள்ள ஏசர் நிறுவனம் , 4.8 மற்றும் 10 அங்குல திரைகளுடன் இவற்றை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இதே வகையில் டெல் நிறுவனமும் இறங்கியுள்ளது.
பெயர் பெற்ற நிறுவனங்களின் டேப்ளட் பிசியின் விலை ரூ.70,000 முதல் ரூ. 90,000 வரை செல்கிறது. அதிகம் பிரபலமாகாத சீனத்து டேப்ளட் பிசிக்கள், இணைய தளம் மூலமாகவும் சில ஏஜன்சிகள் மூலமாகவும் கிடைக்கின்றன. இவற்றின் விலை ரூ. 20,000 முதல் ரூ.50,000 வரை உள்ளன. இந்திய சேர்ந்த நோஷன் இன்க் (Notion Inc) என்ற நிறுவனம், ஐ-பேடில் உள்ளதைக் காட்டிலும் கூடுதல் வசதிகள் கொண்ட டேப்ளட் பிசி ஒன்றை ரூ. 45,000 என்ற அளவில் தருவதாக அறிவித்துள்ளது.
இதே போல ஆலிவ் பேட் என்ற 3ஜி வசதி கொண்ட 7 அங்குல திரை கொண்ட டேப்ளட் பிசி ரூ. 50,000க்குக் கிடைக்கிறது. இவை மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இருந்தால், நிச்சயம் இந்த சந்தையில் வெற்றி பெறும். முதல் வெற்றி பெற்றால், லாபமும் அடையும். மக்களும் பயன் பெறுவார்கள். பெரிய நிறுவனங்கள், இந்த டேப்ளட் பிசிக்களுக்குத் தேவையான அப்ளிகேஷன்களை அதிக அளவில் சந்தையைப் பிடிக்கும் போட்டியில் இனி பலமாக இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனாலும், டேப்ளட் பிசி ஒருவரின் இரண்டாவது கம்ப்யூட்டராகத்தான் மக்களால் முதலில் ஏற்றுக் கொள்ளப்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. பெரும்பான்மை யானவர்களால் இயக்கப்படும் விண்டோஸ் இயக்கம் முழுமையாக, டேப்ளட் பிசியில் இயங்கும் நிலை வரும்போதுதான், டேப்ளட் பிசிக்கள் பெரிய அளவில் பெருகும்.