இத்தாலியின் புகழ்பெற்ற லியானார்டோ டாவின்சியின் பிரபலமான மோனாலிசா ஓவியத்தைப் பற்றி,பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த ஓவியத்துக்கு யார் "மாடலாக' இருந்தனர், ஓவியத்தின் பின்னணிக் காட்சிகள் கற்பனையா? அல்லது உண்மையா?
லியானார்டோ டாவின்சி வரலாற்றுப் புகழ்பெற்ற ஓவியர். இவரது ஓவியங்களுள் இன்று வரை மிகுந்த வரவேற்பை பெற்றது, மோனாலிசா ஓவியம். இப்படத்தில் லிசாவின் பின்னணியில் ஒரு பாலம் மற்றும் சாலை மங்கலாகக் காட்டப்பட்டிருக்கும். இந்த ஓவியத்தைப் பற்றி இதுவரை பல்வேறு ஆய்வுகள் நடந்துள்ளன.
இதுவரைக்கும் அனைவரும் லிசாவைப் பற்றி மட்டுமே ஆய்வு செய்தனர். அவரின் பின்னணியில் உள்ளதை யாரும் கண்டுகொள்ளவில்லை. பாலமும் சாலையும் டாவின்சியின் கற்பனைச் சித்திரங்கள் என்றே கருதினர்.
இந்நிலையில், இதுகுறித்து கர்லா க்ளோரி என்பவர் விரிவான ஆய்வுகளைச் மேற்கொண்டார். பொதுவாக, மோனாலிசா ஓவியத்துக்காக, இத்தாலியின் ப்ளோரன்ஸ் நகரில் வாழ்ந்த லிசா டெல் ஜியோகாண்டோ என்ற பெண்ணைத் தான் டாவின்சி "மாடலாக' பயன்படுத்தினார் என்று நம்பப்படுகிறது.
ஆனால் 15ம் நூற்றாண்டில், இத்தாலியின் மிலன் நகரத்து இளவரசியாக இருந்த பியங்கா கியோவன்னா போர்சா என்ற பெண்ணையே டாவின்சி, தனது ஓவியத்துக்கான "மாடலாக' பயன்படுத்தியுள்ளார் என்று கர்லா தனது ஆய்வில் கண்டறிந்துள்ளார்.
இந்த ஆய்வில் அவர் ஈடுபட்டிருந்த போதுதான், லிசாவின் பின்னணியில் உள்ள காட்சிகள், இத்தாலியின் வடபகுதியில் உள்ள போபியோ என்ற சிறு நகரத்தில் உள்ளன என்பதையும் கண்டறிந்தார். அந்நகரத்தின் மத்தியில் உள்ள அரண்மனை ஜன்னல் வழியாகப் பார்த்தால் லிசாவின் பின்னணிக் காட்சிகள் அப்படியே தெரிவதாகவும் அவர் தெரிவித்தார்.
அவரது ஆய்வு உண்மைதான் என்பதை நிரூபிக்கும் வகையில் இன்றும் அந்நகரத்தில் லிசாவின் பின்னணியில் தெரியும் பாலம் ஒன்று உள்ளது.