அமெரிக்க டொலரினால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட சர்வதேச நாணய முறைமை கடந்த காலத்திற்குரியதென இவ்வாரம் அமெரிக்காவுக்கான விஜயம் மேற்கொள்ளவுள்ள சீனா ஜனாதிபதி ஹு ஜிந்தாவோ தெரிவித்துள்ளார்.
அத்துடன் அமெரிக்க டொலரிற்கு பதிலாக சீன நாணயமான யுவானை சர்வதேச அளவில் புழக்கத்தில் விடுவதற்கு சீனா நடவடிக்கை எடுத்துவருவதாகவும் ஜிந்தாவோ தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனுக்கான தனது விஜயத்திற்கு முன்னர் இரு அமெரிக்கப் பத்திரிகைகளுக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே அவர் இவ்வாறான கருத்தினை தெரிவித்துள்ளார்.
ஹூ ஜிந்தாவோவின் கருத்துக்கள் இரு வல்லரசு நாடுகளிடையேயும் (அமெரிக்கா, சீனா)நாணய விவகாரத்தில் பதற்றம் தொடர்வதை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
ஏனைய நாடுகளின் ஏற்றுமதிச் செலவீனத்தில் அமெரிக்க டொலரின் பெறுமதியை குறைக்கும் நடவடிக்கை என கருதப்படும் அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கான 600 பில்லியன் டொலர் நிதி ஒதுக்கீடு தொடர்பாகவும் ஹு ஜிந்தாவோ கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவின் நாணயக் கொள்கையானது உலக பொருளாதார பின்னடைவு மற்றும் மூலதனப் பாய்ச்சல் ஆகியவற்றின் மீது பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.இதனால் அமெரிக்க டொலரின் திரவத்தன்மையினை ஸ்திரமாகவும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுமாக தக்கவைத்துக் கொள்ளவேண்டும் எனவும் வாஷிங்டன் போஸ்ற் மற்றும் வால் ஸ்ட்ரீட் ஜேர்ணல் ஆகிய பத்திரிகைகளுக்கு வழங்கிய பேட்டியில் ஜிந்தாவோ குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் யுவானின் பெறுமதி அதிகரிப்பானது பணவீக்கத்திற்கு எதிராக சீனா போராடுவதற்கு உதவியாக அமையுமென்ற கருத்தினை ஜிந்தாவோ நிராகரித்துள்ளர்.
யுவான் சர்வதேச நாணயமாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு சில காலம் தேவைப்படலாமென தான் நம்புவதாகவும் தெரிவித்த அவர் வர்த்தகம் மற்றும் மொத்த பொருளாதார உற்பத்தி ஆகியவற்றில் சீனா முக்கிய பங்களிப்பினை வழங்கி இருப்பதாகவும் உலக பொருளாதார அபிவிருத்தியில் யுவான் முக்கிய பங்கு வகித்திருப்பதாகவும் தெரிவித்தார்.