Tuesday, March 6, 2012

பாக்டீரியா சக்தியில் இயங்கும் விண்வெளி ரோபோக்கள்!


நிலவில் முதலில் காலடி எடுத்து வைத்தது மனிதன் தான் என்றாலும் நிலவு, செவ்வாய் உள்ளிட்ட பல கோள் களை மனிதர்களுக்காக ஆய்வு செய்வது விண்வெளி ரோபோக்களே. தொடக்கத்தில் பெரிய பெரிய பெட்டிகளாக இருந்த வானொலி, தொலைக்காட்சி உள்ளிட்ட பல மின் சாதனங்களை கையடக்க அளவுகளிலும், எடை குறைவான தாகவும் மாற்றிய பெருமை தொழில்நுட்பத்தையே சேரும்.மனிதனுக்கு தேவையான மின் சாதனங்களில் பலப்பல புதுமைகளை செய்து கொண்டிருக்கும் தொழில்நுட்பம், இப்போது விண்வெளி ஆய்வில் ஈடுபடும் ரோபோக்களில் ஒரு அட்டகாசமான புதுமையை செய்திருக்கிறது.


தற்போதுள்ள விண்வெளி ரோபோக்களை சூரிய ஒளி சக்தி (சோலார்) மற்றும் அணு சக்தி இவை இரண்டும்தான் இயக்குகின்றன. ஆனால் அமெரிக்காவின் நாசா ஆய்வு மய்யத்தின் புதிய ஆய்வு ஒன்றில் ஜியோபாக்டர் சல்பர் ரெடிசன்ஸ்’ என்னும் ஒரு வகை பாக்டீரியாக்களை கொண்டு சிறிய விண்வெளி ரோபோக்களை இயக்க முடியுமா என்று முயற்சித்துள்ளனர். சூரிய ஒளி மற்றும் அணு சக்தியில் எப்படி ரோபோக்கள் இயங்குகின்றனவோ அதே போல ஜியோபாக்டர் வகை பாக்டீரியாக்களில் இருந்து பெறப்படும் சக்தியை கொண்டு இயங்கும் சிறிய வகை ரோபோக்களை நாசா விஞ்ஞானிகள் உருவாக்க தொடங்கியுள்ளனர்.


உயிருள்ள பாக்டீரியாக்களே ஒரு மின்கலம் போல செயல்படுவதால், சிறிய ரோபோக்கள் இயங்க தேவையான சக்தி தொடர்ந்து நீண்டகாலம் கிடைத்து கொண்டே இருக்கும். அதாவது, அந்த பாக்டீரியாக்களுக்கு தேவை யான உணவு கிடைத்து, அவை உயிரோடு இருக்கும் வரை. இந்த பாக்டீரியாக்களில் இருந்து கிடைக்கும் சக்தியின் அளவு மிக குறைவு என்பதால் இதை பயன்படுத்தி சிறிய வகை ரோபோக்களை மட்டுமே இயக்க முடியும். மார்ஸ் ரோவர் போன்ற பெரிய விண்வெளி ரோபோக்களை இயக்க இந்த சக்தி போதாது.ஜியோபாக்டர் சல்பர் ரெடிசன்ஸ் வகை பாக்டீரியாக் களில் ஒரு சிறப்பு என்னவென்றால், இவை வாழ ஆக்சிஜன் தேவையில்லை! இந்த காரணத்தினால்தான் இவை விண்வெளி ரோபோக்களை இயக்கும் நுண்கிருமி மின்கலமாக (மைக்ரோபியல் பிவல் செல்) தேர்வு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பத்து வருடங்களுக்குள் உருவாக்கப்படும் என்று நம்பப்படும் இந்த அதி நவீன ரோ போக்களின் எடை சுமார் ஒரு கிலோ.


அட்டகாசமான இந்த நுண்கிருமி மின் கல ரோபோக்களை உருவாக்குவதில் சில பல தொழில்நுட்ப சவால்களும் இருக்கின்றன. அந்த சவால்களில் முக்கியமானது நுண்கிருமி தொற்று சார்ந்தது. பொதுவாக, செவ்வாய் உள்ளிட்ட வேற்று கோள்களுக்கு செல்லும் விண்வெளி ரோபோக்களில் நுண்கிருமிகள் எதுவும் இல்லாதவாறு `ஸ்டெரிலைஸ்’ (சுத்தம்) செய்து விடுவது வழக்கம். இது பூமியில் உள்ள நுண்கிருமிகள் வேற்று கிரகங்களுக்குள் ஊடுருவாமல் பாதுகாக்க மேற்கொள்ளப்படும் சோதனைகளுள் ஒன்று. அப்படியானால் நுண்கிருமிகளின் சக்தியில் இயங்கும் ரோபோக்கள் விண்வெளிக்குப் போனால் என்னவாகும்?


ரோபோக்கள் இயங்க தேவையான சக்தியை கொடுக் கும் ஜியோபாக்டர் சல்பர் ரெடிசன்ஸ் மாதிரியான நுண் கிருமிகளை விண்வெளிக்கு கொண்டு செல்வது ஒரு வகையில் நன்மைதான் என்கிறார் நாசாவின் விண்வெளி ஆய்வாளர் க்ரிகரி ஸ்காட். ஏனென்றால் இந்த நுண் கிருமிகள் சாதாரண நுண்கிருமிகள் போலல்லாமல் விண்வெளி ரோபோக் களை இயக்கும் எரிசக்தியாக பயன்படுகின்றன. இருந்தபோதும் பாக்டீரியாக்களை எரிசக்தியாக பயன்படுத்தும் எந்தவொரு விண்வெளி எந்திரமும், விபத்துகளின்போது அவை வெளியேறி விடாத வண்ணம் உருவாக்கப்பட வேண்டியது அவசியம். ஏனென்றால் செவ்வாய் போன்ற கிரகங்களில் இத்தகைய பாக்டீரியாக்கள் பிழைத்துக்கொள்வதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது.


அப்படி அவை பிழைத்துக்கொண்டால் அந்த கிரகம் மாசடைந்துவிடும் என்று எச்சரிக்கிறார்கள் விண்வெளி ஆய்வாளர்கள். அணு சக்தி மற்றும் சூரிய ஒளி சக்தி ஆகியவற்றின் தேவையை தவிர்க்க உதவும் நுண்கிருமி மின்கல ரோபோக்களின் வருகை விண்வெளி ஆய்வில் ஒரு புதிய மைல்கல். இந்த புதிய தொழில்நுட்பம், தற்போதுள்ள விண்வெளி ரோபோக்கள் இயங்குவதற்குப் பயன் படுத்தப்படும் தொழில்நுட்பத்தில் உள்ள பல சிக்கல்களுக்கு தீர்வளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF