Saturday, March 10, 2012

ஜப்பானில் அடிக்கடி சுனாமி ஏற்படுவதற்கு காரணம் என்ன? ஆராய்ச்சியில் ஜேர்மன் ஆய்வாளர்கள்!


ஜப்பானில் சுனாமி ஏற்பட்டு ஓராண்டு முடிவடையவுள்ள நிலையில், ஜேர்மன் விஞ்ஞானிகள் சுனாமி மையம் கொண்ட இடத்தை ஆராய்வதற்காக அவ்விடத்தை நோக்கி பயணிக்கின்றனர்.கடலுக்குக் கீழே 23000 அடி ஆழத்தில் கடல் தளத்தில் சுனாமி மையம் கொண்ட இடத்தை நோக்கி ஜேர்மானிய விஞ்ஞானிகளும், ஜப்பானிய ஆராய்ச்சியாளரும் இணைந்து செல்கின்றனர்.


இந்த ஆராய்ச்சிக் குழுவின் தலைவரான ஜெரால்டு வெபெர் என்பவர் மிரெமென் பல்கலைக்கழகத்தில் கடலின் காலநிலை மாற்றத்தை ஆராயும் ஜேர்மானிய ஆய்வு மையத்தின் இயக்குனர் ஆவார்.இந்த ஆராய்ச்சிக் குழுவினர் தங்களது ஆராய்ச்சிக்காக 18 அடி ஆழ நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்கின்றனர். இந்தச் சிறு கப்பல் ஹான்ஷீ தீவை(பசிபிக் பெருங்கடலில் சுனாமி ஏற்படும் மையப்புள்ளியில் அமைந்துள்ளது) அடைந்த பின்பு, ஆழ்கடலினை படம் எடுக்கின்றது.


இந்த படங்களுடன், ஜப்பானில் சுனாமி ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன் ஒப்பிடுவர். இதன் பின்பு எதிர்காலத்தில் நில அதிர்ச்சி ஏற்படுவதை அறிந்து கொள்ளும் வகையில், ஏற்கெனவே தோண்டப்பட்ட ஆழ்துளைகளுக்குள் சில கருவிகளை வைக்கும் முயற்சிகளில் இந்த விஞ்ஞானிகள் ஈடுபடுவர்.ஜப்பானில் உள்ள கடல் மற்றும் பூமி அறிவியல் தொழில்நுட்ப மையத்தினைச் சேர்ந்த ஆய்வாளர் ஷீயிச்சி கொதாயிரா கூறுகையில், இன்றைய காலகட்டத்தில் நம்மிடம் இருக்கக் கூடிய தொழில்நுட்பத்தையும், கிடைக்கும் தகவல்களையும் வைத்துக் கொண்டு நிலநடுக்கத்தினை முன்கூட்டியே அறிவது மிக மிகக் கடினமான செயலாகும்.


ஆனால் இப்போது நாம் மேற்கொண்டுள்ள இந்த ஆழ் கடல் பயணத்தின் மூலம் கிடைக்கப் பெறும் தகவல்களைப் பயன்படுத்தி ஜப்பானில் ஏன் திரும்பத் திரும்ப பெரிய நில அதிர்ச்சிகள் ஏற்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடியும் என்றார்.ஜப்பானில் தற்போது மிகப்பெரிய அளவில் நில அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதால் விரைவில் பேரழிவை ஏற்படுத்த கூடிய இன்னொரு நில அதிர்ச்சி உண்டாகலாம் என்று விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF