Wednesday, March 7, 2012
ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் தீவிரம்: சமாதானப்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா!
ஈரானின் அணு சக்தி விவகாரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை, இஸ்ரேல் பிரதமர் பென்யமின் நெதென்யாஹு சந்தித்து பேசினார்.ஈரான் ரகசியமாக அணுகுண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா, இஸ்ரேல் உட்பட மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டு வருகின்றன.ஈரான் அணு குண்டு தயாரித்தால் அது தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று இஸ்ரேல் கருதுகிறது.
இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதான்யாஹூ அமெரிக்கா சென்றார். பெஞ்சமின் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது ஈரான் அணுசக்தி திட்டம், மத்திய கிழக்கு நாடுகள் பிரச்சினை ஆகியவை இடம் பெற்றதாக தெரிகிறது.மேலும் ஈரானின் அணு உலைகள் மீது இஸ்ரேல் முன்கூட்டியே தாக்குதல் தொடுப்பது பற்றியும் முக்கியமாக பேசப்பட்டதாக நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.இஸ்ரேல் பிரதமர் தெரிவிக்கையில், ஈரானின் நடவடிக்கைகள் ஏற்றுக் கொள்ள முடியாதது. எங்கள் நாட்டை பாதுகாக்க ஈரான் மீது முன்கூட்டியே தாக்குதல் நடத்த எங்களுக்கு உரிமை இருக்கிறது என்று வலியுறுத்தி கூறி இருக்கிறார். எந்த மிரட்டலையும் சந்திக்கவும், மக்களை பாதுகாக்கும் பொறுப்பும் பிரதமரான தனக்கு இருப்பதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.
இந்த சந்திப்பிற்கு முன்னதாக ஒபாமா கூறுகையில், ஈரான் அணு குண்டு தயாரிப்பதை தடுக்க சுமூகமான பேச்சுவார்த்தை, பொருளாதார தடைகள் உட்பட பல அம்சங்கள் விவாதத்தில் இருக்கின்றன என தெரிவித்தார்.மேலும் அவர் கூறுகையில், அமெரிக்காவை பொறுத்தவரையில் ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை தடுப்பதும், அவை தீவிரவாதிகளின் கைகளுக்கு சென்று விடக்கூடாது என்பதையும் கவனத்துடன் அணுகுவதாகவும் தெரிவித்தார்.இஸ்ரேலுடன் இராணுவம், புலனாய்வு துறை ஒத்துழைப்பு மட்டுமின்றி, அனைத்து நடவடிக்கைகளிலும் ஒத்துழைப்பு தொடரும் என்றும் ஒபாமா உறுதி அளித்தார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF