Saturday, March 3, 2012

அப்பென்டிக்ஸ் எம்மாதிரியான பாதிப்புகளை அது ஏற்படுத்தலாம்!


APPENDIX - இந்த உடல் உறுப்பு குறித்து ஏதோ ஒரு வகையில் நாம் நன்கு அறிந்திருக்கவே செய்வோம். இந்த பகுதியில் வரக்கூடிய வீக்கம் (Appendicitis) கொடுக்கக்கூடிய வலியை நாம் உணர்ந்தோ/கேள்விப்பட்டோ இருப்போம். இந்த பதிவானது, இந்த உறுப்பு குறித்த நவீன அறிவியல் தகவல்களை அலசுகின்றது. அதுமட்டுமல்லாமல், இந்த உறுப்பை அகற்றினால் நம்முடைய வாழ்க்கையில் எம்மாதிரியான பாதிப்புகளை அது ஏற்படுத்தலாம் என்பதையும் விளக்க முயற்சிக்கின்றது. 


சென்ற மாதம் "Scientific American" ஆய்விதழின் தளத்தில், அப்பென்டிக்ஸ் குறித்து வெளிவந்த ஒரு கட்டுரை என்னை வெகுவாக கவர்ந்தது. "அப்பென்டிக்ஸ் உங்கள் உயிரை காப்பாற்றலாம் (Your Appendix Could Save Your Life)" என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்த கட்டுரை, என்னுடைய கவனத்தை ஈர்த்ததற்கு பல காரணங்கள் உண்டு. அதில் முக்கிய காரணம் என்றால், இந்த உடல் உறுப்பு நீண்ட காலமாகவே உபயோகமற்ற அல்லது மிக குறைவான பயன்பாட்டை கொண்ட உறுப்பு என்பதாக கருதப்பட்டு வந்தது.


உடலின் எந்தவொரு பாகத்தையும் உபயோகமற்றதாக நான் கருதியதில்லை. பரிணாம கோட்பாட்டின் பல யூகங்கள் காலப்போக்கில் நிலைத்ததில்லை. அது போல, இந்த அப்பென்டிக்ஸ் குறித்த புரிதல்களும் ஒரு நாள் மாறும் என்பதாகவே என்னுடைய எண்ணம் இருந்தது.இம்மாதிரியான நேரத்தில், இந்த கட்டுரையை பார்க்க நேர்ந்ததால் ஒருவிதமான ஈர்ப்பு இயல்பாகவே வந்துவிட்டது தலைப்பை பார்த்தவுடன் நான் கேட்டுக்கொண்ட கேள்வி இது தான், உயிரையே இந்த உறுப்பு காப்பாற்றும் என்றால் இது எப்படி பயனற்ற ஒரு உறுப்பாக இருக்க முடியும்?டியுக் பல்கலைகழக மருத்துவ கழகத்தை (Duke University Medical Center) சேர்ந்த ஆய்வாளரான பில் பார்க்கர், அப்பென்டிக்ஸ் ஒரு உபயோகமற்ற உறுப்பு என்ற கருத்தை நிராகரித்தார். மேலும் இதுக்குறித்த ஒரு சுவாரசியமான யூகத்தை முன்வைத்தார். ஆதாயமுள்ள பாக்டீரியாக்களை (Beneficial bacteria) சேமித்து வைக்கும் ஒரு பெட்டகமாக அப்பென்டிக்ஸ் செயல்படுகின்றது என்ற யூகம் தான் அது. 

சற்றே தெளிவாக கூற வேண்டுமென்றால் இந்த உதாரணத்தை எடுத்துக் கொள்ளலாம். காலரா போன்ற நோய்கள் தாக்கும் போது, அவை குடல் பகுதியில் உள்ள ஆதாயமுள்ள பாக்டீரியாக்களை அழித்து/செயலிழக்க செய்து விடுகின்றன. இம்மாதிரியான சூழ்நிலையில், தான் சேமித்து வைத்துள்ள நல்ல பாக்டீரியாக்களை கொடுப்பதின் மூலம் குடல் பகுதி மறுபடியும் பழைய நிலைக்கு திரும்ப அப்பென்டிக்ஸ் உதவுகின்றது. 

இன்னும் சுருக்கமாக சொல்லுவேன்றால், நல்ல பாக்டீரியாக்களின் சரணாலயமாக அப்பென்டிக்ஸ் திகழ்கின்றது. அப்பென்டிக்ஸ் இருப்பவர்கள், அது இல்லாதவர்களை காட்டிலும், குடல் ரீதியான பாதிப்புகளில் இருந்து எளிதாக மீண்டு விடுகின்றனர். பார்க்கரின் இந்த ஐடியா நிச்சயம் புரட்சிகரமானது. சில ஆண்டுகளுக்கு முன்பாக, அரிசோனா பல்கலைகழகம் மற்றும் அரிசோனா மாநில பல்கலைகழக ஆய்வாளர்களுடன் சேர்ந்து இதுக்குறித்த ஆய்வை முன்னெடுத்து சென்றார்கள் டியுக் பல்கலைகழக ஆய்வாளர்கள். ஆய்வு கட்டுரைகளை சமர்பிக்கவும் செய்தார்கள். அப்பென்டிக்ஸ் குறித்த டார்வினின் எண்ணம் தவறு என்றும், இந்த உடல் உறுப்பு பயனற்றது இல்லை என்றும் தெரிவித்தார்கள். ஆனால் ஒரு தீர்மானமான முடிவிற்கு அனைத்து ஆய்வாளர்களாலும் வர முடியவில்லை. காரணம், இந்த ஐடியா இன்னும் தெளிவாக சோதிக்கப்பட வேண்டும். 
எப்படி சோதிப்பது? 


யார் முன்வருவார்கள், காலரா போன்ற நோய் கிருமிகளை தங்கள் உடலில் செலுத்திக்கொண்டு ஆய்வுக்கு உட்பட யார் தான் முன்வருவார்கள்? எலி போன்ற உயிரினங்களில் சோதிக்கலாம் என்றால் அவற்றிற்கு அப்பென்டிக்ஸ் கிடையாது.வேறு வழி?....  ஒரே ஒரு வழி தான் இருக்கின்றது. மனிதர்களில் தான் சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். குடல் ரீதியான நோய்களால் பாதிக்கப்பட்டோரை கணக்கிட வேண்டும். பின்னர் அவர்களை அப்பென்டிக்ஸ் உள்ளவர்கள், அப்பென்டிக்ஸ் அகற்றப்பட்டவர்கள் என்று இரண்டாக பிரிக்க வேண்டும். பின்னர் இவர்களை கண்காணிக்க வேண்டும். கேட்பதற்கு எளிதாக இருந்தாலும் இதுவும் செயல்முறை ரீதியாக கடினமான ஒன்றே.இம்மாதிரியான சூழ்நிலையில் தான், Clinical Gastroenterology and Hepatology என்ற ஆய்விதழில் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் அந்த பரவசமூட்டும் ஆய்வு முடிவுகள் வெளிவந்தன. பார்க்கரின் ஐடியா செயல்முறை ரீதியாக சோதிக்கப்பட்டு விட்டதாக தெரிய வந்தது. 
எப்படி? 


C.difficile எனப்படும் படுஆபத்தான நுண்ணுயிரியால் பாதிக்கப்பட்ட சுமார் 254 நோயாளிகளை கண்டெடுத்தனர். இவர்கள் அனைவரும் பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள். இவர்களை அப்பென்டிக்ஸ் உள்ளவர்கள், அகற்றப்பட்டவர்கள் என்று பிரித்துக்கொண்டார்கள். பிறகு கண்காணிக்க ஆரம்பித்தார்கள். இந்த நுண்ணுயிரிகள் இயல்பான நிலையில் குடல்களில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுடன் போட்டியிடாது. குடல்களில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் அழிய ஆரம்பித்துவிட்டால் இவை வேகமாக வளர/திரும்ப (recurrence) ஆரம்பித்துவிடும். பயிர்களுக்கு நடுவே இருக்கும் களை போன்றவை இவை. பார்க்கரின் யூகம் சரியென்றால், அப்பென்டிக்ஸ் இருப்பவர்களின் உடலில் இந்த நோய் கிருமிகள் திரும்பக்கூடாது. ஏனென்றால், குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் குறைந்தால், தான் சேமித்து வைத்துள்ள பாக்டீரியாக்களை அப்பென்டிக்ஸ் தரும். இந்த பாக்டீரியாக்கள் அந்த நுண்ணுயிரிகளை திரும்பவிடாமல் தடுக்கும். அதே நேரம், அப்பென்டிக்ஸ் அகற்றப்பட்டவர்களின் குடல்களில் இந்த நுண்ணுயிரிகள் திரும்ப வேண்டும். 
கண்காணிக்கப்பட்டு முடிவுகள் வெளிவந்தன. 
பார்க்கர் எதனை கணித்தாரோ அது தான் முடிவாக இருந்தது. ஆம், அப்பென்டிக்ஸ் அகற்றப்பட்ட 48% நோயாளிகளில் C.difficile நுண்ணுயிரிகள் திரும்பியிருந்தன. அதேநேரம், அப்பென்டிக்ஸ் உள்ளவர்களில் 11% பேரில் மட்டுமே இந்த நுண்ணுயிரிகள் திரும்பியிருந்தன. ஆக, அப்பென்டிக்ஸ் அகற்றப்பட்டவர்கள் இந்த நோய் கிருமியால் நான்கு மடங்கு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த முடிவுகள் நிச்சயம் பார்க்கரையும், அவரது சக ஆய்வாளர்களையும் ஊக்கப்படுத்தியிருக்கும். 


ஆனால், இங்கு கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விசயங்களும் இருக்கின்றன. அதாவது, இந்த சோதனை முடிவுகள் அப்பென்டிக்ஸ் குறித்த தெளிவை தருகின்றனவா என்ற கேள்விக்கு இன்னும் இல்லை என்பதே பதிலாக இருக்க முடியும். காரணம், அறிவியல் இப்படியாக வேலை செய்வதில்லை. ஒரு ஆய்வு முடிவை வைத்துக்கொண்டு நாம் எதையும் சொல்ல முடியாது. இன்னும் நிறைய ஆய்வுகள் இதில் செய்யப்பட்டாலே தெளிவான பார்வை கிடைக்கும். அதே நேரம், அப்பென்டிக்ஸ் நம் உடலில் மிகவும் பயனுள்ள உறுப்பு என்ற யூகத்தை இந்த ஆய்வு முடிவுகள் ஊக்கப்படுத்தியிருக்கின்றன. மேற்கொண்டு இந்த திசையில் பயணிக்க இந்த ஆய்வுகள் வழிவகை செய்திருக்கின்றன. சரி, அப்பென்டிக்ஸ் வீக்கத்தால் பாதிக்கப்பட்டால் என்ன செய்வது? இந்த வீக்கம் உண்டாக்கும் வலியை அதனை அனுபவித்தவர்களை கேட்டால் தெரியும். துடிதுடித்து போய் விடுவார்கள். காலங்காலமாக இதனை உபயோகமில்லாத உறுப்பு என்று அகற்றிக்கொண்டிருந்தார்கள் மருத்துவர்கள். 

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF