Saturday, March 10, 2012

புற்றுநோய் ஏற்படுவதன் எதிரொலி: தயாரிப்பு முறையை மாற்ற கொக்ககோலா நிறுவனம் முடிவு!


கொக்ககோலா நிறுவனத்தின் குளிர்பானங்களில் புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகள் இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து, அதன் தயாரிப்பு முறையை மாற்றி அமைக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது.பொதுவாக நாம் அன்றாடம் சுவைத்து பருகும் பல குடிபானங்களிலும், திண்பண்டங்களிலும் காணப்படும் ஒருவகை நிறக்கலவைப் பதார்த்தம் தான் 4மீ எனப்படும் 4மெத்யில் இமிடாசோல் என்ற இராசயனப் பொருள்.


எலிகளில் ஏற்படும் ஒருவகைப் புற்றுநோய்க்கும் இந்த இரசாயனப் பொருட்களுக்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அவை மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தியதற்கான சான்றுகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.ஆனால் பொதுவாக கார்சினோஜன் பொருட்கள், அதாவது புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய பொருட்கள் என சில இரசாயனப் பதார்த்தங்களை அமெரிக்காவின் கலிபோர்னியா அரசு பட்டியல்படுத்தியுள்ளது. அந்தப் பட்டியலில் தற்போது 4மெத்யில்இமிடாசோல்ஐயும் சேர்த்துள்ளது.


இதனால் இந்தப் பொருட்கள் காணப்படும் குடிபானங்கள் குறிப்பாக கொக்ககோலா மற்றும் பெப்சி போன்ற பானங்களும் புற்றுநோய் எச்சரிக்கை அறிவித்தலை தாங்கிவர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் இந்த அறிவித்தலை விஞ்ஞான ரீதியில் உறுதி செய்யப்படாதது என்று சுட்டிக்காட்டியிருக்கின்ற கொக்ககோலா நிறுவனம், அப்படியான எச்சரிக்கையை தாங்கி வருவதை தவிர்ப்பதற்காக அவற்றின் தயாரிப்பு முறையை மாற்றியமைக்குமாறு அதன் தொழிற்சாலைகளுக்கு அறிவித்துள்ளது.


இதேவேளை இந்த புற்றுநோய் சோதனையை மனிதரில் நிகழ்த்தி பார்ப்பதற்கு 1000 கான்களுக்கும் அதிகமாக கொக்ககோலா பருகியிருக்க வேண்டும் என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் கட்டுப்பாட்டு நிறுவனம் கூறியுள்ளது.இப்போதைக்கு கலிபோர்னியாவில் தமது தயாரிப்புகளில் மாற்றம் கொண்டு வந்திருப்பதாகக் கூறியிருக்கும் கொக்ககோலா மற்றும் பெப்சிகோ நிறுவனங்கள், அவற்றின் மற்ற ஆலைகளிலும் தயாரிப்பு முறையில் மாற்றம் வரும் என்று அறிவித்துள்ளன.இதேவேளை புதிய மாற்றத்தால் தமது தயாரிப்புகளின் சுவையில் எந்த வித்தியாசமும் இருக்காது என்றும் இந்த நிறுவனங்கள் கூறியுள்ளன.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF