இந்தோனேசியாவில் உள்ள "மெரபி' எரிமலை எந்நேரமும் வெடிக்கும் நிலையில் இருப்பதால், அம்மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள், அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தோனேசியாவின் ஜாவா தீவில், இரண்டாயிரத்து 914 மீ., உயரம் கொண்ட "மெரபி' எரிமலை உள்ளது. "மெரபி' என்பதற்கு இந்தோனேசிய மொழியில், "நெருப்பின் சிகரம்' என்று பொருள். ஜாவாவின் முக்கிய நகரமான யோக்யகர்த்தாவில் இருந்து 26 கி.மீ., தொலைவில் இந்த எரிமலை உள்ளது.
இந்தோனேசியாவில் உள்ள 69 எரிமலைகளில் இதுவும் ஒன்று.கடந்த 1930ல் இது வெடித்த போது, ஆயிரத்து 300 பேரும், 1994ல் 60 பேரும், 2006ல் இரண்டு பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக இதிலிருந்து புகை வெளிவரத் துவங்கியது.கடந்த ஒரு வாரத்தில் மட்டும், எரிமலையைச் சுற்றி 500 முறை நிலநடுக் கங்கள் ஏற்பட்டுள்ளன. எந்நேரமும் இந்த எரிமலை வெடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், மலையைச் சுற்றியுள்ள 10 கி.மீ., தூரம் ஆபத்தான பகுதியாக இந்தோனேசிய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் குடியிருக்கும் 19 ஆயிரம் பேர் உடனடியாக வெளியேற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என மூன்றாயிரம் பேர், அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.