Thursday, October 14, 2010

அயன் ராண்ட்

அயன் ராண்ட்


அய்ன் ராண்ட் (1905-1982) ரஷ்ய-அமெரிக்க எழுத்தாளர், மெய்யியலாளர். தி ஃபௌண்டன்ஹெட் (The Fountatinhead) அட்லாஸ் ஷரக்ட் (Atlas Shrugged) ஆகிய புதினங்களுக்காக இவர் அறியப்படுகிறார். அப் புதினங்களில் இவர் புறவயக்கோட்பாடு (Objectivism) என்ற மெய்யியல் பார்வையை உருவாக்கி வெளிப்படுத்தினார்.


ராண்டின் மாறுபட்ட ஒரு தத்துவ இயலாளராகத் திகழ்ந்தார். இவர் தனி மனித உரிமைகள், அரசியற்சட்ட ரீதியாகக் கட்டுப்பாட்டு கொண்ட அரசினால் அமலாக்கப்படுகிற தலையீடுகள் அற்ற தனியுடமை ஆகியவற்றின் ஆதரவாளராகவும், பொதுவுடமை, சமவுடமை, பொது நல அரசு ஆகியவற்றின் அனைத்து வடிவங்களையும் எதிர்ப்பவராகவும் விளங்கினார். இவர் அறிவை வளர்த்துக் கொள்ள காரணம் அறிதலே ஒரே தீர்வு என உரைத்தார். இவரது தத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடாக இதுவே அமைந்தது. ஒரு தனிப்பட்ட மனிதரின் முதற்கடமை தன்னைத் தானே காத்துக் கொள்வதே அன்றி சமுதாயக் கடன் அல்ல என்பதே இவரது தத்துவ இயலின் தளமாக இருந்தது.
ராண்ட் உருவாக்கிய பருப்பொருள்சார் இயல் என்னும் தத்துவத்தினை சுருக்கமாக இவ்வாறு கூறலாம்: “மனிதன் என்னும் போராளனுக்குத் தனது மகிழ்ச்சி ஒன்றே அவனது வாழ்வின் ஒழுக்க நோக்கமாகும். ஆக்கபூர்வமான சாதனையே அவனது மிகச் சிறந்த நடவடிக்கை மற்றும் அவனது பகுத்தறிவே வரம்பற்ற ஒரே நிலை.
பகுத்தறிவிற்கு எதிரானது என நம்பிக்கையின் அடிப்படையிலானவற்றை ராண்ட் மறுதளித்தார். பகுத்தறிவின் அடிப்படையில் அமைந்த சுய-நோக்கமே வாழ்வின் ஒழுக்கத்திற்கு வழிகாட்டும் ஒரே கோட்பாடாக இருக்க இயலும் என்பதே இவரது வாதமாக இருந்தது. மனிதன் என்பவன் “அவனுக்காகவே வாழ வேண்டும்; மற்றவர்களுக்காக தன்னைத் தியாகம் செய்வதோ அல்லது தனக்காக மற்றவர்களைத் தியாகம் செய்வதோ பகுத்தறிவுடமை அல்ல” என்பதே இவரது கோட்பாடு.
பொதுவாகத் தத்துவம் என்பது அன்றாட வாழ்க்கை வழமைகளுக்கு அப்பாற்பட்டதாகவும், சிந்தனையாளர்களின் தனிச் சிறப்பாகவுமே கருதப்படுவதை ராண்ட் மறுதளித்தார்.
தத்துவ அறிவு என்பதையே வாழ்வின் ஆதார சக்தியாகவும் யதார்த்த நிலையை அறியும் கருவியாகவும் அவர் கருதினார்.
மனித சிந்தனை மற்றும் செயல்களின் மீதான அடிப்படைக் கேள்விகளை தத்துவ இயல் முன்னிறுத்துகிறது: என்ன மாதிரி உலகில் நான் வாழ்கிறேன்? என் விதியின் மீதான கட்டுப்பாட்டை நான் கொண்டுள்ளேனா? அதை நான் எப்படி அறிவேன்? என்னால் அதை நிரூபிக்க இயலுமா? நல்லது என்பது என்ன? நான் சுயநலமாக இருந்து என் தேவைகளை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டுமா அல்லது இறைவன் மற்றும் இதர மனிதர்களுக்குத் தொண்டு செய்வதில் என் வாழ்வை அர்ப்பணிக்க வேண்டுமா?
இந்தக் கேள்விகளிலிருந்து தப்பியோட இயலாதென ராண்ட் கருதினார். சரியோ அல்லது தவறோ ஒரு தனக்கே உரியதான கருத்தாக்கம் இன்றி உலகில் ஒருவரால் வாழ இயலாது. இக்கேள்விகளுக்கு ஒருவர் கொள்ளும் பதிலே அவரது வாழ்க்கையைத் தீர்மானிப்பதாக அமைகிறது.
ராண்டின் புறவயத் தத்துவ இயல் கீழ்க்காணும் நான்கு கோட்பாடுகளைப் பெரிதும் சார்ந்துள்ளது:
  • 1. நிதர்சனம் என்பது வரம்பற்ற புறப் பொருள், அதாவது ஒருவரின் விருப்பு, வெறுப்பு, நம்பிக்கைகள், அச்சங்கள் ஆகியவற்றிற்குத் தொடர்பற்றதாக இவை மெய்ம்மைகளாகவே உள்ளது.
  • 2. மனிதன் தனக்கு அளிக்கப்பட்டிருக்கும் பருப்பொருட்களை ஒருங்கிணைக்கப் பயன்படுத்தும் பகுத்தறிவே அவன் இவ்வாறான நிதர்சனத்தை உணர்வதற்கான ஒரே வழி. அவன் தனது வாழ்வின் மிக உயர்ந்ததான ஒழுக்க நோக்கம் தனது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வது மற்றும் தனது மகிழ்ச்சிக்கான பாதையைத் தெரிவு செய்வதே வாழ்வின் பிழைப்புத் திறனை முடிவு செய்கிறது.
  • 3. மனிதன் என்பவன் தன்னிலேயே முற்றிலும் முழுமையானவன்; பிறருக்கு தொண்டு செய்யப் பிறந்தவன் அல்லன்.
  • 4. ஆதர்சமான அரசியல் பொருளாதார வரைச்சட்டம் தலையீடுகள் அற்ற தனியுடமையாகும். இதில் மனிதர்கள் ஒருவருடன் ஒருவர் முதலாளி அதற்கெதிராக அடிமைகள் என்ற நிலையினில் அன்றி வர்த்தகர்கள், அதாவது பரஸ்பர நன்மைக்காக சுதந்திரமான மற்றும் தன்னார்வமான பரிவர்த்தனைகளில் ஈடுபடுபவர்கள் ஆவர். அரசு என்பது காவல் துறையினைப் போலக் கண்காணித்து தனி மனித உரிமைகளைக் காப்பதாக அமைய வேண்டும். எந்த ஒரு மனிதரும் பிறருக்கு எதிராக உடல் அல்லது உளம் சார்ந்த வன்முறையினை மேற்கொள்ளலாகாது.
ராணுவ பயிற்சிபள்ளியில் பட்டம்பெறும் மாணவர்களுக்கு அயன்ராண்ட் ஆற்றிய உரை - மார்ச் 6,1974
நான் ஒரு கதாசிரியர் என்பதால் ஒரு கதையிலிருந்தே என்னுரையை தொடங்குகிறேன்.
நீங்கள் ஒரு விண்கலவீரர் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் விண்கல ஓடம் கட்டுப்பாட்டை இழந்து தெரியாத ஏதோ ஒரு கோளில் விழுந்து நொறுங்குகிறது. சுயநினைவு திரும்பும் போது உங்களுக்கு அவ்வளவு கடுமையான காயமெதுவும் படவில்லையென அறிகிறீர்கள். அப்போது உங்கள் மனதில் எழும் முதல் மூன்று கேள்விகள் இவையாக இருக்கும்.
1. நான் எங்கே இருக்கிறேன்?
2. இதை நான் எப்படி கண்டுபிடிப்பது?
3. நான் என்ன செய்ய வேண்டும்?

வெளியே, அறியப்படாத பயிர்கள் செழித்து வளர்ந்திருப்பதை பார்க்கிறீர்கள். சுவாசிக்க காற்றும் உள்ளது. சூரியஒளி உங்கள் ஞாபகத்தில் உள்ளதைவிட மங்கலாகவும் குளிர்ச்சியாகவும் இருப்பது போலுள்ளது. வானத்தை பார்க்க எத்தனிக்கிறீர்கள். ஆனால் பார்க்காமல் திரும்பிக்கொள்கிறீர்கள்.
சட்டென்று தோன்றிய ஒர் எண்ணத்தால் தாக்கப்படுகிறீர்கள் - வானத்தை பார்க்காமல் இருந்தால் பூமியை விட்டு வெகு தூரத்தில் இருக்கிறீர்கள் என்றோ, திரும்பிச்செல்ல இயலாதென்றோ அறியாமல் இருந்துவிடலாம். இது தெரியாமல் இருக்கும் வரை உங்கள் இஷ்டம் போல எப்படி வேண்டுமானாலும் கற்பனை செய்துக்கொள்ளலாம். பனிமூட்டமான, இனிமையான அதே சமயம் ஒரு குற்றவுணர்வும் கொண்டதுமான ஒரு வகையான நம்பிக்கையை அனுபவிக்கிறீர்கள்.
பார்வையை உங்களிடம் உள்ள பொருட்களின் பக்கம் திருப்புகிறீர்கள். அவையெல்லாம் சேதப்பட்டிருக்கலாம். எவ்வளவு தூரம் சேதப்பட்டிருக்கிறது என்று நீங்கள் அறிந்திருக்கவில்லை. சட்டென்று தோன்றிய பயத்தால் பார்ப்பதை நிறுத்திவிடுகிறீர்கள். இப்பொருட்களை நம்பி எப்படி பயன்படுத்துவது? இக்கருவிகள் கோளாராகாது என்று எப்படி நிச்சயப்படுத்திக்கொள்வது? இக்கருவிகள் வேற்று உலகத்தில் சரியாக வேலை செய்யுமா? உடனே பொருட்களிலிருந்தும் பார்வையை அகற்றி விடுகிறீர்கள்.
ஏன் எதைச்செய்யவும் இப்போது ஆர்வமில்லை என்று ஆச்சிரியப்படுகிறீர்கள். எதாவது எப்படியாவது தானாக நிகழ்வதற்கு காத்திருப்பதே பாதுகாப்பானது எனத்தோன்றுகிறது. விண்கல ஓடத்தை அசைக்காமல் இப்படியே இருப்பதுதான் நல்லதென எண்ணுகிறீர்கள். வெகுதொலைவில் உயிருள்ள ஒருவகையான ஜீவராசிகள் உங்களை நோக்கிவருவதை பார்க்கிறீர்கள். அவர்கள் மனிதர்களா எனத்தெரியவில்லை, ஆனால் இரண்டு கால்களுடன் நடந்து வருகிறார்கள். நிச்சயம் அவர்கள் உங்களிடம் வந்து நீங்கள் என்ன செய்யவேண்டுமென்று சொல்லுவார்களென தீர்மானிக்கிறீர்கள்.

இதை கற்பனை என்கிறீர்களா? நீங்கள் இதை போல் செயல்பட மாட்டீர்களா? எந்த விண்கலவீரரும் இதைபோல என்றுமே செயல் படமாட்டார்களா? உண்மைதான். ஆனால் இங்கே இப்புவியில் இவ்வகையில் தான் பெரும்பாலான மனிதர்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இம்மூன்று கேள்விகளிலிருந்து தப்பிக்கும் போராட்டத்திலேயே பெரும்பாலான மனிதர்கள் தங்கள் நாட்களை கழிக்கிறார்கள்.
1. நான் எங்கே இருக்கிறேன்?
2. அதை நான் எப்படி அறிவது?
3. நான் என்ன செய்யவேண்டும்?

மனிதனின் எல்லா எண்ணங்களும், உணர்வுகளும், செயல்களும் அவன் தெளிவாக அறிந்திருப்பினும் இல்லையெனினும் இக்கேள்விக்கான பதில்களில்தான் அவையனைத்தும் அடங்கியிருக்கிறது.
இக்கேள்விகளை புரிந்துக்கொள்ளும் முதிர்ச்சியை அடையும் தருணத்தில் அதற்கான பதில்களையும் அறிந்திருப்பதாக மனிதர்கள் நம்புகிறார்கள்.
1. நான் எங்கே இருக்கிறேன்? - இந்நகரத்தில்
2. அதை நான் எப்படி அறிவது - கண்கூடாக தெரிகிறதே
3. நான் என்ன செய்ய வேண்டும்? - இங்கே தான் நிச்சயமற்றுப்போகிறார்கள். ஆனால் பொதுவான பதில் என்னவென்றால் ‘எதை எல்லோரும் செய்கிறார்களோ அதையே’

பிரச்சனை என்னவென்றால் அவர்கள் சுறுசுறுப்பாக இல்லை, திடமான நம்பிக்கையோடில்லை, சந்தோஷமாக இல்லை, சில சமயங்களில் விலகவோ விட்டுத்தொலைக்கவோ முடியாத காரணமற்ற பயத்தையும் விவரிக்கமுடியாத குற்ற உணர்வையும் அனுபவிக்கிறார்கள்.
கஷ்டங்கள் அனைத்தும், பதிலளிக்கப்படாத இம்மூன்று கேள்விகளில் இருந்து தொடங்குகிறதென்ற உண்மையை அவர்கள் எப்போதும் கண்டுணரவில்லை. ஒரே ஒரு அறிதல்முறை மட்டுமே அவர்களுக்கு பதிலை தரமுடியும்
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF