Monday, October 4, 2010

இலங்கையரை பணிக்கமர்த்துவதைத் தடை செய்ய சவூதி அரேபியா தீர்மானம்


இலங்கைப் பணியாளர்களை பணிக்கமர்த்துவதைத் தடைச் செய்ய சவூதி அரேபியா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அந்நாட்டுப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சவூதி அரேபிய வர்த்தமானியில் இது குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்கள் புதிதாக எந்த ஒரு இலங்கையரையும் வேலைக்கமர்த்தும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடக் கூடாது என அரபு இராச்சியத்தின் வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அரபு இராச்சியத்தின் இலங்கைத் தொழிலாளர் ஒன்றியம், இலங்கைத் தொழில் அலுவலகம் என்பவற்றுக்கு இடையில் நிலவும் முரண்பாடு காரணமாக இந்நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் சவூதி அரேபியாவில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய ஆரியவதி என்ற இலங்கைப் பெண் வீட்டு எஜமானியினால் கொடுமைப்படுத்தப்பட்டு உடம்பில் ஆணி ஏற்றப்பட்டு சித்திரவதைகளுக்குள்ளாகிய நிலையில் நாட்டிற்கு திரும்பி மருத்துவமனையில் சத்திர சிகிச்சை மூலம் அந்த ஆணிகள் அகற்றப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
இவ்விடயம் தொடர்பாக சவூதி அரேபிய அரசாங்கம் தமது நாட்டு எஜமானியின் குற்றத்தை ஒப்புக்கொள்ளாமல் வேறு ஏதோ காரணங்களைக் கூறி அதிலிருந்து தப்பிக்க முனைந்தது.
ஆயினும் இச்சம்பவமே சவூதி அரேபியா மேற்குறிப்பிட்ட தீர்மானத்தை எடுப்பதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF