உலகில் பட்டினியை ஒழித்த நாடுகள் பட்டியலில் இலங்கை 39 இடத்தை வகிக்கின்றது. 2010 ஆம் ஆண்டுக்கான "உலக பட்டினி குறியீட்டெண் பட்டியல்" கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்டது. |
இதில் ஆபிரிக்க நாடுகளில் பட்டினி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.100 கோடி பேர் பட்டினியால் தவிக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பட்டினி ஒழிப்பில் உலக அளவில் தெற்காசியாவும் தென்னமெரிக்காவும் பெரும் முனைப்புக் காட்டுவதாக இந்த அறிக்கை கூறுகிறது. குறிப்பாக மலேசியா இதில் மெச்சத்தக்க அளவில் பல முயற்சிகளை எடுத்து பட்டினியைக் குறைத்துள்ளதாகவும் இன்று கிட்டத்தட்ட பட்டினியற்ற தேசமாகவே மலேசியா மாறியிருப்பதாகவும் இந்த மதிப்பீடு தெரிவிக்கிறது. இந்த பட்டியலின்படி பட்டினியை முற்றாக ஒழித்த நாடு என்ற பெருமையைப் பெறுகிறது குவைத். இதற்கு அடுத்த இடம் மலேசியாவுக்கு கிடைத்துள்ளது. 84 நாடுகளைக் கொண்ட இந்த பட்டியலில் சீனாவுக்கு 9 ஆவது இடம் கிடைத்துள்ளது.பட்டினி ஒழிப்பில் இலங்கை 39 ஆவது இடத்தையும் நேபாளம்,பாகிஸ்தான் 57 ஆவது இடத்தையும் பெற்றுள்ளன. இந்தியாவோ 67 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. உலக வல்லரசுகளில் ஒன்றாகப் பார்க்கப்படும் இந்தியாவில் பட்டினி ஒழிப்புக்கான திட்டங்களை ஏட்டளவில் வகுப்பதோடு நிறுத்திக் கொள்வதுதான் இந்த நிலைக்குக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது.இங்கே பயன்படுத்தப்படும் உணவு தானியங்கள் பயன்படுத்தப்படுவதைவிட வீணாக்கப்படுவதே அதிகம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் விளைவு உலகின் எடை குறைந்த நோஞ்சான் குழந்தைகளின் எண்ணிக்கையில் 42 சதவீதம் இந்தியாவில் இருப்பதாக அந்த மதிப்பீடு தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு இந்தப்பட்டியலில் இந்தியா 65 ஆவது இடத்திலிருந்தது.இந்த ஆண்டு 67 ஆவது இடத்துக்கு நழுவியிருக்கிறது. |