சவூதி அரேபியாவில் பணியாற்றி வரும் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கைப் பணியாளர்களின் தொழில்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிக் கட்சி அறிவித்துள்ளது. |
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தி பணியாளர்களின் தொழில்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. சவூதி தொழில் வாய்ப்பு பிணக்கு தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்தும் அமைதியைப் பேணி வந்தால் இலங்கைப் பணியாளர்கள் தொழில் வாய்ப்புக்களை இழக்க நேரிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் வருடாந்தம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையில் நட்டம் ஏற்படலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சவூதி அரேபியாவில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கைப் பணியாளர்கள் கடமையாற்றி வருவதாகவும், வருடாந்தம் ஐம்பதாயிரம் பணியாளர்கள் புதிதாக வேலை வாய்ப்புபப் பெற்றுச் செல்வதாகவும் தெரிவித்துள்ளார். அல்பியா மற்றும் சனாரீட் ஆகிய முக்கிய தொழில் முகவர் நிறுவனங்களுடன் அரசாங்கம் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கை உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படாத காரணத்தினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. |