உலகின் அதிநவீன, சொகுசு விமானம் என்று அழைக்கப்படும் இந்த விமானம் அடுத்த சில நாட்களில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் இந்த கனவுலக விமானத் திட்டம் குறித்து போயிங் நிறுவனம் அறிவித்தது. ஆனால், இந்த புதுமையான விமானம் திட்டமிட்டபடி வெளிவரவில்லை. அதிக விலையும், குறைவான ஆர்டருமே இதற்கு முக்கிய காரணமாக இருந்தது. மேலும், தொழிலாளர்கள் வேலை நிறுத்தம், மூலப் பொருட்கள் பற்றாக்குறை, அதிக எடை, இறக்கைகளை பொருத்துவதில் ஏற்பட்ட தொழில் நுட்ப சிக்கல் போன்றவைகளும் 'டிரீம்லைனர்’ விமானம் தாமதமானதற்கு காரணங்கள் ஆகும்.
இத்தனை தடைகளையும் தாண்டி, சமீபத்தில் இந்த விமானம் வெள்ளோட்டம் விடப்பட்டது. முதற்கட்டமாக, பத்திரிகையாளர்கள் இந்த வெள்ளோட்டத்தின் போது விமானத்தில் பயணித்தனர். “டிரீம்லைனர்’ விமானம் பல்வேறு சிறப்புகளை கொண்டது. உயரம் அதிகம் கொண்ட கேபின், அமர்ந்திருப்பதே தெரியாத அளவிற்கு மெத்தை போன்ற இருக்கைகள், கண்களைக் கவரும் பல வண்ண விளக்குகள், மிக குறைந்த எரிபொருள் செலவு, நிறைந்த திறனும், குறைந்த சத்தமும் கொண்ட இன்ஜின்கள், பயணிகள் விண்ணைப் பார்த்து ரசிப்பதற்காக நீண்ட ஜன்னல்கள் என பல சிறப்புகள் இந்த விமானத்தில் உண்டு.
இந்த விமானம், சிட்னியில் இருந்து சிகாகோ வரையில் தரையிறங்காமல், தொடர்ந்து பறக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஏர்பஸ் நிறுவனம் ஏ 380 என்ற உலகின் மிகப் பெரிய விமானத்தை அறிமுகப்படுத்தியது. இந்த விமானத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து ஆர்டர்கள் குவிகின்றன. இந்நிலையில், ஏ 380 ரக விமானத்திற்கு போட்டியாக போயிங் நிறுவனம் 'டிரீம்லைனர்’ விமானத்தை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. ஏ 380 விமானத்தில் 500க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ய முடியும். இதனால், நீண்ட தூர விமான சேவையில் ஏர்பஸ் ஏ 380 விமானங்கள் வரவேற்பைப் பெற்றுள்ளன. ஆனால் 'டிரீம்லைனர்’ விமானத்தில் 290 பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும். இருப்பினும் இரு நகரங்களுக்கு இடையிலான, சொகுசு பயணத்திற்கு 'டிரீம்லைனர்’ விமானம் ஏற்றதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. எப்படியோ மிக நீண்ட தாமதத்திற்குப் பின், உலகின் கனவுலக விமானம் என்று கருதப்படும் 'டிரீம்லைனர்’ விமானம் அறிமுகப்படுத்தப்பட்டு பயணிகள் சேவைக்காக வெளி வந்துள்ளது.