Tuesday, April 10, 2012

வளைகுடாவில் நான்காவது மகிழ்ச்சிகரமான நாடாக கட்டார்!


வளைகுடாவில் நான்காவது மகிழ்ச்சிகரமான நாடாக கட்டார் தரப்படுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளினால் வெளியிடப்பட்டுள்ள முதலாவது உலக மகிழ்ச்சிகர அறிக்கையின் மூலம் இது தெரியவந்துள்ளது.
மகிழ்ச்சிகரமான நாடுகளுக்கான உலகப் பட்டியலில் பெயரிடப்பட்டுள்ள 156 நாடுகளில் கட்டார் 31ஆவது இடத்தை வகிக்கின்றது. ஐக்கிய அரபு இராச்சியம்(UAE) 17ஆம் இடத்தை வகிப்பதுடன் சவூதி அரேபியாவும் குவைத்தும் முறையே 26ஆம், 29ஆம் இடங்களில் உள்ளன. 


இந்தப் பட்டியலில் டென்மார்க், பின்லாந்து, நோர்வே ஆகிய ஸ்கண்டிநேவிய நாடுகளும் நெதர்லாந்து, கனடா ஆகிய நாடுகளும் முன்னிலை வகிக்கின்றன.டோகோ, பெனின், மத்திய ஆபிரிக்க குடியரசு, சியாரா லியொன் ஆகிய நாடுகள் மகிழ்ச்சி குன்றிய நாடுகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. இந்த அறிக்கையின் பிரகாரம் மத்திய கிழக்கில் யெமன், பலஸ்தீனம் ஆகிய நாடுகளே மகிழ்ச்சி குன்றிய நாடுகளாக இனங்காணப்பட்டுள்ளன. நாடுகளின் ஒட்டுமொத்த செல்வம் மற்றும் மக்களின் மனோநிலை, சமூக உறவுகள், சுகாதார நலன் என்பன தரப்படுத்தலின்போது கவனத்தில் கொள்ளப்பட்டன. 


மகிழ்ச்சி தொடர்பான ஐ.நா.வின் மாநாட்டில் பொதுச் சபையினால் பரிந்துரைக்கப்பட்டதற்கமைய இவ்வறிக்கை புவி மன்றத்தினால் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கையானது உலகம் முழுவதும் மகிழ்ச்சியைத் தோற்றுவிப்பதையும் துன்பத்தை துடைத்தெறிவதையும் அரசாங்கங்களின் கொள்கைப் பிரகடனங்களாகக் கொள்ள வேண்டும் என்ற ஓர் உன்னத விடயத்தைப் பிரதிபலிக்கின்றது.இன்றைய உலகில் மகிழ்ச்சியின் நிலை குறித்து அவ்வறிக்கை தெளிவுபடுத்துவதுடன் மகிழ்வுறும்போது தனிப்பட்டவர்களும் தேசத்தவர்களும் எவ்வாறு மாறுபடுகின்றார்கள் என்பதை மகிழ்ச்சி தொடர்பான விஞ்ஞான சாஸ்திரம் விளக்குகின்றது என்பதையும் எடுத்துக்காட்டுகின்றது.


செல்வம் கொழிக்கும் நாடுகளே மகிழ்ச்சிகரமான நாடுகளாகத் திகழ்வதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. தொழில்வாய்ப்பின்மை துயரத்திற்குக் காரணமாக அமைவதுடன் அபகரிப்பு மற்றும் பிரிவினை போன்றவற்றுக்கும் தூண்டுதலாக அமைவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.ஒழுக்கசீலர்களாக இருப்பது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதுடன் எந்தவொரு நாட்டிலும் மகிழ்ச்சி பொங்குவதற்கு சிறந்த மனோநிலையே மிகப் பெரிய தனிக் காரணியாக அமைவதாகவும் அவ்வாய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.


பெற்றோரும் பிள்ளைகளும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு உறுதியான குடும்ப வாழ்க்கையும் நிலைத்திருக்கும் திருமணங்களும் மிக முக்கியம் என்பது இவ்வறிக்கை மூலம் கண்டறியப்பட்டுள்ளது.வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஆண்களை விட பெண்களே மகிழ்ச்சி மிக்கவர்களாகக் காணப்படுகின்றனர். வறிய நாடுகளில் மகிழ்ச்சியும் துயரமும் கலந்திருப்பதுடன் மத்திய வயதினரிடையே மகிழ்ச்சி மிகக் குறைவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.













பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF