Saturday, April 14, 2012

பசிபிக் கடலில் நீர் மட்டம் உயர்கிறது: அதிர்ச்சித் தகவல்!

பசிபிக் பெருங்கடலின் தென் மேற்குப் பகுதியில் கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் அவுஸ்திரேலியாவின் தெற்குப் பகுதியும், அதையொட்டிய நாடுகளும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என குவின்ஸ்லாந்து பல்கலைகழகம் கேட்டுக் கொண்டுள்ளது.19-வது நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இப்பகுதியில் கடலில் நீர்மட்ட அளவு உயர்வது பிற இடங்களைவிட வேகமாக இருக்கிறது.


உலக அளவில் கடல் நீர்மட்டம் 1880ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 1.5 மில்லி மீட்டர் அளவு தான் உயர்ந்து இருந்தது. ஆனால் டாஸ்மேனியா நகருக்கு அருகில் நடத்திய கணக்கெடுப்போ 1900 முதல் 1950-ம் ஆண்டுக்குள் இப்பகுதியில் ஆண்டுக்கு 4.2 மில்லி மீட்டர் அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்திருப்பதாகக் காட்டுகிறது.டாஸ்மேனியா அருகில் கடல் நீர்மட்டம் தொடர்ந்து 6,000 ஆண்டுகளாக ஒரே அளவில் நிலையாக இருந்திருக்கிறது. ஆனால் 1880ம் ஆண்டுக்குப் பிறகுதான் நீர்மட்டம் வேகமாக உயரத் தொடங்கியிருக்கிறது.


புவியின் வெப்ப சராசரி உயர்ந்து பனிப் பிரதேசங்களில் பனிமலைகள் உருகத் தொடங்கியதை அடுத்து கடல் நீர்மட்டம் பசிபிக்கில் உயரத் தொடங்கியது. இதன் வேகம் அதிகமாக இருக்கிறது.துருவப் பிரதேசங்களில் மிகப்பெரிய பனிப்பாறைகள் உடைந்து உருகத் தொடங்கியிருப்பதை நேரிலேயே பார்க்க முடிவதால் நீர்மட்டம் உயர எது காரணம் என்பதில் சந்தேகம் இல்லை.


ஆனால் புவி வெப்பமடைவது இதே அளவு தொடர்ந்தால் அது பருவநிலைகளை மட்டும் அல்லாமல் கடல் நீர்மட்டங்களையும் பாதிக்கச் செய்யும் என்பதை ஆய்வு தெரிவிக்கிறது.இப்போது பருவநிலைகளில் ஏற்பட்டுள்ள மாறுதல்களுக்குக் காரணம் மனிதர்கள் தான் என்பதால் இந்த எச்சரிக்கை அரசுகளுக்கும் மக்களுக்கும் விடப்பட்ட எச்சரிக்கையாகவே கருதப்பட வேண்டும்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF