Friday, April 27, 2012

அமெரிக்காவில் மரண பீதியை ஏற்படுத்தும் மயான அமைதி அறை!


உலகிலேயே மிகமிக அமைதியான அறை அமெரிக்காவில் உள்ளது. இந்த அறையில் உட்கார்ந்தால் இதயம், நுரையீரல், இரைப்பை இயங்கும் சத்தம் கூட கேட்கும்.இந்த அறையில் முக்கால் மணி நேரத்துக்கு மேல் யாரும் உட்கார்ந்தது இல்லை. தியேட்டர்கள், பெரிய அரங்கங்கள், இசை நிகழ்ச்சிக் கூடங்கள் ஆகியவற்றில் இரைச்சல், எதிரொலி ஆகியவற்றை தடுக்கும் வகையில் பிரத்யேக வசதிகள் செய்யப்படும்.


அரங்கத்தின் சுவர், தரை, கூரை ஆகியவற்றில் ஒலியை உள்வாங்கக்கூடிய பொருட்கள் பொருத்தப்படும். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமெரிக்காவின் மின்னசோட்டா மாநில தலைநகர் மின்னபாலிஸ் நகரில் உள்ள ஆர்பீல்டு ஆய்வுக்கூடத்தில் ‘மயான அமைதி’ அறை உருவாக்கப்பட்டுள்ளது.‘அன்எக்கோயிக் சேம்பர்’ என்பது இதன் பெயர். ஸ்டீல், கான்கிரீட் என இரண்டு அடுக்கு சுவர்களை கொண்டு இந்த சவுண்ட் புரூப் அறை அமைக்கப்பட்டுள்ளது.


99.99 சதவீதம் எதிரொலி தடுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட உலகின் மிகமிக அமைதியான இடம் என்று கடந்த 2004ம் ஆண்டில் கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது இந்த அறை.பசங்க சத்தம் தாங்க முடியல. கொஞ்ச நேரம் போய் உக்கார்ந்து விட்டு வரலாம் என்ற எண்ணத்தில் இந்த அறையில் அமர முடியாது. காரணம், அங்கு நிலவும் மயான அமைதி மரண பீதியை ஏற்படுத்தும் என்கிறார் ஆர்பீல்டு ஆய்வுக்கூட நிறுவனர் ஸ்டீவன்.இதுபற்றி அவர் கூறுகையில், விண்வெளிக்கு செல்பவர்கள் துளிக்கூட சத்தம் இல்லாத இடத்தில் வெகு நேரம் இருந்து தங்களை தயார்படுத்திக் கொண்டால் தான் பயமின்றி விண்வெளிக்கு செல்ல முடியும். அதற்கு பயிற்சி அளிக்கும் நோக்கில் இந்த அறை அமைக்கப்பட்டது.மேலும், உலகப்புகழ் பெற்ற ஹர்லி டேவிட்சன் நிறுவனம் குறைந்த சத்தம் கொண்ட பைக்குகள் தயாரிக்கவும் இந்த அறையை பயன்படுத்திக் கொள்கிறது. சிறிதுகூட சத்தம், எதிரொலி கேட்காது என்பதால் அமைதியாக இருக்கும் என்று நினைக்கலாம்.


ஆனால், அந்த அமைதி மிகவும் பீதி தருவதாக இருக்கும். அன்எக்கோயிக் சேம்பர் மயான அமைதியுடன் இருப்பதால் இதயத்தின் லப்டப் சத்தம், நுரையீரலின் சுவாச சத்தம், இரைப்பையின் செரித்தல் சத்தம் கூட தெள்ளத் தெளிவாக நமக்கு கேட்கும்.நேரம் ஆகஆக ரத்த ஓட்டம் கூட பெரும் இரைச்சல் போல கேட்கும். மனதில் குழப்பங்கள் ஏற்படும். நடக்காதது எல்லாம் நடப்பது போல தோன்றும். அன்எக்கோயிக் சேம்பரில் ஒருவர் அதிகபட்சம் முக்கால் மணி நேரம் உட்கார்ந்தது தான் சாதனையாக உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் அதிக நேரம் உட்கார்ந்திருப்பது ஆபத்து என்று ஸ்டீவன் கூறினார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF