Friday, May 7, 2010

எரிமலை, பூகம்பத்தை எழுப்பிடும் பூமியின் உட்கருப் பூத அணு உலை !

"பூமியின் மையத்து வரை ஒரு துளையைத் தோண்டிச் சென்றால் நாம் எதைக் காண்போம் ? உட்கருவின் நடுவில் இயற்கை அணு உலையாய் இயங்கும் 5 மைல் விட்டமுள்ள யுரேனியக் கோளம் ஒன்றிருப்பதாய் அழுத்தமாக உடன்பட வைக்கும் ஓர் ஆதாரம் உள்ளது. அதை நான் 'புவி அணு உலை' (Geo-Reactor) என்று குறிப்பிடுகிறேன்."


"பிரபஞ்சம், பூகோளம் ஆகியவற்றின் மெய்யான இயற்கை அமைப்பைக் கண்டுபிடிப்பதும், அந்த அறிவை எல்லோரிடமும் மக்களிடம் பங்கிட்டுக் கொள்வதுமே விஞ்ஞானத்தின் குறிக்கோள். அந்தப் பணியைத்தான் நான் செய்து வருகிறேன்."

மர்வின் ஹெர்ன்டன் Ph.D., (Marvin Herndon, President Transdyne Corpn, San Diego, California)

"ஐஸ்லாந்தின் எரிசாம்பல் முகில் (Plume) விஞ்ஞானத்துக்குக் கிடைத்த ஓர் இயற்கைக் கொடை (Boon to Science)."

பிரையன் ஹான்ட்வெர்க் (Brian Handwerk, National Geographic News)
பூகோளத்தின் மையத்தில் இயங்கும் வேகப் பெருக்கி அணு உலை !


உலக நாகரீகக் குடிமக்களுக்குப் பெருந்தீங்கு விளைவிப்பது பூமியின் உட்கரு வெப்ப மீறலே தவிர மெதுவாக மாறிவரும் சூழ்வெளிப் பருவ நிலை மாற்றங்கள் அல்ல ! கலிலியோ பூமி நகர்கிறது என்று கண்டுபிடித்தார். காப்பர்னிக்கஸ் பூமி பரிதியைச் சுற்றி வருகிறது என்று கண்டுபிடித்தார். டெஸ்மார்க்கின் வெளியீட்டில் கவரப்பட்ட டாம் சாக்கோ (Tom Chalko, inspired by Desmarquet's Report) நமது பூமிக் கோளின் திண்ணிய உட்கரு உண்மையில் ஓர் அணு உலை என்று 2000 இல் கண்டுபிடித்தார். அந்த அணுக்கரு உலை மையத் திரிவில் (Eccentric) அமைந்துள்ளது. இயங்கியும் இடையிடையே நிறுத்தம் அடைந்து வரும் மைய அணு உலையே நில நடுக்கங்களை உண்டாக்கியும், எரிமலைகளை எழுப்பியும் வருகிறது !
பூமியின் துருவப் பனிப்பாறை முகப்புகள் உருகிப் போவதற்குக் காரணம் பூஜிய டிகிரி செல்ஸியஸ் உஷ்ணத்துக்கு மேல் சூடேறும் காற்றெனக் கருதக் கூடாது ! பனிப்பாறையைச் சூடாக்கி உருக்குவது பூமியின் உட்கருவிலிருந்து வெளியாகும் வெப்பமே (Overheating of the Earth's Core) ! எரிமலைகள் மீண்டும் பீறிட்டெழுவதும், நில நடுக்கம் திடீரெனத் தகர்ப்பதும் சூடேறிய பூமியின் மைய அணுப்பிளவு உலை குளிர்ந்து போகத் தேவைப் படுவதால் தவிர உட்கரு 'படிமச் சுருக்கம்' அடைவதால் (Crystallization) அல்ல ! இயங்கும் எந்த அணு உலையும் வெப்ப மீறலில் (Danger of Over-heating) சிதைவடையக் கூடாது !

ஆர்டிக், அண்டார்க்டிக் துருவப் பனிக்குன்றுகளில் பெருமளவுப் பகுதிகள் ஏற்கனவே இளகி உருகி நீராகிக் கடல் உயரத்தை மிகையாக்கி விட்டன ! 2000 - 2003 ஆண்டுகளுக் கிடையில் அண்டார்க்டிக் பனிக்குன்றுகளின் உருகுதல் 8 மடங்கு அதிகரித்துள்ளது ! பனிக்குன்றுகள் நழுவிக் கடலில் மூழ்கும் போது சுனாமியைத் தூண்டுவதோடு கடற்கரைப் பகுதிகளைக் கடல் வெள்ளம் நிரப்புகிறது ! எரிமலைகள் கண்விழித்து ஆர்டிக் கடலடியிலும் அண்டார்க்டிக் ஆழத்திலும் எழும்புகின்றன ! அண்டார்க்டிக்கைச் சுற்றியிருக்கும் கடலில் 5 கி.மீ. (3 மைல்) ஆழத்தில் உள்ள நீர் திணிவு குன்றி உப்பளவு குறைந்து (Less Dense & Less Salty) அண்டார்க்டிக்கின் அடித்தளம் உருகிப் போகிறது என்பதை உறுதிப் படுத்துகிறது ! தூயப் புதுநீர் உப்புக் கடல்நீரை விட திணிவு குறைந்து மிதக்க வேண்டுமல்லவா ? அதாவது அண்டார்க்டிக்கின் மேற்தளம் உருகாமல் பேரளவில் அடித்தளக் குன்றுகள் இளகி நீராகுகின்றன !

பூகம்பத் தகர்ப்பாற்றலும் எண்ணிக்கையும் மிகையாகி வருகின்றன !


நில நடுக்கத்தின் எண்ணிக்கை, தீவிரம், வலுவாற்றல் யாவும் ஏறிக் கொண்டே போகின்றன. 1973 இல் அமெரிக்கப் பூதளவியல் ஆய்வு நோக்ககம் (USGS -US Geological Survey) 7.0 ரிக்டர் அளவுக்கு மீறிய பூகம்பங்களின் தகர்ப்பாற்றல் 6 மடங்கு அதிகரித்து உள்ளதாக வெளியிட்டிருக்கிறது. மெல்ல மெல்ல கால நிலை உஷ்ணம் ஏறும் போது ஒரு டிகிரிக்குக் குன்றிய தசமத்தில் கூடினாலும் நிலநடுக்கங்கள் 5 மடங்கு பெருகிய ஆற்றலில் தகர்க்கின்றன ! நாசா விஞ்ஞானிகள் பூமியானது தான் எதிரனுப்ப முடிவதைப் போல் பரிதியிலிருந்து பெறும் சக்தியை மிகையாக (0.85 MegaWatt per Sq km) உறிஞ்சிக் கொள்கிறது. சூழ்வெளி மாசுக்கள் பெருகி வருகின்றன. சூரியக் கதிர்வீச்சு இயக்கங்கள் பரிதித் தேமல்களால் (Sun Spots) 2012 ஆண்டு வரை மிகையாகி வரும். 2000 -2003 இந்த மூன்று ஆண்டுகளில் ஏன் அண்டார்க்டிக் அடித்தளப் பனிக் குன்றுகளின் உருகல் 8 மடங்கு அதிகரித்திருக்கிறது ! அப்போது பரிதியின் வெப்ப வீச்சு அண்டார்க்டிக் பகுதியில் எட்டு மடங்கு மிகையாகப் பொழிய வில்லை ! பூகோளச் சூடேற்றமும் அந்த அளவுக்கு ஏறவும் இல்லை. அதற்குக் காரணம் பூமியின் உட்கரு அணுப்பிளவு இயக்கம் பெருகி வெப்பசக்தி உள்ளிருந்து மேலெழுந்துள்ளதையே தெள்ளத் தெளியக் காட்டியுள்ளது.

பூகோளச் சூடேற்றம் அண்டார்க்டிக் சூழ்கடற் பகுதி ஆழத்தில் உள்ள உப்பு சிறுத்த தணிவு குறைந்த நீர் சேமிப்புக்குக் காரணமாக இருக்க முடியாது ! புவிமையத்தில் இயங்கி வரும் அணுக்கரு உலை வெப்பம் மீறி எழுந்து அப்படிச் செய்ய முடியும் என்று ஒப்புக் கொள்ளலாம். அதாவது புவி மையத்தின் அணு உலைக் கனல் எழுச்சியைத் தணிக்க, "வெப்பத் தணிப்பியாக" (Heatsink) அண்டார்க்டிக் பனிக் கண்டம் ஒன்று மட்டும்தான் உதவ முடிகிறது !
பூமி மையத்தில் உள்ள பூத அணுக்கருப் பிளவு உலை


ஆதிகாலப் பிள்ளைப் பூமியானது பரிதியிலிருந்து பிரிந்து இரும்புக் கோளமான ஓர் நீர் அண்டம். சூடான திரவக் குழம்பில் பரிதியை மூலத் தட்டு வடைபோல் (Primordial Disc) சுற்றித் திரண்ட ஓர் உருண்டைக் கோளமே நமது பூர்வ பூமி ! திணிவு மிக்க உலோகங்கள் (Densest Metals) ஈர்ப்பாற்றலால் கீழாகப் படியவும், நிறை மெலிந்த கனிமங்கள் மேலே மிதக்கவும் பூமியில் நிலை பெற்றன. யுரேனியம், தோரியம் போன்ற உலோகங்கள் மிகத் திணிவு பெற்றவை. உதாரணமாக யுரேனியத்தி திணிவு (Density) : 19 கிராம் /கியூபிக் செ.மீ. (19 gram per cubic cm). யுரேனியம் ஈயத்தை விட 1.6 மடங்கு திணிவு உள்ளது. தோரியத்தின் திணிவு : 11.7 கிராம் /கியூபிக் செ.மீ. புளுடோனியத்தின் திணிவு : 19.7 கிராம் /கியூபிக் செ.மீ. இம்மூன்று கன உலோகங்களும் மற்ற கன உலோகங்களோடு பூமியின் மையக் கருவில் படிந்திருக்கலாம் என்று அழுத்தமாக ஊகிக்கப் படுகின்றன.

தானாக நியூட்ரான்கள் தாக்கும் போது அணுப்பிளவில் அணுசக்தி உண்டாக்கும் மூன்று கன உலோகங்கள் : யுரேனியம் -235, யுரேனியம் -233, புளுடோனியம் -239. யுரேனியம் 238 நியூட்ரான் சேரும் போது புளுடோனியம் -239 ஆக மாறுகிறது. அதுபோல் தோரியம் -232 நியூட்ரான் சேரும் போது யுரேனியம் -233 ஆக மாறுகிறது.
யுரேனியம் -235, யுரேனியம் -233, புளுடோனியம் -239 மூன்றும் சுயமாக நியூட்ரான்களை வெளியேற்றி அந்தக் கன உலோகங்களைப் பிளந்து அணுசக்தியை உண்டாக்குகின்றன. பெரும்பான்மையாகப் பூமியில் கிடக்கும் யுரேனியம் -238 இல் சிறிதளவு யுரேனியம் -235 உள்ளது. ஆகவே முதலில் நிகழும் யுரேனியம் நியூட்ரான் சேர்க்கையில் சக்தி உண்டாவதுடன் மூன்று நியூட்ரான்கள் பிறக்கின்றன. அணுப்பிளவு விளைவுகளில் இரண்டு பாதி சிறு நிறை தனிமங்கள் காணப்படும். சிறு நிறை தனிமங்கள் மேலே மிதக்கும்.

வேக நியூட்ரான்கள் யுரேனியம் -238 உலோகத்தைச் சக்தி உண்டாக்கும் புளுடோனியம் -239 உலோகத்தைத் தோற்றுவிக்கும். மேலும் வேக நியூட்ரான்கள் தோரியம் -232 உலோகத்தைச் சக்தி உண்டாக்கும் யுரேனியம் -233 உலோகத்தைத் தோற்றுவிக்கும். இம்மாதிரி தொடர்ந்து வேகப் பெருக்கி அணு உலைகள் போல் (Fast Breeder Reactor) தொடர்ந்து அணுசக்தியும், எரிசக்தி எருவும் பூமியின் மையத்தில் நிகழ்ந்து வருகின்றன. அப்படி இயங்கும் அணுப்பிளவு அணு உலைகளில் எச்சக் கனிமங்கள் உண்டாகித் தானாக அணு உலை நிறுத்தம் அடையும். நிறை சிறுத்த எச்சப் பொருட்கள் கனற் குழம்பில் மேலே ஏறி மிதக்க மறுபடியும் அணு உலை இயங்க ஆரம்பிக்கிறது. இத்தகைய வேகப் பெருக்கி அணு உலைதான் பூமியின் மையத்தில் தொடர்ந்து இயங்கியும் இடையிடையே நிறுத்தம் அடைந்தும் பிரம்மாண்டமான வெப்ப சக்தியை உற்பத்தி செய்து வருகிறது என்று 1993 ஆம் ஆண்டில் டாக்டர் மர்வின் ஹெர்ன்டன் புதியதோர் பூமி உட்கரு நியதியை அறிவித்தார் !

விஞ்ஞானி மர்வின் ஹெர்ன்டான் அறிவித்த புவி அணு உலை (Georeactor)


பூமியில் அணுவியல் ஆற்றல் பெறும் யுரேனியம், தோரியம் இருப்பு பல இடங்களில் காணப் பட்டுள்ளது. வானியல் விஞ்ஞானி டாக்டர் மர்வின் ஹெர்ன்டான் முதல் அணுப்பிளவுத் தொடரியக்கம் செய்து காட்டிய இத்தாலிய விஞ்ஞானி என்ரிகோ ·பெர்மியைப் பின்பற்றி பூமிக்குள்ளே மாபெரும் ஓர் இயற்கை அணுப்பிளவு உலை (Natural Nuclear Fission Geo-Reactor) சில சமயம் இயங்கியும் சில சமயம் நிறுத்தம் அடைந்தும் வருகிறது என்னும் புதியதோர் கோட்பாட்டை வெளியிட்டார். அந்த அணுப்பிளவு உலை வேக நியூட்ரான்கள் யுரேனியத்தைத் தாக்கி சக்தியும், அணு எரு ஈனுகின்ற ஒரு வேகப் பெருக்கி (Fast Breeder Reactor) அணுசக்தி உலை.


அதற்கு ஹைடிரஜன் போன்ற மிதவாக்கி (Moderator) தேவையில்லை. மற்ற மின்சக்தி நிலையங்கள் போலின்றி, புவி அணு உலை தானாக இயங்கும். தானாக நிறுத்தம் அடையும். அதன் வெப்ப சக்தி ஆற்றல் கூடிக் குறையும் சுயக் கட்டுப்பாடும் கெண்டது. இயக்கத்தில் விளைந்து சேமிப்பாகும் அணுப்பிளவுக் கழிவுகள் நியூட்ரான்களை விழுங்கி அணு உலை நிறுத்தம் அடையும். நிறை குன்றிய அணுவியல் கழிவுகள் கனற் குழம்பில் மேலேறி மிதக்கும். பிறகு அணு உலை இயங்கத் துவங்கும் ! இந்தக் கோட்பாடை மர்வின் ஹெர்ன்டான் 1993 இல் முதன்முதல் வெள்யிட்டார்.

இந்த அணுப்பிளவு சக்தியே பூகோளக் காந்த சக்திக்கு (Geomagnetism) மூலமாக இருக்கக் கூடும் என்பதும் அறியப் படுகிறது. செவ்வாய்க் கோளின் உட்கரு அணு உலை இயக்கம் நிரந்தராக நிறுத்தம் அடைந்து அதன் காந்த சக்தி இழக்கப் பட்டது ! செவ்வாய்க் கோளின் அணு உலை செத்து விட்டதால் செவ்வாயின் காந்த சக்தி, ஈர்ப்பாற்றல் மறந்து போய் அதன் சூழ்வெளி வாயு மண்டலம் நிரந்தரமாய் இழக்கப் பட்டு நீர்வளம் எல்லாம் வரண்டு விட்டது. ஆனால் செவ்வாயின் உட்கரு இன்னும் சூடாக இருப்பதால் அதில் இயங்கிய எரிமலை பரிதி மண்டலத்தின் மிகப் பெரிய எரிமலையாக கருதப் படுகிறது.

4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய நமது பூமி தன் உட்கருவில் அணுவியல் எருக்களான யுரேனியம் -235, யுரேனியம் -238, அணுப்பிளவு இயக்கத்தால் உண்டான புளுடோனியம் -239 ஆகியவற்றைப் பயன்படுத்தும் சுமார் 5 மைல் (10 கி.மீ.) விட்டமுள்ள வேகப் பெருக்கி அணு உலைக் கோளத்தைக் கொண்டுள்ளது. அது வெளியாக்கும் வெப்ப சக்தி 4 டெட்ரா வாட்ஸ் (1000 பில்லியன் வாட்ஸ், 1 மில்லியன் மெகாவாட்ஸ்) ( 4 terawatts (4X10^12 watts) என்று கணினி மாடல் மூலம் அறியப் படுகிறது. இப்பேரளவு வெப்ப சக்தி தொடர்ந்து வெளியேறாது விட்டு விட்டு, அங்குமிங்கும் எழுவதால் எரிமலையும், பூகம்பமும் உலக நாடுகளில் தலைதூக்கி குடிமக்களுக்கு இன்னல் கொடுத்து வருகின்றன !
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF