குழந்தைகள் சூதுவாது அறியாதவை. நல்லது கெட்டது தெரியாமல் பல தவறுகளை செய்துவிடும். உதாரணமாக நெருப்பு சுடும் என்று அறியாமல் தீபத்தின் அருகே நெருங்கிச் செல்வதை குறிப்பிடலாம்.
ஆனால் குழந்தைகளுக்கு நல்லது எது? கெட்டது எது? என்று பகுத்தறியும் பண்பு 6 மாதத்திலேயே வந்துவிடுகிறது என்று புதிய ஆய்வு கூறுகிறது.
6 மாதம் முதல் 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டது. யேல் பல்கலைக்கழகம் இந்த ஆய்வை நடத்தியது. ஆய்வின்போது 6 மாத குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொம்மைகள் கொடுத்து கண்காணிக்கப்பட்டது. பொம்மையில் நல்லவிதமான, வாசனையுள்ள பொம்மைகள் கொடுக்கப்பட்டன. சில முறை அச்சுறுத்தும் பொம்மை மற்றும் துர்நாற்றமுடைய பொம்மைகள் வழங்கப்பட்டன.
அப்போது குழந்தைகள் நல்லபொம்மை எது என்று எளிதாக அடையாளம் கண்டுகொள்வது தெளிவானது. கெட்ட பொம்மையைப் பார்த்ததும் முகத்தை திருப்பிக் கொள்வது, வேறெங்கோ பார்ப்பது, சிலவேளைகளில் இவற்றையெல்லாம் மீறி தலையால் பொம்மையை மோதி தள்ளிவிடுவது போன்ற செயல்களிலும் 6 மாதம் முதல் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஈடுபட்டன.
2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பொம்மைக் காட்சிகளைக் காட்டி ஆய்வு செய்யப்பட்டது. அப்போது எந்தப் பொம்மை தங்களுக்கு உதவி செய்கிறது, எது தனது செயலுக்கு தடையை ஏற்படுத்தி தீமை செய்கிறது என்று நன்றாக தெரிந்து கொண்டன. கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் தீய பொம்மைகளை தாக்கவும் குழந்தைகள் தவறவில்லை.
இந்த ஆய்வில் இருந்து குழந்தைகளுக்கு சீக்கிரமாகவே நன்மை, தீமையை அறியும் பண்பு வந்துவிடுவது தெளிவானது!
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF