Wednesday, May 16, 2012

அப்பிளின் அதிரடி வியூகம்!


சந்தையில் அதிகமாக விற்பனையாகும் அண்ட்ரோய்ட் டெப்லட்களின் ஆதிக்கத்தை முறியடிக்கும் பொருட்டு புதிய வியூகமொன்றை அப்பிள் வகுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.அதாவது குறைந்த விலையில் ஐ பேட் டெப்லட்டினை அப்பிள் தயாரிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


'ஐபேட் மினி' என இது பெயரிடப்படலாம் எனவும் இதன் விலை சுமார் 250 அமெரிக்கடொலர்களாக இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.ஐ பேட் கொண்டுள்ள 'ரெடினா' வகை திரையே ' ஐபேட் மினி' யும் கொண்டிருக்குமெனவும் அதன் அளவு 7.8 அங்குலமாக இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.குறைந்த விலையில் 'ஐபேட் மினி' டெப்லட்களை தயாரிப்பதனால் அப்பிள் நட்டத்தினை சந்திக்கும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.


எனினும் அப்பிளிடம் தற்போது சுமார் 100 பில்லியன் அமெரிக்க டொலர்கள் காசுக் கையிருப்பு உள்ளது.எனவே அக்கையிருப்பில் ஒரு தொகை இதில் முதலிடப்படலாம் எனத்தெரிகின்றது.அப்பிள் தான் நட்டமடைந்தாலும் அதனைக்கூட பொருட்படுத்தாமல் அண்ட்ரோய்டின் ஆதிக்கத்தினை முறியடிக்கும் முயற்சியில் இறங்கவுள்ளதாகத் தெரிகின்றது.


'ஐபேட் மினி' எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.ஏற்கனவே இதனை அப்பிள் தயாரித்து வைத்துள்ளதாகவும்,சந்தைக்கு அறிமுகப்படுத்துவது மட்டுமே எஞ்சியுள்ளதாகவும் வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும் குறைந்த விலையில் சிறிய ரக ' ஐபேட்' இனைத்தயாரிக்கும் யோசனையை அப்பிள் நிறுவனத்தின் மறைந்த ஸ்தாபகர் ஸ்டீவ் ஜொப்ஸ் கடுமையாக எதிர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF