Sunday, June 20, 2010

Delta IV உந்துகணை

உந்துகணைகளும் அவற்றின் பயன்பாடுகளும் பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தப்படும் தேவைகளுக்கேற்ப காணப்படுகின்றன. இன்றைய விண்வெளிப் பயணங்கள் அனைத்தும் உந்துகணைகளின் உதவியுடனேயே மேற்கொள்ளப்படுகின்றன.
விண்வெளிப் பயணங்களிலும் குறிப்பிட்டதொரு விண்வெளிப் பயணத்தின் தேவையினைப் பொறுத்து அத்தேவைக்குப் பொருத்தமான உந்துகணை பயன்படுத்தப்படுகின்றது.
இவ்வாறு விண்வெளிக்குச் செயற்கைக் கோள்களை ஏவுவதற்குப் பயன்படுத்தப்படும் உந்துகளை வகையைச் சார்ந்ததே இந்த DeltaIV உந்துகணையாகும். இந்த Delta IV ஏவுகணையானது காவிச்செல்லும் நிறை மற்றும் காவிச்செல்லும் உயரம் என்பவற்றிற்கேற்ப மேலதிக உந்துசக்தியைப் பெறுவதற்கான மேலதிக உந்துகணை ஊக்கிகளை (additional rocket boosters) பொருத்திப் பயன்படுத்தவல்லதாகக் காணப்படுகின்றது. இதன் காரணமாக இந்த உந்துகணை விரிவுபடுத்தவல்ல ஏவு தொகுதி (expandable launch system) என்றழைக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் மிகப்பெரிய விமான உற்பத்தி நிறுவனமான போயிங் நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட இந்த உந்துகணை, அமெரிக்க வான்படையினால் பாதுகாப்பு மற்றும் பிற காரணங்களுக்கான செயற்கைக் கோள்களை சுற்றுப்பாதையில் ஏவுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றது. இந்த உந்துகணைகள் ஐந்து வெவ்வேறு வடிவங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அமெரிக்கப் பாதுகாப்புப் படைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யத்தக்க வகையிலேயே இவ்வுந்துகணைகள் உற்பத்தி செய்யப்பட்டன. 63 மீற்றர் தொடக்கம் 72 மீற்றர் வரையான உயரங்களில் காணப்படும் இவ்வுந்துகணை, 5 மீற்றர் விட்டத்திலும் 249500 – 733400 கிலோகிராம் நிறையுடையதாகவும் காணப்படுவதுடன், இரண்டு தொகுதிகளால் ஆனதாகவும் காணப்படுகின்றது.
Delta IV உந்துகணை ஒன்று பல்வேறு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் முதலாவது தொகுதியே பிரதான தொடக்கநிலை உந்துகணை இயந்திரத்தைக் (rocket engine) கொண்டுள்ளது. உந்துகணையின் வடிவத்திற்கேற்ப இவ்வுந்துகணையின் முதலாவது தொகுதி RS-68 உந்துகணை இயந்திரத்தைக் கொண்டிருக்கும். பொதுவாக உந்துகணைகளின் முதலாவது தொகுதி இயந்திரங்கள் திண்ம எரிபொருள் (solid fuel) இல்லது மண்ணெய் (kerosene) பயன்படுத்தியே இயக்கப்படும். ஆனால் இந்த Delta IV உந்துகணை முதலாவது தொகுதி இயந்திரத்திற்கு திரவ ஐதரசன் மற்றும் திரவ ஒட்சிசன் கலவையையே எரிபொருளாகப் பயன்படுத்துகின்றது.
அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்ட உந்துகணை இயந்திரங்களில் மிகவும் பெரியது, இந்த Delta IV உந்துகணையின் முதலாவது தொகுதியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் RS-68 உந்துகணை இயந்திரமேயாகும். இவ்வுந்துகணை இயந்திரத் தயாரிப்பின் பிரதான நோக்கம் குறைந்த செலவில் அதிக வலுவைப் பெறவல்லதாக இவ்வியந்திரத்தை உருவாக்குவதே. இவ்வுந்துகணையின் இரண்டாவது தொகுதி RL-10B2 உந்துகணை இயந்திரத்தைக் கொண்டுள்ளது.
இந்த Delta IV இன் சிறிய வடிவத்தில் RS-68 வகை இயந்திரம் முதல் சில நிமிடங்களுக்கு 102% உந்துவிசையை உந்துகணைக்கு வழங்குகின்றது. முதல் நிலை இயந்திரத்தின் உந்துவிசை 58% ஆகக் குறைவடைந்து இதன் இயக்கம் செயலிழந்ததும், முதல்நிலைத் தொகுதி உந்துகணையிலிருந்து பிரிந்துவிட, அடுத்தநிலை இயந்திரம் தொடர்ந்து உந்துகணையை உந்திச்செல்லும். அதேபோன்று இவ்வுந்துகணையின் கனரக வடிவத்தில் முதற்தொகுதியின் இயந்திரம் முதல் 50 செக்கன்களுக்கு 120% உந்துசக்கியை உந்துகணைக்கு வழங்கி 50 செக்கன்களின் முடிவில் உந்துவிசை 58% ஆகக் குறைவடைந்து இயந்திரம் செயலிழக்கின்றது. இயந்திரங்களின் இந்தச் செயற்பாடுகள் யாவும் வழிநடத்தற் தொகுதியிலிருந்து (guidance system) கிடைக்கும் கட்டளைகளுக்கேற்ப இடம்பெறுகின்றன.
Delta IV உந்துகணையில் பயன்படுத்தப்படும், L3 Communication நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட, வழிநடத்தற் தொகுதியானது, சுழல்காட்டி (gyroscope) மற்றும் முடுக்கமானி (accelerometer) ஆகியவற்றின் துணையுடன் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தின் கட்டளைகளையும் உள்வாங்கி மிகவும் மிகவும் துல்லியமாக உந்துகணையினை வழிநடாத்திச் செல்கின்றது.
இந்த உந்துகணையானது தேவைக்கேற்ப பல்வேறு வகையான சுமைகளைக் (payload) காவிச்செல்லவல்லது. இதன் சுமையேற்றும் பகுதியானது வெவ்வேறு வகையான சுமைகளை ஏற்றக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், சுமைகளின் தன்மைக்கேற்ப, சுமையேற்றும் பகுதியையும் மாற்றக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது பயன்பாட்டிலிருக்கும் உந்துகணைகளிலேயே, இந்த Delta IV உந்துகணையே மிகவும் உயரம் கூடிய உந்துகணையாகும். விண்வெளிப் பயணத்துறையினுள் இந்த Delta IV உந்துகணை அறிமுகப்படுத்தப்பட்டபொழுது, விண்ணுக்கு செய்மதிகள் மற்றும் பிற பொருட்களை அனுப்புவதற்குத் தேவையான உந்துகணைகள் போதுமானளவிற்குப் பயன்பாட்டில் இருந்தன. அதீத திறனுடன் இந்த உந்துகணை அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், இதனை ஒருதடவை ஏவுவதற்கு ஆகும் செலவு, வர்த்தக நிறுவனங்களுக்குக் கட்டுபடியற்றதாக இருந்தது. இதன் காரணமாக வர்த்தக நோக்கில் இந்த உந்துகணை எதிர்பார்த்தளவு வெற்றியளிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். இருப்பினும் அமெரிக்க அரசு இந்த உந்துகணையினை தேவைக்கேற்ப பயன்படுத்தியே வருகின்றது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF