Wednesday, June 23, 2010

விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு!

இப்போது விண்வெளிக்குச் செல்லும் விண்வெளி வீரர்கள் ஒன்றாகத்தான் தங்க வேண்டும். ஒரு விண்வெளி வீரர் தனிமை விரும்பியாக இருந்தாலும் அவர் தனியே தங்க வாய்ப்பிருக்காது. அதற்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்கவிருக்கிறது, அமெரிக்கா லாஸ் வேகாஸில் உள்ள `பிகெலோவ் விண்வெளி இருப்பிட கட்டுமானத் தொழிற்சாலை’.
இத்தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டுள்ள எதிர்காலத்துக்கான மாதிரி விண்வெளி இருப்பிடங்கள் பெரிய தர்ப்பூசணியைப் போலக் காட்சியளிக்கின்றன. இவற்றின் உள்ளே சென்றாலே ஒரு வசதியான வசிப்பிடத்துக்கான அனைத்து வசதிகளையும் காண முடிகிறது.
“எங்கள் தொழிற்சாலைக்கு வந்து இவற்றைப் பார்க்கும் ஒவ்வொரு விண்வெளி வீரரும் பெரிதும் வியந்து போகின்றனர். இந்த அளவுக்கு ஓர் இருப்பிடத்தை உருவாக்க முடியும் என்று அவர்களால் நம்பவே முடியவில்லை” என்று இந்தத் தொழிற்சாலையின் நிறுவனரான ராபர்ட் பிகெலோவ் தெரிவிக்கிறார்.
இன்னும் நான்காண்டு காலத்தில் இந்த விண்வெளி வசிப்பிடங்கள் விண் வெளிக்குச் செல்லப் போகின்றன. அப்போது இவை முதல் விண்வெளி `தனி வசிப்பிடங்களாக’ இருக்கும்.
`பேயிங் கஸ்டமர்களுக்கான’ இருப்பிடங்கள் அதற்கடுத்து ஓராண்டுக்குப் பின் ஏற்படுத்தப்படும். விண்வெளி நிலையம் அமைக்கும் நிபுணத்துவமோ, பொருளாதார வசதியோ இல்லாத நாடுகள் அந்தக் குடியிருப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளும். எல்லாவற்றுக்கும் மேலாக, 2016-ம் ஆண்டில் ஒரு பெரிய விண்வெளிக் குடியிருப்பு அமைக்கப்படும். அப்போது அங்கு ஒரே நேரத்தில் 36 விண்வெளி வீரர்கள் வசிக்க முடியும். அது, தற்போதைய சர்வதேச விண்வெளி நிலையத்தில் வசிக்கும் விண்வெளி வீரர்களைப் போல ஆறு மடங்கு அதிகம்.
2017-ம் ஆண்டில் 15 முதல் 20 ராக்கெட் ஏவுதலுக்குக் கட்டணம் செலுத்தியுள்ளது `பிகெலோவ்’ நிறுவனம். அதற்குப் பின் ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராக்கெட் ஏவுதலைப் பயன்படுத்திக்கொள்ளும். அதன்மூலம் வர்த்தக ரீதியாக விண்வெளிக்கு ஆட்களைக் கொண்டு செல்ல முடியும் என்று நம்பப்படுகிறது. தனியாரின் இந்த முயற்சிக்கு அமெரிக்க அரசும் ஆதரவு அளிக்கிறது.
விண்வெளிக்கு ஆட்களைக் கொண்டு செல்லும் திறன் கொண்ட விண்கலங்களை உருவாக்குவதற்கு மேலும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவனங்களுக்கு உதவுவதற்காக 2011-ம் ஆண்டில் 600 கோடி டாலர்கள் என்ற பெருந்தொகையை முதலீடு செய்யவுள்ளது ஒபாமா அரசு.
தனியார் நிறுவனங்களின் வர்த்தக ரீதியான விண்வெளி முயற்சிகள் வெற்றி பெற்றால், பணம் செலுத்தும் எவரும் விண்வெளிக்குப் பயணம் செய்து அங்கு குறிப்பிட்ட நாட்களுக்குத் தங்கலாம்.
`பிகெலோவ்’ நிறுவனத்தின் விண்வெளி வசிப்பிடத்துக்குப் பூமியிலிருந்து செல்லவும், அங்கு 30 நாட்களுக்குத் தங்கவும் தற்போது ஏறக்குறைய 112 கோடி ரூபாய் கட்டணமாக விதிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இது அதிகமாகத் தெரிந்தாலும், ரஷியாவின் `சோயுஸ்’ விண்கலத்தின் மூலம் தனது வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்ப `நாசா’ செலுத்தும் கட்டணத்துடன் ஒப்பிடும்போது குறைவுதான்.
`சூடான்சர்’ என்ற பெயர் கொண்ட, 6,400 கனஅடி பரப்புக் கொண்ட விண்வெளி இருப்பிடத்தை முதலில் விண்வெளிக்கு அனுப்ப `பிகெலோவ்’ திட்டமிட்டுள்ளது. அதன்பிறகு 11,700 கனஅடி பரப்புக் கொண்ட இரண்டாவது `சூடான்சர்’ விண்வெளிக்கு அனுப்பப்படும்.
விண்வெளி இருப்பிடங்கள் நிறுவப்பட்டதும், தாங்களால் உணவு, நீர், காற்று விநியோகத்தை மேற்கொள்ள முடியும், திடீரென ஏற்படும் பிரச்சினைகளைச் சமாளிக்க முடியும் என்று `பிகெலோவ்’ நிரூபித்துக் காட்டும். இந்நிறுவனம் தற்போது கூறும் விஷயங்கள் எல்லாம் ஏற்படுத்தப்பட்டால், எதிர்கால விண்வெளி வசிப்பிடத்துக்கும், பூமியில் உள்ள ஓட்டல்களுக்கும் பெரிதாக வித்தியாசம் இருக்காது என்று கூறப்படுகிறது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF