Sunday, March 21, 2010

கனவுகள் Dreams

கனவுகள் என்றால் என்ன?


                                           What Is The Dreams ?
1. நாம் அசந்திருக்கும்போது நமது மூளை மிகக்குறைந்த அளவில் வேலை செய்யும் நேரங்களில் படக்காட்சிகள் போல நிகழ்வதுதான் கனவுகள் என்பது. அந்த நேரங்களில் வேறெந்த வெளித் தூண்டுதல்களும் மனதிற்குள் நுழைவதில்லை.

ஆமாம். நாம் தூங்கும்போது மட்டும் கனவு காண்பதில்லை. நம்மை மறந்து ஓய்வு நிலையில் விழிப்புடன் இருக்கும்போதுகூட ஏதோ காட்சிகள் நம் முன் விரிகின்றன. திடீரென ஏதோ கனவு கண்டோமே என்று திடுக்கிட்டு விழிக்கிறோம்.

இந்த மாதிரி ஓய்வாக இருக்கும்போது கனவு காண்பவர்கள் விழிப்புடன்தான் இருக்கிறார்கள் என்று கூறுகின்றன ஆராய்ச்சிகள். இந்த நிகழ்வுகள் தூங்கும்போதுதான் கனவுகள் வரும் என்ற தவறான முடிவைத் தகர்க்கின்றன.

2. கனவு என்பது நாம் அனுபவிப்பது, உணர்வது. கனவில் நடப்பவைகள் அப்போது உண்மையாகவே நிகழ்வதைப் போலத் தோன்றுகின்றன. அப்போது நாம் நமது புலன்களைப் பயன்படுத்துகிறோம், பார்க்கிறோம், கேட்கிறோம்.

கனவுகளில் எப்போதுமே நாம் தான் கதாநாயகனாக இருப்போம். நமக்கு அல்லது நம்மைச் சுற்றிய நிகழ்வுகளைத் தான் பெரும்பாலும் கனவு காண்கிறோம். பல சமயங்களில் நமது உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாது திடுக்கிட்டு விழிக்கிறோம். அருகிலிருப்பவர்கள், 'என்னாயிற்று உனக்கு?'என்று கேட்குமளவுக்கு உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறோம்

3. கனவு என்பது நம் அடுத்தநாள் நினைவில் நிற்பது. எனவே இதனைக் கனவு அனுபவத்தின் 'நினைவுகள்' என்றுகூடச் சொல்லலாம்.

4. கனவு என்பது நாம் வாய் மூலமாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ மற்றவர்களுக்குக் கொடுக்கும் ஒரு ரிப்போர்ட். கனவில் நாம் கண்ட நிகழ்ச்சியை வேறு யாரும் பார்க்கவும் முடியாது, கனவு காணும்போது நாம் நேரடியாகக் கனவை மற்றவர்களுக்கு விளக்கவும் முடியாது.

கனவைப்பற்றிய இந்த நான்கு செய்திகளையும் இணைத்து சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், "கனவு என்பது நாம் சாதாரணமாக அயர்ந்து இருக்கும் நிலையில் நம் மனக்கண்முன் நடைபெறும் நிகழ்ச்சிகளின் ஒரு நினைவு" என்று சொல்லலாம்.

இன்னும் விளங்கும்படியாகச் சொல்ல வேண்டுமென்றால் நாம் நம்மையும் சூழ்நிலையையும் மறந்திருக்கும் நிலையில் நமது மனதுக்குள் தானாக அரங்கேறும் சின்ன நாடகங்கள் என்றும் கூறலாம். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF