அறிந்தும் அறியாத அண்டார்க்டிகா கண்டம்
மூன்று மாதம் தூங்கி விழும்
துருவம் பூண்ட,
மூன்று மாதம்
கண்மூடா வெளிச்சம் கொண்ட
தென்கோடிக் கண்டம்,
இந்தியக் கண்டத்தின் தோழி!
பனிக்கண்டமாய்
தனிக்கண்டமாய்ப் பிரிவதற்கு முன்
தோளோடு தோள் சேர்ந்து
ஆஃபிரிக்கா, ஆஸ்திரேலியா,
தென் அமெரிக்கக் கண்டமுடன்
வேனிற் சோலையில்
விலங்கினம் உலாவிய
விந்தைக் கண்டம்!
'பூமியின் நிலப்பரப்புப் பகுதிகள் அனைத்தும் பல யுகங்களுக்கு முன்பு ஒருங்கிணைந்த மாபெரும் ஓர் ஒற்றைக் கண்டமாக இருந்தது! பல மில்லியன் ஆண்டுகள் கழித்து எப்படியோ அப்பெருங் கண்டம் உடைபட்டு, வெவ்வேறு பகுதிகளாகப் பிரிந்து மெதுவாய் நகர்ந்து தற்போதுள்ள இடங்களுக்கு அவை நிலப்பெயர்ச்சி ஆகியுள்ளன! பூகோளத்தின் அடித்தட்டுகள் [Crust] உட்கருக் கனல் குழம்பில் [Liquid Core] ஊர்ந்து பெயர்ச்சி அடைகின்றன! கண்டங்களின் நிலப்பெயர்ச்சி நியதிக்கும், அடித்தட்டுப் பிறழ்ச்சி நிகழ்ச்சிக்கும் [Continental Drift & Plate Tectonics] பல கண்டங்களில் காணப்படும் நிலத்துவ விலங்கினம், தாவர இனத்தின் பூர்வப் படிவப் பதிவுச் சான்றுகள் [Fossil Records] உறுதி அளிக்கின்றன '.
ஆல்ஃபிரெட் வெஜினர், ஜெர்மன் பூதளவாதி (1880-1930)
முன்னுரை: 1885 ஆம் ஆண்டில் ஆஸ்டிரியன் பூதளவாதி எட்வெர்டு சூயஸ் [Eduard Suess (1831-1914)] கூறிய மகத்தான கருத்து: ஒரு காலத்தில் தென்பாதிக் கோளக் கண்டங்களான தென் அமெரிக்கா, ஆஃப்பிரிகா, இந்தியா, ஆஸ்திரேலியா, அண்டார்க்டிகா ஆகிய அனைத்தையும் இணைக்கும் நிலப்பாலங்கள் இருந்திருக்க வேண்டும். அந்த நாடுகளில் எல்லாம் பொதுவாகக் காணப்பட்ட பூர்வப் படிவச் செடி [Fossil Fern Glossopteris (Plant)] ஒன்றின் உறுதிப்பாட்டில், அவர் அவ்விதம் கூறினார். அந்தப் பெருங் கண்டத்திற்கு 'கோந்துவானா ' [Gondwana] என்று பெயரையும் வைத்தார்.
தென்பகுதியான கோந்துவான கண்டமும் வடபகுதியான லெளரேசியா கண்டமும் [Lauresia] சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே ஒற்றைப் பெருங்கண்டமான பங்கயாவிலிருந்து [Pangaea] பிரிந்ததாகப் பின்னால் ஜெர்மன் விஞ்ஞானி ஆல்ஃபிரெட் வெஜினர் கூறினார். வட பகுதியான லெளரேசியா கண்டத்தில் வட அமெரிக்கா, யுரேசியா [ஐரோப்பா+ஆசியா (இந்தியா தவிர)] இரண்டும் ஒன்றாக இருந்தன என்பது வெஜினர் கருத்து. முதலில் தோன்றிய ஒற்றைப் பெருங் கண்டத்துக்கு 'பங்கயா ' என்று பெயரிட்டவர், ஆல்ஃபிரெட் வெஜினர். கிரேக்க மொழியில் பங்கயா என்றால் 'எல்லாம் நிலம் ' என்று அர்த்தம்.
1820 இல் தென்கடலில் சீல் மீன்களின் தோல் கவசத்தைத் தேடிச் சென்ற கப்பல் மாலுமிகள் சிலர் எதிர்பாராமல் கண்டுபிடித்த தளப்பகுதியே, அண்டார்க்டிகா கண்டம்! பூமியில் ஐந்தாவது பெரிய கண்டமான அண்டார்க்டிகாவின் பெரும்பான்மையான தளப்பரப்பு சுமார் 6000 அடி முதல் 14,000 அடி தடிப்புள்ள பனித் தட்டுகளால் மூடப்பட்டுள்ளது! சுமார் 7 மில்லியன் கியூபிக் மைல் கொள்ளளவு கொண்ட பனித் திரட்சி கொண்டது! உலகின் 70% சுவைநீர்க் கொள்ளளவு அண்டார்க்டிகாவின் பனித் திரட்சியில் சேமித்து வைக்கப் பட்டுள்ளது. அப்பேரளவு பனிமலை ஒரு வேளை உருகினால், உலகின் கடல் மட்டம் 150 அடி-200 அடி உயரத்துக்கு ஏறி, ஆயிரக் கணக்கான கடற்கரைப் பிரதேசங்கள் மூழ்கி, பூகோளக் கடற் கொந்தளிப்பும், சூழ்வெளிச் சுற்றோட்டமும் பெருமளவில் பாதிக்கப்படும்!
அண்டார்க்டிகா கண்டத்தின் பூர்வீக வரலாறு
500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, காம்பிரியன் யுகத்தில் [Cambrian Era] அண்டார்க்டிகா கண்டம் பூமத்திய ரேகைப் பகுதியில் படுத்திருந்தது! பூமியின் உட்கருவில் கொந்தளிக்கும் திரவக் குழம்பின் மீது உலகக் கண்டங்கள் நகரும் போது, மெஸோசோவிக் யுகத்தில் [Mesozoic Era (65-250 மில்லியன் ஆண்டுகள்)] ஆஸ்திரேலியாவுடன் ஒட்டி யிருந்த அண்டார்க்டிகா கண்டம் தெற்கு நோக்கித் திசைமாறியது! அந்த யுகத்தில்தான் அநேக விலங்குகளும், சிலவித டைனோசார்ஸ்களும் வேனிற் தளமாய் இருந்த அண்டார்க்டிகாவில் நடமாடி வந்தன. பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அண்டார்க்டிகா, ஆஸ்திரேலியாவை விட்டுப் பிரிந்து தென் துருவம் நோக்கிப் புலப்பெயர்ச்சி அடைந்தது.
நிரந்தரப் பனி மண்டலம் சூழ்ந்த அண்டார்க்டிகா கண்டம் தென்துருவப் பகுதியில் தற்போது தங்கியுள்ள ஒரு பனிக்கண்டம். உலகக் கண்டங்களில் ஐந்தாவது பெரிய அண்டார்க்டிகா அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள் போல ஒன்றரை மடங்கு பெரியது! உலகிலே மிகப் பெரிய பாலை நிலத்தைக் கொண்டது அண்டார்க்டிகா! அதன் 98 சதவீதப் பரப்பில் பல்லாண்டுகள் உறைந்து போன பனித்தட்டுகளும், மீதி 2 சதவீதத்தில் மலட்டுப் பாறைகளும் கொண்டது. உலகின் மொத்தத் தொகையில் 90% அளவு பனிமண்டலம் அண்டார்க்டிகாவில்தான் சேமிப்பாகி உள்ளது. அண்டார்க்டிகாவின் தென் துருவம் உலகக் கண்டங்களிலே மிக்கப் பனிக்குளிரும், மிக்கப் பனிப்புயலும், மிக்க வரட்சியும் கொண்டது. இதுவரைப் பூமியில் குளிர் தணிந்து, 1983 இல் பதிவான அண்டார்க்டிகாவின் உஷ்ணம் -89 C (-128.6 F)! ஒவ்வொரு வருடத்திலும் அண்டார்க்டிகாவின் பெரும்பான்மையான பகுதிகளில் தெளிக்கப்படும் சராசரி பனித்தூவல் 2 அங்குலத்துக்கும் குறைவுதான்!
அண்டார்க்டிகாவைக் கண்டுபிடிப்பதில் இருவர் போட்டி
1820 இல் தென்கடலில் சீல் மீன்களின் தோல் கவசத்தைத் தேடிச் சென்ற கப்பல் மாலுமிகள் சிலர் எதிர்பாராமல் கண்டுபிடித்த தளப்பகுதியே, அண்டார்க்டிகா கண்டம்! வட துருவத்தில் 1909 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி அமெரிக்கத் தீரர் ராபர்ட் எட்வின் பியரி [Robert Edwin Peary (1856-1920)] முதன்முதலில் தடம் வைத்தார்! 1908 ஆண்டில் பிரிட்டாஷ் தேடுநர் குழுவின் தலைவனாய் இருந்த, ஐரிஸ் நாட்டைச் சேர்ந்த ஏர்னஸ்ட் ஷாக்கில்டன் [Ernest Shackleton] அண்டார்க்டிகாவில் கால்வைத்துத் தென் துருவத்தை நோக்கிச் செல்லும் போது உணவுப் பண்டம் பற்றாமல், எதிர்த்து வரும் குளிர்காலப் பனிப்புயலின் தாக்குதலைத் தாங்க வலுவின்றி 97 மைல் தூரம் வரை சென்று மீள வேண்டியதாயிற்று. தென் துருவத்தில் யார் முதலில் தடம் பதிப்பது என்று போட்டி யிட்டு இரண்டு தீரர்கள் முயன்றனர். முதல்வர்: நார்வே நாட்டைச் சேர்ந்த ரோவால்டு அமுன்ட்சென் [Roald Amundsen (1872-1928)] ஒரு கப்பல் உரிமையாளரின் மகன். புதிய பிரதேசங்களைத் தேடுவதில் பயிற்சி பெற்றுக் கப்பலோட்டுவதிலும் திறமை மிக்கவர். அவர்தான் முதன்முதலில் வடமேற்குப் பனிக்கடலில் கப்பல் பயணம் செய்து, வடதுருவத்தில் தடம் வைக்க முதலில் முயன்றவர். இரண்டாமவர்: இங்கிலாந்தைச் சேர்ந்த ராபர்ட் ஃபால்கன் ஸ்காட் [Robert Falcon Scott (1868-1912)].
ஒரு சில மாதங்களில் அடுத்து, அமுன்ட்சென்னும், ஸ்காட்டும் தமது வரலாற்று முக்கிய தென் துருவப் பயணங்களைத் துவங்கினார்கள். அவர்கள் இருவரும் முற்றிலும் வேறான பண்புகளைக் கொண்டவர்கள். ஸ்காட் மெலிந்த உடம்பும், கடுஞ்சினமும், கடிய உழைப்பும் கொண்டவர். தனது 42 வயதில் தென்துருவப் பயணத்தைத் துவங்கினார். அமுன்ட்சென் எளிமையும் நேர்மைப் போக்கும் உள்ளவர். வடதுருவம் தேடிச் சென்று ஆர்க்டிக் பிரதேசத்தில் மாண்டு போன பிரிட்டாஷ் தீரர் ஸர் ஜான் ஃபிராங்க்லின் [Sir John Frnaklin (1786-1847)] மீது, அமுன்ட்சென் சிறுவனாக இருந்த போது மதிப்பும் பெருமையும் கொண்டிருந்தார். மருத்துவப் படிப்பை 21 வயதில் விட்டுவிட்டு, வாழ்க்கையில் புதிய இடங்களைக் கண்டுபிடிக்கும் தேடுநராக விழைந்து பயிற்சியைப் பெற்றார். ஃபிரான்க்லினைப் பின்பற்றி ஆர்க்டிக் பகுதிக்குச் சென்று, சிரமங்களை அறிந்து வரத் தீர்மானித்து, சிறிது தூரம் பயணமும் செய்தார்.
இருவரிலும் நார்வேயின் வீரர் அமுன்ட்சென் தகுந்த, எடை குறைந்த சாதனங்களை எடுத்துச் சென்று வெகு திறமையாகத் தனது துருவப் பயணத்தைத் துவக்கினார். அமுன்ட்சென் வட துருவத்தில் தடம் வைக்க, கனடாவின் வடமேற்கு வழியில் [Northwest Passage] போகும் போது, எஸ்கிமோக்களுடன் பழகி அவர்கள் அணியும் தளர்ந்த தோலுடைகளை [Fur] உடுத்திப் பனி மண்டலத்தில் உலவிப் பயிற்சி எடுத்துக் கொண்டவர். காலில் பூட்டிய பனிச்சறுக்கிகள் எடை குன்றிதாய் இருந்ததால், வெகுநேரம் களைப்படையாமல் வழுக்கிச் செல்ல ஏதுவாய் இருந்தன. 1910 ஜூன் மாதம் முதல் தேதி ஸ்காட் குழுவினர் 'டெர்ரா நோவா ' (Terra Nova) என்னும் கப்பலில் 19 சைபீரியன் கோவேறு கழுதைகளை [Siberian Ponies] ஏற்றிக் கொண்டு இங்கிலாந்து லண்டனிலிருந்து நியூ ஸீலாந்துக்குப் புறப்பட்டார். ஸ்காட் தென் துருவம் செல்வதைக் கேள்விப்பட்டு, அமுன்ட்சென் வட துருவம் போகும் திட்டத்தை மாற்றி அவரும் தென் துருவப் போட்டியில் கலந்து கொண்டார். 1911 அக்டோபரில் அமுன்ட்சென் தென் அமெரிக்க முனையான ஹார்ன் [Cape Horn] வழியாக நான்கு உதவி ஆட்கள், 52 கிரீன்லாந்து நாய்களை ஏற்றிக் கொண்டு அண்டார்க்டிக் கடலை அணுகத் தனது கப்பல் பயணத்தை ஆரம்பித்தார்.
ஸ்காட் அக்டோபரில் (1911) நியூ ஸிலாந்து வந்து சேர்ந்தார். அண்டார்க்டிக் பயணத்தில் ஸ்காட்டின் சைபீரியன் கழுதைகள் இரு மடங்குப் பொதி சுமந்ததால் பனிப்புயலில் இழுத்துச் செல்ல வெகு சிரமப்பட்டன. ஆனால் கிரீன்லாந்து பனியில் பழக்கப் பட்ட அமுன்ட்சென் நாய்கள், வெகு விரைவாக குறைந்த பளுவை இழுத்துச் சென்று, முதல் நான்கு நாட்களில் சுமார் 90 மைல்கள் கடந்தன! அமுன்ட்சென் துருவ முயற்சியில் வெற்றி பெற்று 1911 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி நார்வே தேசக் கொடியை, முதன் முதல் தென் துருவத்தில் நாட்டினார். ஸ்காட் ஒரு மாதம் கழித்து பின்புதான் 1912 ஜனவரி 17 இல் தென் துருவத்தை அடைந்தார். நார்வேயின் கொடியையும், அவருக்கு முன் வந்தடைந்த அமுன்ட்சென் ஸ்காட்டுக்கு விட்டுச் சென்ற கடிதத்தையும் கண்டு, ஸ்காட் பெருத்த ஏமாற்றம் அடைந்தார். இறுதியில் திரும்பும் போது பனிப்புயலில் அவரும் அவரது குழுவினரும் சிக்கி மாண்டு போயினர். எட்டு மாதங்கள் கழித்து அவரகளது உடல்கள் காணப்பட்டு மீட்கப் பட்டன!
அண்டார்க்டிகா கண்டத்தின் இயற்கை அமைப்பு
தென்னமெரிக்காவின் தென்கோடி ஹாரன் முனையிலிருந்து சுமார் 600 மைல் தூரத்தில் அண்டார்க்டிகாவின் நீட்சித்தள [Antarctica Peninsula] முனை உள்ளது. பூமியில் ஐந்தாவது பெரிய கண்டமான அண்டார்க்டிகாவின் பெரும்பான்மையான தளப்பரப்பு சுமார் 6000 அடி முதல் 14,000 அடி தடிப்புள்ள பனித் தட்டுகளால் மூடப்பட்டுள்ளது! சுமார் 7 மில்லியன் கியூபிக் மைல் கொள்ளளவு கொண்ட பனித் திரட்சியைக் கொண்டது! அப்பேரளவு பனிமலை ஒரு வேளை உருகினால், உலகின் கடல் மட்டம் 150 அடி-200 அடி உயரத்துக்கு ஏறி, ஆயிரக் கணக்கான கடற்கரைப் பிரதேசங்கள் மூழ்கி, பூகோளக் கடற் கொந்தளிப்பும், சூழ்வெளிச் சுற்றோட்டமும் பெருமளவில் பாதிக்கப்படும்! உலகின் 70% சுவைநீர் கொள்ளளவு அண்டார்க்டிகாவின் பனித் திரட்சியில் சேமித்து வைக்கப் பட்டுள்ளது. ரஷ்யாவின் ஃபான் பெல்லிங்ஸாசன் [Von Belling shausen (1778-1852)], பிரிட்டனின் எட்வெர்டு பிரான்ஸ்பீல்டு [Edward Bransfield (1795-1852)], அமெரிக்கன் நாதனீல் பால்மர் [Nathenel Palmer (1799-1877)] ஆகியோர் மூவரும் 1820 ஆம் ஆண்டில் அண்டார்க்டிகா கண்டத்தை முதன்முதலில் கண்டதாகக் கூறுகிறார்கள். அதன் நிலப்பரப்பு 5.5 மில்லியன் சதுர மைல் [14.2 மில்லியன் சதுர கி.மீடர்] விரிந்தது.
கிழக்கு, மேற்கு அண்டார்க்டிகா பகுதிகள் 1900 மைல் [3000 கி.மீடர்] நீளமுள்ள குறுக்கு அண்டார்க்டிக் மலைத் தொடரால் [Transantarctic Mountains] பிரிக்கப் படுகின்றன. உலகக் கண்டங்களில் கடல் மட்டத்தளம் சராசரி 6000 அடி உயர்ந்த அண்டார்க்டிக் பிரதேசம் போன்று பூமியில் வேறு எதுவும் கிடையாது! பனிச் சிகரத்தைத் துளைத்தெழுந்த மலைச் சிகரம் சுமார் 15,000 அடி உயரமுள்ளது!
1900 ஆண்டுகளில் பன்னாட்டுத் தேடுநர்களால் அண்டார்க்டிக் கண்டத்தின் உட்பகுதிகளும், அதைச் சுற்றி யிருக்கும் கடல்களும் விளக்கமாக அறியப்பட்டன. இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் ஏழு நாடுகள் புகுந்து, குடியாக்கிரமிப்பு ஆட்சியை [Colonial Claim] அண்டார்க்டிகாவில் துவங்கின. அகில உலக பூதளப் பெளதிக ஆண்டில் [International Geophysical Year (1957-58)] 12 நாடுகள், 50 குடியேற்ற தளங்களை ஆக்கிரமித்து, கூட்டாய்வு நிலையங்களை நிறுவகம் செய்தன. 1991 ஆண்டு ஒப்பந்தப்படி தாது உலோகங்கள் தேடும் திட்டங்கள் [Mineral Exploitation] இன்னும் 50 ஆண்டுகளுக்குத் தடை செய்யப்பட்டன.
அண்டார்க்டிகாவைப் பற்றித் தேடுநர் திரட்டியுள்ள பூதள விபரங்கள் மிக மிகக் குறைந்தவை. கிரஹாம் களம், விக்டோரியா களம் [Graham Land, Victoria Land] ஆகிய இரண்டையும் தவிர மற்ற களங்களின் பூதள விபரங்கள் இன்னும் அறியப் படாமலே இருக்கின்றன. உட்தளப் பகுதிகள் மீது நிரந்தரமாக தடித்த பனிப் போர்வை மூடி இருப்பதால், இந்த யுகத்தில் அவற்றின் தளப்பண்புகள் யாவும் ஆராயப்படப் போவதில்லை! 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்த காம்பிரியன் யுகத்துப் [Cambrian Era] பூர்வீகப் படிவங்கள், புராதனத் தேக்கப் புழுதிகள் [Fossils & Sediments] அண்டார்க்டிக் கண்டத்தின் தென்பகுதியில் கிடக்கின்றன. கிரஹாம் களத்தில் மெஸோசோவிக் யுகத்தின் ஜுராஸ்ஸிக் தாவரப் [Mesozoic Age Jurassic Flora] பூர்வப் படிவங்கள் காணப்படுகின்றன.
இsc0522051h.jpg
அண்டார்க்டிக்காவில் காணப்படும் பறவைகள், விலங்கினங்கள்
பிரம்மாண்டமான பனி மண்டலம் கொண்ட அண்டார்க்டிகாவில், கடும்பனியைத் தாங்கிக் கொள்ளும் ஆதிவாசி விலங்கினமும், தாவரச் செடிகளும்தான் [Primitive Indigenous Animals & Plants] பிழைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றன. கண்டத்தின் பூதளப் பரப்பு வெற்று நிலமாயினும், சுற்றியுள்ள கடலில் பலவிதப் பாலூட்டிகள் [Mammals], திமிங்கலம், சீல் மீனினம் போன்ற நீரினப் பிறவிகள் மிகவும் செழிப்பாக விருத்தியாகின்றன. நீரில் மிதந்து நீந்தும் இம்மி ஜந்துகள் [Microscopic Plankton] மற்றும் மாபெரும் திமிங்கலம் போன்றவை அண்டார்க்டிகா கடலில் காணப்படுகின்றன. ரோமத் தோல் கொண்ட [Fur] பாலூட்டியான பல்வகை சீல் நீந்திகள் [Elephant Seal, Leopard Seal, Ross Seal, Weddell Seal, Fur Seal, Crabeater Seal] அண்டார்க்டிகாவில் காணப்படுகின்றன.
அண்டார்க்டிகாவில் வாழும் பறவை இனத்தைச் சேர்ந்த பெங்குவின் புள்ளினங்கள் பறக்க முடியாமல் இருந்தாலும், நீரில் நீந்தும் திறமை பெற்றவை! பதினேழு வகையான பெங்குவின் புள்ளினங்கள் அங்கு வசிக்கின்றன. பெரும்பான்மையான காலம் அவை கடலில் மீன் பிடித்து உயிர் வாழ்கின்றன. அவற்றின் இறகுகள் தாமரை இலைபோல் தண்ணீர் ஒட்டாத தன்மை கொண்டு, மினுமினுப்பான ஒளியைக் கொண்டவை. உடலில் அவ்விதம் நீர் ஒட்டாததால், பெங்குவின்கள் தமது தோலை எப்போதும் வரட்சியாக வைத்துக் கொள்ள முடிகிறது. எல்லாப் பறவைகளையும் விட எண்ணிக்கை மிக்க இறகுகளை [ஒரு சதுர அங்குலத்தில் 70 இறகுகள்] பெங்குவின்கள் கொண்டவை. ஒவ்வோர் ஆண்டிலும் அவற்றின் பழைய இறகுகள் விழுந்து, புதிய இறகுகள் முளைக்கின்றன. எல்லா வகையிலும் பெரியதான ராஜாப் பெங்குவின் [Emperor Penguin] உயரம்: 3.7 அடி [1.1 மீடர்]. எடை: 65 பவுண்டு [30 கி.கிராம்]. எல்லா வகைப் பெங்குவின்களும் பெருத்த சிரசும், குறுகிய தடித்த கழுத்தும் கொண்டவை. அழகிய வளைவுகள் கொண்டு வழுக்கி விரைவாகப் பாய்ந்து நீந்துவதற்கு எளிதாக உதவும் படர்ந்த கால்களும் சிறகு போல் தள்ளும் இரட்டை விலாத் துடுப்புகளும் பெற்றவை.
அண்டார்க்டிக்காவில் காணப்படும் பூர்வப் படிவ மாதிரிகள்
தென்துருவப் பகுதியில் இப்போது இருக்கும் அண்டார்க்டிகா கண்டம், 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, காம்பிரியன் யுகத்தில் (Cambrian Era) பூமத்திய ரேகை அரங்கில் வேனிற்தளமாக இருந்து, பின்னால் அங்கிருந்து மெதுவாக ஊர்ந்து தெற்கு நோக்கி வந்தது! வெப்ப பூமியாக இருந்த காலங்களில் டைனசார்ஸ் போன்ற பலவித நிலத்துவ விலங்குகளுக்கு இருப்பிடமாக இருந்தது. இப்போது அவ்விதப் பூர்வீக விலங்கினங்கள் யாவும் மாய்ந்து போய், அவற்றின் பூர்வப் படிவ மாதிரிகள் மட்டும் புதைந்து கிடக்கின்றன. 2003 ஆம் ஆண்டு இறுதியில் ஜேம்ஸ் மார்டின் குழுவினர் ஜேம்ஸ் ராஸ் தீவில் இறைச்சி தின்னும் டைனசார்ஸ் [Theropad] பூர்வ படிவ எலும்புகளைக் காண்டார்கள். ஆறு அல்லது எட்டடி நீளமுள்ள அந்த டைனசார்ஸ் மெஸோசோயிக் யுகத்தின் இறுதியில் 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்தது. 1994 இல் ஹாம்மர் குழுவினர் 20 அடி நீளமுள்ள, இறைச்சி தின்னும் ஜுராஸ்ஸிக் யுகத்தின் டைனசார்ஸ் [Theropad] ஒன்றின் எலும்புகளைக் கண்டார்கள்.
வில்லியம் ஹாம்மர் குழுவினர் 30 அடி நீளமுள்ள தாவரம் உண்ணும் டைனசார்ஸ் [Sauropad] ஒன்றின் 10 அடி அகண்ட இடை எலும்புகளை 2003 ஆம் ஆண்டு இறுதியில் கண்டார்கள். அது ஜுராஸ்ஸிக் யுகத்தில் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நிலத்து விலங்கினம். தென் டகோடா பூதளக் காட்சி சாலையைச் சேர்ந்த ஜிம் மார்டின், வேகா-சிமோர் தீவுகளில் தாவரம் உண்ணும் டைனசார்ஸின் [Hadrosaur] பூர்வ படிவ எலும்புகளைக் கண்டார்கள். 1991 இல் மில்நர் குழுவினர் வேகா தீவில் தாவரம் தின்னும் டைனசார்ஸ் [Ornithopad] ஒன்றின் பூர்வ படிவத்தைப் பார்த்தார்கள். ஆலிவர் குழுவினர் ஜேம்ஸ் ராஸ் தீவில் 1986 ஆம் ஆண்டில் தாவரம் புசிக்கும் டைனசார்ஸ் [Cretaceous Period Dinosaurs] ஒன்றின் எலும்புக் கூட்டைக் கண்டார்கள். இதுவே முதன் முதலில் அண்டார்க்டிகாவில் கண்டுபிடிக்கப் பட்ட டைனோசார்ஸ்.
25 மைல் அகண்ட, ஆழமான அடித்தட்டுப் பழுது [Deep Crustal Fault] இருப்பினும், எரிமலைகளே இதுவரை எழாத ஓர் அதிசயக் கண்டம், அண்டார்க்டிகா! அண்டார்க்டிகா குறுக்கு மலைத்தொடரில் இதுவரை எரிமலைகளே உண்டான தில்லை! ஆஃபிரிக்கா, ஆஸ்திரேலியா, தென்னமெரிக்கா, இந்தியா, ஆகிய முற்கால ஒட்டுக் கண்டங்களில் காணப்படும் பூர்வப் படிவ மரங்கள் [Glossopteris], நிலத்தில் ஊர்ந்திடும் விலங்கினம் [Lystrosaurus] அண்டார்க்டிகாவிலும் காணப்படுகின்றன. விஞ்ஞான ஆய்வாளர்கள் அண்டார்க்டிகா கண்டத்திற்கு விஜயம் செய்தாலும், பனிப்புயல்களும், பனிப் பொழிவுகளும் மிகையாகி மித மிஞ்சியக் குளிர்ப் பிரதேசமாக இருப்பதால் நிரந்தரமான மனிதக் குடியேற்ற இல்லங்கள் எவையும் அங்கு கிடையா. வேனிற் காலத்தில் சுற்றுலா புரிந்து வந்து போகும் மாந்தர் [Seasonal Visitors] ஆண்டுக்கு சுமார் 4000 பேர் என்று கணக்கிடப் பட்டுள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF