சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு
[ சனிக்கிழமை, 16 சனவரி 2010, 06:52.22 பி.ப GMT ]
சூரிய கிரகணத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக "இஸ்ரோ' சார்பில், ராக்கெட்டுகள் ஏவப்பட்டன.இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் நேற்று நடந்தது.
மிக அரிய வானியல் நிகழ்வான இதை, "கங்கண சூரிய கிரகணம்' என்றழைக்கப்பட்டது. இதை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தது. சூரியனை நிலவு மறைக்கும்போது, சூரியக் கதிர்களின் வீச்சு குறைவது, அதனால் ஏற்படும் இருள், அதன் விளைவுகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்வதற்காக, நான்கு ரோகிணி ரக ராக்கெட்டுகள், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து நேற்று முன்தினம், விண்ணில் ஏவப்பட்டன.
அதைத் தொடர்ந்து, நேற்றைய சூரிய கிரகணத்தின் போதும் ஐந்து ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் இருந்தும் ராக்கெட்டுகள் ஏவப்பட்டன.
பெங்களூரைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் கூறுகையில்,
'வானில் நடந்த மிக அரிய நிகழ்வான சூரிய கிரகணம், இஸ்ரோ சார்பில் முழுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமும், விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட்டுகள் மூலமும் சூரிய கிரகணத்தால் என்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்பது குறித்து விரிவான ஆய்வு நடத்தப்படும்' என்றார்.
குறிப்பாக சூரியன் வெளிவிடும் வெப்பக்கதிர்கள் விண்வெளியில் வரும்போது ஏற்படும் மாற்றங்கள், சூரிய கிரகணத்தின் போது திடீரென வெப்பம் குறைவதால் ஏற்படும் மாற்றங்கள் ஆராயப்படும். இத்தடவை கங்கண சூரிய கிரகணம் பத்து நிமிடங்கள் நிகழ்ந்தது. அந்நேரத்தில் சூரியன் ஒரு வளையமாக ஒளியை உமிழ்ந்தபடி காட்சியளித்ததும், படமாக்கப்பட்டிருக்கிறது. அந்த நேரத்தில் மதிய வெப்பம் மாறி, மாலையில் வழக்கமாக இருக்கும் நிலைக்கு தட்பவெப்பம் மாறியது குறித்தும் ஆய்வில் எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறப்பட்டது.வானியல் அறிஞர்கள் பல் வேறு பகுதிகளில் இருந்து மேற்கொள்ளப் பட்ட ஆய்வுகளுடன் இதை ஒப்பிட்டு ஆய்வு நடத்தவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF