Thursday, January 21, 2010

நபிமொழிகள்

உள்ளத்தில் கடுகளவு பெருமை உள்ளவன் சுவனம் செல்ல முடியாது: -
இப்னு மஸ்ஊத் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: -
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: ‘எவனுடைய உள்ளத்தில் கடுகளவு பெருமை இருக்கிறதோ அவன் சொர்க்கம் செல்ல முடியாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். அப்போது ஒரு மனிதர் என்னுடைய உடைகளும் என் காலணிகளும் அழகாக இருக்க வேண்டுமென்று நான் விரும்புவது பெருமையா? என்று கேட்டார். அதற்கு இறைதூதர் (ஸல்) அவர்கள் இறைவன் அழகானவன், அவன் அழகை விரும்புகிறான். பெருமை என்பது சத்தியத்தை மறைப்பதும், மக்களை இழிவாகக் கருதுவதுமாகும்’ என விளக்கினார்கள். (ஆதாரம் : முஸ்லிம், திர்மிதி)
ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் சுவனபதியில் நுழையாதவர்கள்: -
அல்லாஹ் கூறுகிறான்: -
‘எவர்கள் நம் வசனங்களைப் பொய்ப்பித்து இன்னும் (அவற்றைப் புறக்கணித்து) பெருமையடித்தார்களோ நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்பட மாட்டா. மேலும் ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழைய மாட்டார்கள் - இவ்வாறே குற்றம் செய்பவர்களுக்கு கூலி கொடுப்போம்’ (அல்குர்ஆன்: 7:40)
மிக்க பாக்கியம் பெற்ற மறுமையின் வீடு பெருமையடித்தவர்களுக்கு அல்ல!
அந்த மறுமையின் வீட்டை, இப்பூமியில் (தங்களைப்) பெருமைப்படுத்திக் கொள்ளவும், குழப்பத்தை உண்டாக்கவும் விரும்பாதிருப்பவர்களுக்கே நாம் சொந்தமாக்கி வைப்போம்; ஏனெனில், பயபக்தியுடையவர்களுக்கே (மேலான) முடிவு உண்டு. (அல்-குர்ஆன் 28:83)
அகப்பெருமைக்காரர், ஆணவம் கொண்டோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்: -
‘(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்-குர்ஆன் 31:18)
அகந்தையுடன் நடப்பவரும், பெருமையடித்துத் திரிபவரும் நரக வாசிகளாவார்கள்: -
ஹாரிஸா இப்னு வஹப் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: -
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூற நான் கேட்டேன் ”உங்களுக்கு நரகவாசியைப் பற்றி அறிவித்துத் தரட்டுமா? அவர் யாரெனில் மிகக் கடுமையானவரும், அகந்தையுடன் நடப்பவரும், பெருமையடித்துத் திரிபவருமாவார்.” . (ஆதாரம் : ஸஹீஹுல் புகாரி)
தற்பெருமை கொள்பவனுக்கு உவமானம்!
அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: -
‘எவன் தன் தலைமுடியை வாரி அழகுபடுத்தி நல்ல ஆடைகளை அணிந்து கர்வத்துடன் தலை நிமிர்ந்து தன்னில் தானே பூரிப்பு அடைந்த வண்ணம் நடந்து செல்கின்றானோ அவன் பூமியில் திடுமெனச் செருகப்பட்டு மறுமை நாள் வரை அதன் அதலபாதாளத்தில் முட்டி மோதி மூழ்கடிக்கப்பட்டு விடுபவன் போலாவான்’ என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (ஆதாரம்: புகாரீ, முஸ்லிம்)
தற்பெருமை மற்றும் ஆணவம் கொண்டோர் அல்லாஹ்வின் கோபத்திற்குள்ளானவர்களாவார்கள்:-
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: ”எவர் தன்னைப் பற்றி பெரிதாக எண்ணுகிறாரோ அல்லது தனது நடையில் ஆணவம் கொள்கிறாரோ அவர் அல்லாஹவை சந்திக்கும் நாளில் அல்லாஹ அவர் மீது கோபம் கொண்ட நிலையில் சந்திப்பார்.” (ஆதாரம் : அல் அதபுல் முஃப்ரத்)
ஆடையைப் பூமியில் பெருமையுடன் இழுத்துச் செல்பவனை அல்லாஹ் மறுமையில் பார்க்க மாட்டான்: -
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: ”எவன் தனது ஆடையைப் பூமியில் பெருமையுடன் இழுத்துச் செல்கிறானோ அவனை அல்லாஹ் மறுமை நாளில் பார்க்க மாட்டான்.” (ஆதாரம் : ஸஹீஹுல் புகாரி)
பெருமையடிக்கும் ஏழையுடன் அல்லாஹ் மறுமையில் பேச மாட்டான்: -
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: ‘மூன்று நபர்கள், மறுமைநாளில் அல்லாஹ் அவர்களுடன் பேசவும் மாட்டான், அவர்களைப் பரிசுத்தப்படுத்தவும் மாட்டான், அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுமுண்டு. அவர்கள் விபச்சாரம் புரியும் வயோதிகன், பொய்யனான அரசன், பெருமையடிக்கும் ஏழை.” (ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம்)
பெருமை அல்லாஹ்வுக்கே உரியது: -
”கண்ணியம் எனது கீழாடை, பெருமை எனது மேலாடை. அந்த இரண்டில் எதையேனும் என்னிடம் பறித்துக்கொள்ள முற்பட்டால் அவரை நரகில் போட்டு வேதனை செய்வேன்” என அல்லாஹ் கூறியதாக நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம்)
‘மூன்று விஷயங்கள் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தது என்று எவராவது கூறினால் அவர் பொய்யுரைத்துவிடடார்’ என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். அந்த முன்று விஷயங்களாவன:
1) முஹம்மது (ஸல்) இறைவனைப் பார்த்தார் என்று கூறினால் அவர் பொய்யுரைத்துவிடடார்.
2) எவரேனும் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு நாளை நடப்பது (மறைவான விஷயம்) தெரியும் என்று கூறினால் அவர் பொய்யுரைத்துவிடடார்.
3) எவரேனும் இறைவனிடம் இருந்து வந்த வஹியில் சிலவற்றை நபி (ஸல்) அவர்கள் மறைத்து விடடார் என்று கூறினால் அவா பொய்யுரைத்துவிடடார்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம் : புகாரி
“பார்வைகள் அவனை அடைய முடியா; ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன்” (அல்-குர்ஆன் 6:103)
நாம் குறித்த காலத்தில் (குறிப்பிட்ட இடத்தில்) மூஸா வந்த போது, அவருடைய இறைவன் அவருடன் பேசினான்; அப்போது மூஸா: ‘என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக! என்று வேண்டினார். அதற்கு அவன், ‘மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது, எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!’ என்று கூறினான். ஆகவே அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த போது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்; அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். அவர் தெளிவடைந்ததும், ‘(இறைவா!) நீ மிகவும் பரிசுத்தமானவன்; நான் உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன். ஈமான் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்’ என்று கூறினார். (அல்-குர்ஆன் 7:143)
அல்லாஹ் கூறுகிறான்: -
(நபியே!) நீர் கூறும்: ‘என்னிடத்தில் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன’ என்று நான் உங்களிடம் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியமாட்டேன்; நிச்சயமாக ‘நான் ஒரு மலக்காக இருக்கின்றேன்’ என்றும் நான் உங்களிடம் சொல்லவில்லை; எனக்கு (வஹீயாக) அறிவிக்கப்பட்டதைத் தவிர (வேறு எதையும்) நான் பின்பற்றவில்லை.’ இன்னும் நீர் கூறும்: ‘குருடனும் பார்வையுடையவனும் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?’ (அல்-குர்ஆன் 6:50)
(நபியே!) நீர் கூறும்: ‘அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கே யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ள சக்தியில்லாதவன்; மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால் நன்மைகளை அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்; (அந்நிலையில் எவ்விதமான) தீங்கும் என்னைத் தீண்டியிராது - நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம் கூறுபவனுமேயன்றி வேறில்லை.’ (அல்-குர்ஆன் 7:188)
புறம் பேசுதல் என்றால் என்ன?
புறம் என்றால் என்னவென நபி(ஸல்)அவர்கள் விவரிக்கின்றார்கள்: -
புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர் என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’ என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்) என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)
புறம்பேசுதல் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட (ஹராமான) செயலாகும்:-
அல்லாஹ் கூறுகிறான்:-
முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்-குர்ஆன் 49:12)
பிறரைக் கேலி செய்யும் விதத்தில் பேசக் கூடாது: -
முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) - ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள். அல்-குர்ஆன் 49:11)
ஒரு முஸ்லிம், பிற முஸ்லிமின் கண்ணியத்தைக் குழைக்கும் வகையில் புறம் பேசக் கூடாது:-
“ஒவ்வொரு முஸ்லிமும் பிற முஸ்லிமின் மீது அவருடைய இரத்தம், கண்ணியம், பொருள் இவற்றை களங்கப்படுத்துவது ஹராமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)
ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் தமது உரையின் போது, “உள்ளத்தில் இல்லாது உதட்டால் நம்பிக்கை கொண்டவர்களே! முஸ்லிம்களைப் பற்றியும் புறம் பேசாதீர்கள்; அவர்களது குறைகளை ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; யார் மற்றவர்களின் குறைகளைத் தேடி திரிகின்றாரோ, அவர்களது குறைகளை அல்லாஹ் பின் தொடர ஆரம்பிப்பான். யாருடைய குறைகளை அல்லாஹ் பின் தொடர ஆரம்பிக்கின்றானோ அவர்கள் தமது வீட்டில் செய்யும் குறைகளையும் பகிரங்கமாக்கி அவர்களை இழிவுபடுத்தி விடுவான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (நூல்: அஹ்மத்)
புறம் பேசுவதால் இம்மையில் ஏற்படும் தீமைகள்:-
1) புறம் பேசுவதன் மூலம் குடும்பங்களுக்கிடையே, உறவினர்களுக்கிடையே சண்டை, சச்சரவுகள்,தகராறுகள் ஏற்படுகிறது.
2) ஒரு சபையில் பிறரைப் பற்றிப் புறம் பேசப்படும் போது, அது சமுதாயங்களுக்கிடையே பிளவை உண்டாக்குகிறது.
3) சமுதாயம் பிளவு படுவதன் மூலம் முஸ்லிம்களிடையே பலபிரிவுகள் ஏற்பட்டு, முஸ்லிம் சமுதாயம் பலவீண மடைகிறது.
4, முஸ்லிம் சமுதாயம் பலவீணமடைவதால் எதிரிகளால் ஆக்ரமிக்கப்பட்டு ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் பாதிப்படைகிறது.
புறம் பேசுவதால் மரணததிற்குப்பிறகு கப்ரிலும்,மறுமையிலும் கிடைக்கும் தண்டனைகள்: -
கப்ரில் கிடைக்கும் தண்டனைகள்: -
‘நபி(ஸல்) அவர்கள் இரண்டு கப்ருகளைக் கடந்து சென்ற போது ‘இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை. அவ்விருவரில் ஒருவர், தாம் சிறுநீர் கழிக்கும்போது மறைப்பதில்லை. மற்றொருவர், புறம்பேசித் திரிந்தார்’ என்று கூறிவிட்டு, ஒரு பசுமையான பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?’ என கேட்கப்பட்ட போது ‘அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் போதெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என இப்னுஅப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஆதாரம் : புஹாரி.
மறுமையில் கிடைக்கும் தண்டனைகள்: -
1) மனித மாமிசத்தை சாப்பிடுவார்கள்: -
“மிஃராஜின் போது நான் ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றேன். அக்கூட்டத்தினருக்கு இரும்பினாலான நகங்கள் இருந்தன. அவர்கள் அதன் மூலம் அவர்கள் தங்கள் முகங்களையும் நெஞ்சங்களையும் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது “ஜிப்ரீலே, அவர்கள் யார்” என்று கேட்டேன். “இவர்கள் மனிதர்களின் மாமிசத்தைச் சாப்பிட்டவர்கள் (புறம் பேசியவர்கள்) மனிதர்களின் கண்ணியத்தில் கை வைத்தவர்கள்” என்று விளக்கமளித்தார்கள்.” அறிவிப்பாளர் அனஸ் (ரலி) நூல்;: அஹ்மது.
2) புறம் பேசுபவன் சுவனம் நுழையமாட்டான்: -
“புறம் பேசுபவன் சுவனம் நுழைய மாட்டான்” என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் (நூல்-முஸ்லிம்)
முஃமினான என தருமை சகோதர, சகோதரிகளே! அல்லாஹ் மற்றும் அவனது தூதர் (ஸல்) அவர்களினால் இந்த அளவிற்கு கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ள இந்த புறம் பேசுதல் என்ற தீயசெயலை நாம் ஒவ்வொருவரும் தவிர்ந்திருப்பது மிக மிக அவசியமாகும்.
புறம் பேசுவதைத் தவிர்ப்பதனால் ஏற்படும் நன்மைகள்: -
ஒருவர் புறம் பேசுவதன் தீமைகளை அறிந்து அதைத் தவிர்ந்தவர்களாக, யாரைப் பற்றிப் புறம் பேசினார்களோ அவரிடம் மன்னிப்புக் கோரவேண்டும். பின்னர் மனந்திருந்தியவராக அழுது மன்றாடி அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரவேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்:-
39:53 “என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம்; நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான்; நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்’ (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.
39:54 ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்; (வேதனை வந்து விட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்”. (அல்-குர்ஆன் 39:53-54)
“நம் வசனங்களை நம்பியவர்கள் உம்மிடம் வந்தால், ‘ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)’ என்று (நபியே!) நீர் கூறும், உங்கள் இறைவன் கிருபை செய்வதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான்; உங்களில் எவரேனும் அறியாமையினால் ஒரு தீமையைச் செய்து விட்டு அதற்குப் பின், பாவத்தை விட்டும் திரும்பி, திருத்திக் கொண்டால், நிச்சயமாக அவன் (அல்லாஹ்) மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான். (அல்-குர்ஆன் 6:54)
எனவே சகோதர,சகோதரிகளே நாம் மனந்திருந்தியவர்களாக,இனி எக்காரணத்தை கொண்டும்,யாரைப்பற்றியும், புறம் பேச மாட்டேன்! ஒருவரின் கண்ணியத்தைக் குழைக்கும் விதத்தில் நடந்து கொள்ள மாட்டேன்! என்று உறுதி பூண்டவராக, செயல்பட்டு, அந்த உறுதியில் நிலைத்திருப்பாராயின் அதனால் அளப்பறிய நன்மைகள் அவருக்கு கிட்டும்.
நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்: -

“எவரின் நாவாலும், கைகளாலும் முஸ்லிம்கள் பாதுகாப்புடன் இருக்கின்றாரோ அவரே உண்மையான முஸ்லிம் ஆவார். அறிவிப்பவர்: அப்துல்லா பின் அம்ர் (ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவுத்.
“எவர் தமது இரண்டு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரண்டு தொடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் சரியாக பயன்படுத்த பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்கு சொர்க்கத்திற்க்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(நூல்-புகாரி)
மேலும் நாம் அமர்திருக்கின்ற ஒரு சபையில் நம்முடைய சகோதர, சகோதரியைப் பற்றிப் புறம் பேசப்படுமானால், நாமும் அவர்களுடன் சேர்ந்து அந்தப் பாவத்தில் சிக்கி உழலாமல் எந்த சகோதர, சகோதரியைப் பற்றிப் பேசப்படுகிறதோ அவருடைய கண்ணியத்தைக் காப்பாற்ற முயற்சிக்க வேண்டும்! இதை நபி (ஸல்) அவர்களும் வரவேற்றுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
தனது சகோதரனுடைய கண்ணியத்திற்கு இழுக்கு விளைவிப்பதை தடுப்பவரின் முகத்தை மறுமை நாளில் நரக நெருப்பை விட்டும் அல்லாஹ் தடுத்து விடுவான். (அறிவிப்பவர்: அபூதர்தா (ரலி) நூல்: அஹமத்)
அல்லாஹ் கூறுகின்றான்: -
34:12 (அவருக்குப் பின்னர்) ஸுலைமானுக்குக் காற்றை (வசப்படுத்திக் கொடுத்தோம்), அதனுடைய காலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் மாலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் இருந்தது; மேலும் நாம் அவருக்காக செம்பை ஊற்றுப் போல் உருகியோடச் செய்தோம்; தம் இறைவனுடைய அனுமதிப்படி அவருக்கு முன் உழைப்பவற்றில் ஜின்களிலிருந்தும் (வசப்படுத்திக் கொடுத்தோம்.) அவர்களில் எவர் (அவருக்கு ஊழியம்செய்வதில்) நம்முடைய கட்டளையைப் புறக்கணிக்கின்றாரோ, அவரைக் கொழுந்து விட்டெரியும் (நரக) வேதனையைச் சுவைக்கும் படி நாம் செய்வோம் (என்று எச்சரித்தோம்).
34:13 அவை ஸுலைமான் விரும்பிய, மிஹ்ராபுகளையும், சிற்பங்களையும், (தடாகங்கள் போன்ற) பெருங் கொப்பரைகளையும், நகர்த்த முடியா பெரும் பாத்திரங்களையும் செய்து கொண்டிருந்தன. ‘தாவூதின் சந்ததியினரே! நன்றி செய்யுங்கள். மேலும் என் அடியார்களில் நின்றும் நன்றி செலுத்துவோர் சொற்பமானவர்களே’ (என்று கூறினோம்).
34:14 அவர் (ஸுலைமான்) மீது நாம் மரணத்தை விதித்த போது அவர் இறந்து விட்டார் என்பதை, அவர் (சாய்ந்திருந்த) தடியை அரித்து விட்ட நிலத்தின் பூச்சி (கரையானைத்) தவிர வேறெதுவும் அந்த ஜின்களுக்கு அறிவிக்கவில்லை; அவர் கீழே விழவே; ‘தாங்கள் மறைவான விஷயங்களை அறிந்திருக்கக் கூடுமானால் (கடின உழைப்பாகிய) இழிவுதரும் வேதனையில் தாங்கள் தரி பட்டிருந்திருக்க வேண்டியதில்லை’ என்று ஜின்களுக்கு தெளிவாக தெரிந்தது. (அல்-குர்ஆன் 34:12-14)
மேற்கண்ட வசனத்தில்,
சுலைமான் (அலை) அவர்களுக்கு ஜின்களை வசப்படுத்தி தந்நதாகவும், அவைகள் சிரமமான பல பணிகளை சுலைமான் (அலை) அவர்களுக்காகச் செய்ததாகவும் அல்லாஹ் கூறுகிறான்.
சுலைமான் (அலை) அவர்கள் இறந்தது கூடத் தெரியாமல் ஜின்கள் வேலை செய்து கொண்டிருந்தது. அப்போது அவர் சாய்திருந்த தடியை கரையான் அரித்தவுடன் அவர் கீழே விழவே ஜின்களுக்கு சுலைமான் (அலை) அவர்கள் இறந்த விஷயம் தெரியலாயிற்று. அப்போது ஜின்களின் மனநிலையை, ”தாங்கள் மறைவான விஷயங்களை அறிந்திருக்கக் கூடுமானால் (கடின உழைப்பாகிய) இழிவுதரும் வேதனையில் தாங்கள் தரி பட்டிருந்திருக்க வேண்டியதில்லை’ என்று ஜின்களுக்கு தெளிவாக தெரிந்தது’ என்று அல்லாஹ் விளக்குகிறான். பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF