Saturday, July 21, 2012
நீரின்றி அமையாது உலகு!
தவித்த வாய்க்குத் தண்ணீர் கொடுப்பது புண்ணியம் என்று சொல்வார்கள். தமிழர் பண்பாட்டில் வீட்டிற்கு வருபவர்களுக்கு, முதலில் தண்ணீர் கொடுப்பது வழமை. கோடைக்காலத்தில் குடி தண்ணீர், மோர் இவையெல்லாம் வைத்து வெப்பத்தையும், தாகத்தையும் தணிக்க மக்கள் பொது நல மனப்பான்மையோடு பொது இடங்களில் வைக்கப்படுவதும் நாம் அறிவோம். ஆனால் காலப்போக்கில் இந்த நற்செயல்கள் காணக்கிடைக்குமா என்பது சந்தேகத்தில் நிற்கும் நிலை. மக்களுக்கு பொது நலம் குன்றிவிட்டது, சுயநலவாதிகளாக அனைவரும் மாறிவிட்டனர் என்பது மட்டும் இதன் பின்னணி காரணமாக இருக்கமுடியாது என்பது மட்டும் உண்மை. ஆம் நேயர்களே.
இன்றைக்கு உலக வரைபடத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் நாளடைவில் பெருகி வருவதும், பூமியின் முக்கால் பகுதி நீரால் சூழப்பட்டது ஆனால் குடிநீரின் அளவோ அருகிக்கொண்டிருக்கிறது என்ற நிதர்சனமும், உலக வெப்ப ஏறல் உள்ளிட்ட சுற்றுச் சூழல் தொடர்பான அச்சுறுத்தல்கள் மெதுவாக அதிகமாகி வருகிற உண்மையும், உலகில் அடுத்த நிகழும் மாபெரும் போர், நில எல்லைகளை ஆளுமைப்படுத்தும் நோக்கிலோ, அல்லது பொருளாதார வளங்களை தன்வயப்படுத்தும் நோக்கிலோ அமையாது ஆனால் தண்ணீருக்காக உயிர்பலிகள் நிகழும் கொடும்போர் மூளும் என்று சொல்லும் அறிஞர்கள், வல்லுனர்களின் கூற்றை நம்பசெய்கிறது.
வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் எவை என்று தேட புறப்பட்டால் உலகின் பல்வேறு நாடுகளின் பெயர்கள் நமது பட்டியலில் இடம்பிடிக்கும். உலக மக்கள் தொகையின் இருபெரும் புள்ளிகளான சீனாவும், இந்தியாவும், உலகின் மிக முன்னேறிய நாடாக மதிக்கப்படும் அமெரிக்காவும், ஏழைக் கண்டமான ஆப்பிரிக்காவின் பல நாடுகளும் வறட்சிக்கு முகம் கொடுத்துக்கொண்டிருக்கும் நிலை நாம் காணமுடிகிறது. இன்றைக்கு சீனாவின் சொங்சிங் மற்றும் சிச்சுவான் பகுதிகள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சந்தித்திராத வறட்சிக்கு உட்பட்டுள்ளன.
சுட்டெரிக்கும் வெப்பநிலை சொங்சிங் நகராட்சியின் மூன்றில் இருபகுதி ஆறுகள் மற்றும் நீரூற்றுகளையும், 471 நீர்த்தேக்கங்களையும், 10 ஆயிரம் கிணறுகளையும் வற்றச்செய்துள்ளது. இந்நகராட்சியின் மின் உற்பத்திக்கான நீர்த்தேக்கங்கள் அனைத்தும் செயலற்றுள்ளன. 1.31 மில்லியன் ஹெக்டேர் நிலப்பகுதி இந்த வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 80 லட்சம் மக்களும், 73 லட்சம் கால்நடைகளும் தற்காலிக தண்ணீர் பற்றாக்குறைக்கு உள்ளாயினர். சொங்சிங்கில் மட்டுமே இந்த வறட்சியால் 6.13 பில்லியன் யுவான் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு பகுதியின் இழப்பும், பாதிப்பும் இவ்வளவு, ஆனால் சீனாவின் மொத்தம் 11.13 ஹெக்டேர் நிலப்பரப்பு வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. 1 கோடியே 75 லட்சம் மக்களும், 1 கோடியே 66 லட்சம் கால்நடைகளும் குடிநீர் பற்றாக்குறைக்கு ஆளாயினர். சீனாவில் இழப்பு இப்படி என்றால், மற்ற நாடுகளும் இதே ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதை அறியும் போது நமது சிந்தனை கொஞ்சம் அச்சம் கலந்த கேள்விக்குறியில் சிக்கிக்கொள்கிறது.
கிட்டத்தட்ட 75 ஆண்டுகளுக்கு பிறகு கூடுதலான வெப்பநிலையுடன்கூடிய கோடைக்காலத்தை அமெரிக்க மக்கள் அனுபவித்துக்கொண்டுள்ளனர். அமெரிக்காவில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி நிலை, விவசாயத் தொழிலில் ஈடுபட்டவர்களை பாதிக்கும் என்பதோடு, இதன் தொடர்ச்சியாக உலக உணவு பொருள் வினியோகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நிலை ஏற்படுமோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. ஆய்வாளர்களை பொருத்தவரை சந்தேகம் என்ற நிலையைக் கடந்து, வறட்சியால் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறை, தண்ணீர் பற்றாக்குறையால் ஏற்படும் குறைவான வேளான் உற்பத்தி, குறைவான வேளான் உற்பத்தியால் ஏற்படும் உணவு பொருள் தட்டுப்பாடு என்று சங்கிலித் தொடராக பிரச்சனைகள் நீண்டு கடைசியில் உலக உணவு பெருள் வினியோகம் கடுமையாக பாதிக்கப்படும் நிலையும், நீலத்தங்கம் எனப்படும் தண்ணீர் எப்படி உலகை ஆட்டுவிக்கப்போகிறது என்பதும் எதிர்காலத்தில் நிகழப்போகும் உண்மைகள்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF