சேர்ன் கருத்தரங்கில்.
இயற்பியல் துறையின் மிக முக்கிய மைல் கல்லாக அடையாளங்காணப்பட்டுள்ள கடவுள் துகள் பற்றிய தமது ஆய்வு ஆராய்ச்சி தகவல்களை சுவிற்சர்லாந்தின் சேர்ன் நகரில் உள்ள கருத்தரங்கில் வைத்து இன்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.தம்மால் கண்டுபிடிக்கப்பட்டது, கடவுள் துகளுக்கு இசைவான இணை அணுவியல் துகள் (New Subatomic Particle) என ஹாட்ரன் மோதி (Large Hadron Collider - LHC) விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். கடவுள் துகள் உண்மையில் இருக்கிறதா? அப்படியாயின் இதன் நிறை (Mass) என்ன என்தை கண்டுபிடிக்க கடந்த 45 வருடங்களாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன.இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளின் படி, குறித்த நுண்துகளுக்கு 125.3 ஜிகா எலெக்ட்ரோன் வோல்ட்ஸ் (GeV) நிறை இருப்பதாகவும், புரோட்டோனை விட 113 மடங்கு அதிக நிறை கொண்ட இப்பொருள் ஒவ்வொரு அணுவிலும் இதயமாக தொழிற்படுவதாகவும் அறிவித்துள்ளனர்.
குறித்த ஆராய்ச்சியின் தொடக்க நிலை முடிவுகளாக இவை கணிக்கபட்டுள்ள போதும், இவை ஆச்சரியந்தருபவையாகவும், உணர்ச்சிகரமானதுமாக இருப்பதாக விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மோதல் வெடிப்பு!
இந்த ஆராய்ச்சிக்கு பெருந்தொகையான பணம் செலவிடப்படுவது தேவைதானா?
'ஐரோப்பிய நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இந்நேரத்தில், இந்த ஆராய்ச்சிக்கு பெருந்தொகை பணம் செலவழிக்கப்படுவது ஏன்? என குறித்த கருத்தரங்கின் போது ஜப்பான் மற்றும் சில வெளிநாட்டு நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த விஞ்ஞானிகள், இந்த ஆராய்ச்சிக்குழுவில் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் விஞ்ஞானிகள் தங்களது சுயநலன் பாராது உழைத்திருக்கின்றனர். அபிவிருத்தி அடைந்து வரும் ஆபிரிக்க, ஆசிய நாட்டவர்களும் இடம்பெற்றுள்ளனர்.
அடிப்படை அறிவியல் (Fundemental Science) என்பது இந்த உலகத்துக்கு பொதுவானது. அது தனித்து யாரும் உரிமை கோரமுடியாது. அடிப்படை அறிவியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் (Appoled Science) இரண்டையும் சமமாகவே உலக மக்கள் கருத வேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் உண்பவற்றில், ருசியானது எது? என்பது மட்டும் உங்களுக்கு தெரிந்திருந்தால் போதாது. நஞ்சானதும் எது என தெரிந்திருக்கவேண்டும். இந்த ஆராய்ச்சிகள் அடிப்படை அறிவியலுக்கும், பயன்பாட்டு அறிவியலுக்கும் இடையிலான ஆழமான முடிச்சுக்களை நோக்கி செல்வதாக குறிப்பிட்டனர்.
கடவுள் துகள் இருப்பதை உறுதிப்படுத்த பல வருடங்களாக ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு உருவாக்கப்பட்ட சுவிற்சர்லாந்து - பிரான்ஸ் எல்லையில் உள்ள சேர்ன் ஆராய்ச்சி மையம் உருவாக்கப்பட 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது. மேலும், சுற்றி அமைக்கப்பட்ட நிலக்கீழ் குழாய்கள் 17 மைல் தூரத்திற்கு செல்பவை என்பது குறிப்பிடத்தக்கது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF