Monday, July 16, 2012
முதன் முறையாக ஆதி மனிதனின் முழுமையான எலும்புக் கூடு கண்டுபிடிப்பு!
ஆதி மனிதன் ஒருவனின் முழுமையான எலும்புக் கூடு ஒன்று முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 20 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புக் கூடு இது என்றும் தெரிய வந்துள்ளது.தென் ஆப்ரிக்க விஞ்ஞானிகள் முதன் முறையாக ஆதி மனிதன் ஒருவனின் எலும்புக் கூட்டை கண்டுபிடித்துள்ளனர்.இதன் மூலம் ஆதி மனிதர்களின் உடல் கூறு குறித்த புதிய பரிமாணத் தகவல்கள் கிடைக்கலாம் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரின் வடக்கே ஒரு பாறைப் பகுதியில் 2008ஆம் ஆண்டு இந்த எலும்புக் கூடு கண்டுபிடிக்கப்பட்டது. இதை முழுமையாக ஆராய்ச்சி செய்வதற்காக ஆய்வகத்திற்குக் கொண்டு சென்றனர்.அதில் என்ன இருக்கிறது என்பதை கூட சரியாக கணிக்க முடியாததால், அந்தப் பாறைப் பகுதி ஆய்வகத்திலேயே இருந்து வந்தது.
இந் நிலையில் அந்தப் பாறையில் ஒரு பல் ஒட்டிக் கொண்டிருப்பதை ஆய்வக உதவியாளரான ஜஸ்டின் முகாங்கா பார்த்து விஞ்ஞானிகளிடம் தெரிவித்துள்ளார்.இதையடுத்து அந்த பாறையை தீவிரமாக ஆராய்ந்தனர். அப்போதுதான் அந்தப் பாறையில் ஒரு மனிதனின் எலும்புக் கூடு ஒட்டிய நிலையில் புதைந்திருந்தது தெரியவந்தது.இந்த மனிதனுக்கு நீண்ட கால்கள், கைகள் உள்ளன. மூளை சிறிதாக உள்ளது. முதல் வரிசை மனித இனத்தைச் சேர்ந்தவனாக இந்த ஆதி மனிதன் இருக்கலாம் என ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.எனவே இந்த மனிதன் குறித்த ஆய்வு பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த எலும்புக் கூட்டுக்கு கரபோ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த மனிதன் இறந்த போது அவனுக்கு 9 முதல் 13 வயதுக்குள் இருக்கலாம் என்று தெரிகிறது.இந்த எலும்புக் கூடு கண்டுபிடிக்கப்பட்ட பகுதியை உலக பாரம்பரிய பகுதியாக யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது. மனித குலத்தின் தொட்டில் என்றும் இப்பகுதி விஞ்ஞானிகளால் அழைக்கப்படுகிறது.
காரணம், இங்கு பல்வேறு தொல்பொருள் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன. மனிதனின் தோற்றம் குறித்த பல முக்கியத் தகவல்களும் இந்தப் பகுதியில் ஏற்கனவே கிடைத்துள்ளன.தற்போது ஒரு முழுமையான ஆதி மனிதனின் எலும்புக் கூடு கிடைத்திருப்பதால் இப்பகுதியில் மேலும் தீவிர சோதனைகள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF