Tuesday, August 2, 2011

இன்றைய செய்திகள்.

ரமழான் தலைப்பிறை தென்பட்டது; நோன்பு ஆரம்பம்.

புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் பல பிரதேசத்தில் தென்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை சற்றுமுன்னர் அறிவித்ததுள்ளது.
தற்கிணங்க இலங்கை வாழ் முஸ்லிம்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை நோன்பு நோற்கலாம் எனவும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தெரிவித்தது.
வழமைக்கு மாறாக பல தமிழ் சகோதரர்கள் ரமழான் மாதத்திற்காக தலைப்பிறையை பார்த்து கொழும்பு பெரியவாசாலுக்கு அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலின் மத்ரஸதுல் ஹமீதிய்ய மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது.
இந்த மாநாட்டில் அகில இலங்கை ஜம்இயமுல் உலமா சபை பிரதிநிதிகள், கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பிரதிநிதிகள், பள்ளிவாசல்கள், தைக்காக்கள் மற்றும் சாவியக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.
போர்க்குற்றவாளிகளான இலங்கை எம்.பி.க்கள் இந்திய நாடாளுமன்றில் இருக்கக்கூடாது! அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிப்பு.

இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் எம்.பி.க்கள் சிறப்பு விருந்தினர்களாக, இந்திய நாடாளுமன்ற மக்களவையில் கலந்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் குரல் எழுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மக்களவை கூடியதும் பேசிய சபாநாயகர் மீராகுமார், சிறப்பு விருந்தினராக வந்திருந்த இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் சாமல் ராஜபக்ச உள்ளிட்டவர்களை எம்பிக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
மேலும் இலங்கை எம்.பி.க்களை, மக்களவை உறுப்பினர்கள் இன்முகத்துடன் இந்தியாவிற்கு வரவேற்க வேண்டும் என்றும் மீராகுமார் கேட்டுக்கொண்டார்.
இதற்கு தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து எம்.பி.க்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது தம்பித்துரை எம்.பி. தலைமையில் எதிர்ப்பு தெரிவித்த அதிமுக உறுப்பினர்கள், போர்க்குற்றம் சாட்சியில் சிக்கியிருக்கும் இலங்கை பிரதிநிதிகள் இந்திய நாடாளுமன்றத்தில் இருக்கக் கூடாது என்றனர்.
உறுப்பினர்களின் எதிர்ப்பால் சபாநாயகர் மீராகுமாரால் உரையை வாசிக்க முடியவில்லை. விருந்தினர்களை வரவேற்று உபசரிப்பதுதான் இந்தியர்களின் கலாச்சாரம் என்று மீராகுமார் கூறியதையடுத்து உறுப்பினர்கள் அமைதியாகினர்.
அதிமுக எம.பி.க்களின் எதிர்ப்பு தொடர்பாக இலங்கை எம்.பி.க்களிடம் மன்னிப்பு கோரிய இந்திய மக்களவைத் தலைவர்.

இந்திய நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட கோஷத்துக்காக, இலங்கை பிரதிநிதிகளிடம் மக்களவைத் தலைவர் மீரா குமார் மன்னிப்புக் கோரினார்.
இதுதொடர்பாக மக்களவைச் செயலர் திங்கட்கிழமை வெளியிட்ட செய்தியில், நாடாளுமன்ற நடவடிக்கைகளை பார்வையிட வந்த இலங்கை பிரதிநிதிகளுக்கு எதிராக சில உறுப்பினர்கள் கோஷம் எழுப்பியதற்கு தாம் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்வதாக மக்களவைத் தலைவர் மீரா குமார் கூறியுள்ளார்.
அத்துடன், இந்த சம்பவத்துக்காக தாம் மன்னிப்புக் கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, நாடாளுமன்ற நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக, சமல் ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை எம்.பி.க்கள் குழு இன்று இந்திய மக்களவைக்கு வருகை தந்தது. அவர்களை மீராகுமார் வரவேற்றபோது, தம்பித்துரை உள்ளிட்ட அதிமுக எம்.பி.க்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சனல் -4 தொலைக்காட்சிக்கு சிறிலங்கா அழைப்பு.

களநிலவரங்களை அறிந்து கொள்வதற்கு சிறிலங்கா வருமாறு பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சிக்கு சிறிலங்கா அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, சனல்-4 தொலைக்காட்சியின் வெளிவிவகாரச் செய்திப் பிரிவின் செய்தியாளர் ஜொனாதன் மில்லருக்கும், சனல்-4 தொலைக்காட்சியின் தலைமைப்பீடத்துக்கும் இது தொடர்பாக அறிவித்துள்ளார்.
சனல்-4 தொலைக்காட்சி சிறிலங்காவின் களநிலவரங்களை அறிந்து கொள்வதற்கான பயணத்துக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
வவுனியா முகாம்களில் இடம்பெயர்ந்த மக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த போது அதனை படம்பிடிக்க முயன்ற சனல்-4 செய்தியாளர் குழுவை சிறிலங்கா அரசாங்கம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரச்சினைகளுக்கு தீர்வு காண அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் - ஜனாதிபதி.

பிரச்சினைகளுக்கு தீர்வு காண அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றியீட்டிய உறுப்பினர்கள் இன்று அலரி மாளிகையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
இந்தப் பதவிப் பிரமாண நிகழ்வுகளில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை அனைத்து தரப்பினரும் பேணிப் பாதுகாக்க வேண்டும்.
நாடாளுமன்றம், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களினால் மட்டும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.
உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களும் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கையில் இணைந்து செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள மனநோயாளிகள், போர் பற்றி நூல்களை வெளியிடுகின்றனர் – சரத் பொன்சேகா.

கொழும்பில் உள்ள மன நோயாளிகள் போர் பற்றி நூல்களை வெளியீடு செய்து வருவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
போர் வெற்றி தொடர்பில் தங்களது பெயர்களை மகா வம்சத்தில் பொறித்துக் கொள்வதில் இவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
போர் வெற்றி நோக்க படையினரை வழி நடத்திய என்னை சிறையில் அடைத்து விட்டனர்.
போரில் முக்கிய பங்காற்றிய 20 க்கும் மேற்பட்ட ஜெனரல்கள் மற்றும் பிரிகேடியாகள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
படைவீரர்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
யுத்த நீதிமன்றின் தீர்ப்பு தொடர்பான வழக்கு விசாரணைகளில் கலந்து கொண்டு திரும்பிய போது ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, யுத்த நீதிமன்றின் தீர்ப்பிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதே தவிர ஜனாதிபதிக்கு எதிராக அல்ல என சரத் பொன்சேகாவின் சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
சகல இன மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வு முன்வைக்கப்பட்டால் ஐ.தே.க. ஆதரவளிக்கும் - ரணில்.

சகல இன மக்களினாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வுத் திட்டமொன்றுக்கு தமது கட்சி பூரண ஆதரவளிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கும் முனைப்புக்களின் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்கும் அரசாங்கம் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டர் பேட்டுடன் நடைபெற்ற சந்திப்பின் போது ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின் போது பௌதீக ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் வகையில் வாக்களித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்கு அரசாங்கம் இணங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கும் நோக்கில் அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். 
வளைகுடா நாடுகளில் ரமலான் நோன்பு துவக்கம்.
புனித ரமலான் மாத நோன்பு வளைகுடா நாடுகளில் திங்கள்கிழமை முதல் தொடங்குகிறது.
ஐக்கிய அரபு சிற்றரசு, எகிப்து, செளதி அரேபியா, லெபனான், ஏமன், குவைத், கத்தார் உள்ளிட்ட நாடுகளில் நோன்பு தொடங்குகிறது.
நோன்பு தொடங்கும் நாளை அறிவிக்கும் குழு சனிக்கிழமை இதை அறிவித்தது. புனித ரமலான் மாதத்தில் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் சூரிய உதயம் முதல் மறைவு வரை உணவருந்தாமல், நீர் பருகாமல் விரதம் இருந்து மாலையில் தொழுகைக்குப் பிறகே நோன்பை முறித்து ஆகாரம் உண்பர்.
வளைகுடா நாடுகளில் இந்த மாதம் கடுமையான வெப்பம் நிலவுகிறது. பகல் பொழுது 14 மணி நேரம் நீள்கிறது. இறைவனின் கருணையால் நோன்பு நாள்கள் நல்லவிதமாக முடிந்து உலகம் முழுக்க அமைதியும் சமாதானமும் சகோதரத்துவமும் பரவ வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் முஸ்லிம்கள் நோன்பைத் தொடங்குகின்றனர்.
1500 நபர்களை கொலை செய்ய உத்தரவிட்ட போதை பொருள் கும்பல் தலைவன் கைது.
மெக்சிகோ நாட்டின் ஜுவாரஸ் நகர போதை பொருள் கும்பல் தலைவன் ஜோஸ் ஆன்டனியோ அகோஸ்டா ஹெர்னாண்டஸ்(வயது 33).
இவனை பற்றிய தகவல் தருபவர்களுக்கு 12,75,000 டொலர் பரிசளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அவன் கைது செய்யப்பட்டான். ஜோஸ் ஆன்டனியோ கடந்த 2010ம் ஆண்டு அமெரிக்க தூதரக பெண் அதிகாரியான லெஸ்லி என்ரிகியூஸ், அவரது கணவர் ஆர்தர் மற்றொரு அதிகாரியின் கணவர் சல்சிடோ ஆகியோரை சுட்டு கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்தான்.
மேலும் வடக்கு ஷிஹுவாஹுவா மாகாணத்தில் மட்டும் இதுவரை 1,500 பேரை தீர்த்து கட்ட உத்தரவிட்டுள்ளான். மெக்சிகோ நாட்டின் கலவரம் மிகுந்த ஜுவாரஸ் நகரத்தில் கடந்த 2010ம் ஆண்டில் மட்டும் 3,000 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வாடகைக்கு விடப்படும் இத்தாலிய அரண்மனை.
இத்தாலியில் மிகவும் புகழ்பெற்ற பழமையான அரண்மனை பராமரிப்புக்கான நிதியை அந்நாட்டு அரசு நிறுத்தியதால் தற்போது வாடகைக்காக விடப்படுகிறது.
இத்தாலியின் டுரின் நகருக்கு அருகே மன்னர் குடும்பங்கள் வாழ்ந்த புகழ்பெற்ற வெனாரியா அரண்மனை உள்ளது. சுமார் 80,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த பிரமாண்ட அரண்மனை 1815ம் ஆண்டில் இருந்து அரசின் கவனிப்பில் இருந்து வந்தது. நாட்டின் முக்கிய நினைவுச் சின்னங்களுள் ஒன்றாகவும் திகழ்கிறது.
இந்நிலையில் இத்தாலியில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அரண்மனை பராமரிப்புக்கான நிதியை அரசு நிறுத்தியது. அதனால் பாலடைந்த கட்டிடமாக மாறியது.
இதையடுத்து டிகோ தெலாவலே என்ற கோடீஸ்வரர் அந்த அரண்மனையை வாங்கினார். மேலும் அரண்மனையில் முதலீடு செய்த தொகையை எடுப்பதற்காக அங்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் நடத்துவதற்காக வாடகைக்கு விடுகிறார்.
இது குறித்து ஆல்பெர்டோ வனேலி என்பவர் கூறுகையில்,"பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட வெனாரியா அரண்மனையை பராமரிக்க தற்போது ஆண்டுக்கு ரூ.90 கோடி செலவாகிறது. அதில் பாதி தொகை தனியார் நன்கொடை மூலமாகவும், நுழைவுக் கட்டணம் மற்றும் பார்வையாளர்களுக்கு சேவைகள் வழங்குவதன் மூலம் மீதி தொகை திரட்டப்படுகிறது" என்று தெரிவித்தார்.
இத்தாலியில் நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சீனாவில் புகுந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல்: 20 பேர் பலி.
சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 பேர் பலியாயினர்.
பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் உள்ளது இந்த மாகாணம். இந்தப் பகுதியில் கடந்த பல காலமாகவே தீவிரவாதிகள் ஊடுருவல் இருந்து வருகிறது. சீன அரசுக்கு எதிரான போராட்டங்களும் நடந்து வருகின்றன. ஆனால் அதை வெளியில் சொல்லாமல் மறைத்து வருகிறது சீனா.
இந்நிலையில் பாகிஸ்தானின் கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் என்ற தீவிரவாத அமைப்பு ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயிற்சி முகாம்கள் அமைத்துள்ளது.
அங்கு பயிற்சி பெறும் தீவிரவாதிகள் ஷின்ஜியாங் மாகாணத்தில் ஊடுருவி அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதுவரை சிறிய அளவிலேயே தாக்குதல் நடத்தி வந்த இந்த அமைப்பு கடந்த இரு நாட்களாக ஷின்ஜியாங் மாகாணத்தில் உள்ள காஷ்கார் என்ற இடத்தில் புகுந்து பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
குண்டுகளையும் வெடிக்கச் செய்தனர். ஒரு ஹொட்டல் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அதற்கு தீ வைத்தனர். இதில் 20 பேர் பலியாகியுள்ளனர். தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளை சீன பொலிசார் சுட்டுக் கொன்றுவிட்டனர்.
இத்தாக்குதலை நடத்தியது பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் என்று சீனா குற்றம் சாட்டியுள்ளது. பாகிஸ்தானுக்கு மிக நெருக்கமான சீனாவே அந்த நாடு மீது புகார் கூறி்யுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியில் ஒரு பகுதியை சீனாவுக்கு அந்த நாடு தாரை வார்த்ததும், இப்போது அந்தப் பகுதி வழியாகத்தான் பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகள் சீனாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பகுதி வழியாகத் தான் சீனா-பாகிஸ்தான் இடையே பெரும்பாலான சரக்குப் போக்குவரத்தும், வர்த்தகமும் நடந்து வருகிறது.
ஷின்ஜியாங் மாகாணத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் இஸ்லாமியர்கள் மத சுதந்திரம் கோரி கடந்த ஆண்டுகளாகவே போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் அதை சீனா ராணுவத்தைக் கொண்டு அடக்கி வருகிறது. 2009ம் ஆண்டு இங்கு நடந்த பெரும் கலவரத்தில் 200 பேரை ராணுவம் கொன்று குவித்தது குறிப்பிடத்தக்கது.
எண்ணெய் ஏற்றிச் சென்ற 10 லொறிகளுக்கு தீவிரவாதிகள் தீ வைப்பு.
ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகளுக்கு எண்ணைய் ஏற்றிச் சென்ற 10 லொறிகளை தீவிரவாதிகள் கொளுத்தினர். இந்த சம்பவத்தால் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையைச் சேர்ந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் வீரர்கள் தங்கியுள்ளனர். இவர்களுக்கு தேவையான எண்ணைய் மற்றும் பிற பொருள்கள் பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து தரை வழியாக ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
தினமும் நூற்றுக்கணக்கான டேங்கர்களும், லொறிகளும் எண்ணைய் மற்றும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக் கொண்டு பாகிஸ்தானை கடந்து செல்கின்றன.
அதே போல நேற்று இரவு கராச்சி துறைமுகத்தில் இருந்து நூற்றுக்கணக்கான டேங்கர்  லொறிகள் சரக்குகளுடன் புறப்பட்டச் சென்றன. தேசிய நெடுஞ்சாலையில் அவை சென்று கொண்டு இருந்தன.
சிந்து மாநிலம், கைப்பூர் என்ற இடத்தில் அந்த டேங்கர் லொறிகளை தீவிரவாதிகள் தடுத்து நிறுத்தினர். பின்னர் எண்ணைய் ஏற்றிய டேங்கர் லொறிகளுக்கு அவர்கள் தீவைத்தனர். மொத்தம் 10 லாரிகளை தீவைத்து கொளுத்தினர்.

இந்த சம்பவத்தால், 3 லாரி டிரைவர்கள் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். டிரைவர்கள் 2 பேர் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்திருப்பதாக  மருத்துவர்கள் தெரிவித்தனர்.
டேங்கர் லாரிகளில் எரிந்த தீ ரோட்டோரத்தில் இருந்த ஹொட்டல் மற்றும் கடைகளுக்கும் பரவியது. இதில் 3 கடைகளும், ஒரு ஹொட்டலும் முழுவதுமாக எரிந்து சாம்பலாயின.
தொடர்ந்து 12 மணி நேரம் வீடியோ கேம் விளையாடிய நபர் பரிதாப மரணம்.
இங்கிலாந்தில் தொடர்ந்து 12 மணி நேரம் வெறித்தனமாக வீடியோ கேம் ஆடிய வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
லண்டனை சேர்ந்த கிரிஸ் ஸ்டெயின்போர்த் என்ற வாலிபருக்கு வீடியோ கேம் என்றால் எல்லாவற்றையும் மறந்து விடுவார். மணிக்கணக்கில் வீடியோ கேம் ஆடுவார்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் எக்ஸ்பாக்ஸ் என்ற வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார். நேரம் போனதே தெரியவில்லை. திடீரென மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிரிஸ் இறந்தார்.
பிரேத பரிசோதனையில் அவரது ரத்த நாளங்களில் ரத்தம் உறைந்து போனதால் மரணம் நிகழ்ந்துள்ளது என்று டாக்டர்கள் கூறினர்.
இதுகுறித்து கிரிஸின் தந்தை டேவிட் கூறுகையில்,"வீடியோ கேம் விளையாடுவது தவறில்லை. வீடியோ கேமை நான் குறை சொல்ல மாட்டேன். எதற்கும் எல்லை உண்டு. வெறித்தனமாக விளையாடினால் ஆபத்து என்பதை புரிந்து கொள்ள வேண்டும்" என்று கண்ணீருடன் கூறினார்.
எக்ஸ்பாக்ஸ் தயாரித்த நிறுவனம் கூறுகையில்,"கல்வி விழிப்புணர்வு திட்டத்தின் கீழ் பொறுப்புள்ள விளையாட்டுகளையே நாங்கள் ஊக்குவித்து வருகிறோம். வீடியோ கேம் விளையாடும்போது, அவ்வப்போது ஓய்வு கொடுங்கள். வேறு பணிகளில் கவனம் செலுத்துங்கள் என்று பரிந்துரை செய்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.
கடாபிக்கு ஆதரவான லிபிய தூதரக அதிகாரி வெளியேற்றம்.
லிபியாவின் மூத்த தூதரக அதிகாரியை ஜேர்மனி வெளியேற்றியது. அந்த அதிகாரி சர்வாதிகாரத்தை கடைபிடிக்கும் கடாபிக்கு ஆதரவாக செயல்பட்டதை தொடர்ந்து வெளியேற உத்தரவிட்டது.
ஜேர்மனி வெளியுறவுத் துறை அமைச்சக பெண் செய்தித் தொடர்பாளர் நேற்று இதனை உறுதிப்படுத்தினார்.
தூதரக அதிகாரியும், அவரது குடும்பத்தினரும் உடனடியாக வெளியேற வேண்டும் என ஜேர்மனி அரசு உத்தரவிட்டது.
நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்ட தூதரக அதிகாரி பெயர் ஹிஷாம் அல் ஷரீப். அவரை கடந்த ஜுலை 22ம் திகதி கடாபி அரசு பெர்லினில் உள்ள லிபிய தூதரகத்திற்கு நியமனம் செய்தது. குறிப்பிட்ட லிபிய தூதரக அதிகாரியை வெளியேற்றக் கூடாது என அவரது வழக்கறிஞர் வாதாடினார்.
பிரிட்டிஷ் அரசு கடந்த புதன்கிழமை 9 லிபிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது. பின்னர் லிபிய போராட்டக்காரர்களின் பிரதிநிதிகளை லண்டனுக்கு அனுப்ப பிரிட்டிஷ் அரசு கூறியது. இந்த சூழ்நிலையில் ஜேர்மனியும் லிபிய தூதரக அதிகாரியை நாடு திரும்ப உத்தரவிட்டுள்ளது.
பிபிசி பத்திரிக்கையாளர்கள் திடீர் வேலைநிறுத்தம்.
பிபிசி ஒலிபரப்பு துறை உலகம் முழுவதும் புகழ்பெற்ற செய்தி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தில் அனுபவம் வாய்ந்த பத்திரிக்கையாளர்கள் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறார்கள்.
இது பத்திரிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிபிசிக்கு அளிக்கும் நிதி ஒதுக்கீட்டை அரசு குறைத்ததை தொடர்ந்து ஊழியர்கள் குறைப்பு நடவடிக்கையை பிபிசி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
ஊழியர்களை திடீரென நீக்க கூடாது என தேசிய பத்திரிக்கையாளர்கள் அமைப்பு அறிவுறுத்தியது. அந்த அமைப்பின் உறுப்பினர்கள் நள்ளிரவில் வெளிநடப்பு செய்தனர்.
பிபிசி நிர்வாக நடவடிக்கையை கண்டித்து பிபிசி பத்திரிக்கையாளர்கள் 24 மணி நேர ஸ்டிரைக்கை துவக்கினர். இந்த வேலைநிறுத்தம் குறித்து யூனியனின் பொதுச் செயலாளர் மிச்லே ஸ்டானி கூறுகையில்,"கொர்ப்பரேஷனில் உள்ள 3 ஆயிரம் தேசிய பத்திரிக்கையாளர் சங்க உறுப்பினர்கள் உறுதியான ஆதரவு அளிக்கின்றனர்" என்றார்.
வேலை நீக்க நடவடிக்கையில் பிபிசி மாற்றம் குறித்து உறுப்பினர்கள் ஆவேசம் அடைந்துள்ளதாக ஸ்டானி தெரிவித்தார்.
இந்த ஆகஸ்ட் மாதம் 11ம் திகதி ஊழியர்கள், பிரதிநிதிகள் மற்றும் பிபிசி நிர்வாகம் இடையே பேச்சுவார்த்தை நடக்கிறது. இது குறித்து ஸ்டானி ஸ்றீட் கூறுகையில்,"தனி பத்திரிக்கையாளர்கள் பதவி இழப்பு குறித்து நிர்வாகம் பேசுவதில் அர்த்தம் இல்லை" என்றார்.
பிபிசி பத்திரிக்கையாளர்கள் வேலை நிறுத்தத்தால் உலகம் முழுவதும் 17 கோடி நேயர்கள் பாதிக்கப்படுவார்கள்.
சிரியாவில் போராட்டக்காரர்கள் 140 பேர் கொலை: ஹார்ப்பர் கண்டனம்.
சிரியாவில் ஜனாதிபதி பஷார் அசாத்திற்கு எதிராக போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ராணுவம் கொடூரத் தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில் 75 முதல் 140 போராட்டக்காரர்கள் வரை உயிரிழந்தனர். சிரியா ராணுவத்தின் இந்தத் தாக்குதலுக்கு கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் நேற்று கண்டனம் தெரிவித்தார்.
ஜனநாயக ஆட்சி மலர வேண்டும் என போராடுபவர்கள் மீது ராணுவம் அடக்குமுறை கையாள்வதற்கு ஹார்ப்பர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கண்மூடித்தனமாக ராணுவம் சுட்டதில் இறந்தவர்களின் உடல்கள் வீதிகளில் சிதறிக் கிடந்தன.
சிரியாவில் போராட்டம் தீவிரமாகியுள்ள நகரங்களில் சிரியா பீரங்கிகள் சரமாரியாக தாக்கின. துப்பாக்கி ஏந்திய வீரர்கள் பதுங்கிய நிலையில் போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்றனர்.
சிரியா ஜனாதிபதி பஷார் அசாத் ஜனநாயக ஆட்சி மலர வழி ஏற்படுத்த வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என ஹார்ப்பர் வலியுறுத்தினார். புனித ரமலான் மாதம் இன்று(திங்கள்கிழமை) துவங்குகிறது. இந்த நிலையில் சிரியா போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது.
புனித மாதத்திலும் போராட்டக்காரர்கள் அரசுக்கு எதிரான போராட்டத்தை அதிகரிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் வீதியில் நடமாட அச்சம் ஏற்படுத்தும் வகையில் சிரியா ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது.
மீண்டும் அமெரிக்கா - பாகிஸ்தான் உறவில் விரிசல்.
அமெரிக்கா - பாகிஸ்தான் இடையேயான உறவில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் பாகிஸ்தானில் அல்கொய்தா இயக்கத் தலைவர் பின்லேடன் சுட்டுக்கொள்ளப்பட்டதை அடுத்து இரு நாடுகளிடையேயான உறவில் விரிசல் ஏற்பட துவங்கியது.
பாகிஸ்தானிற்கு தெரிவிக்காமல் அமெரிக்கா மேற்கண்ட நடவடிக்கையில் ஈடுபட்டது. இது பாகிஸ்தானியர்களுக்கு எரிச்சலை உண்டு பண்ணியது.
இதனையடுத்து அமெரிக்க மக்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் விசயங்களில் அதிக கெடுபிடிகள் மற்றும் தீவிர கண்காணிப்பு பணிகளை பாகிஸ்தான் நடைமுறைப்படுத்தியது.
இந்நிலையில் அமெரிக்க தூதரகத்தை சேர்ந்த அதிகாரியான கேமரான் முண்டர் என்பவர் காராச்சிக்கு சென்றிருந்தார். ஆனால் அவர் நோ அப்செக்சன் சர்டிபிகேட் எதுவும் வைத்திருக்கவில்லை.
இதனால் அவர் இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் சிறைவைக்கப்பட்டார். தூதரக அதிகாரியான தன்னிடம் விசாரணை நடத்துவது கண்டனத்திற்குரியது என எதிர்ப்பு தெரிவித்தார்.
மேலும் இச்சம்பவம் குறித்து பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக டான்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இத்தாலி பிரதமர் பெர்லுஸ்கோனியை கொலை செய்ய கடாபி சதித்திட்டம்.
இத்தாலி பிரதமர் சில்வியா பெர்லுஸ்கோனியை படுகொலை செய்து விடுவதாக லிபியா தலைவர் கடாபி மிரட்டினார் என இத்தாலிய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடாபியின் சதித்திட்டம் குறித்து தனது நம்பிக்கைக்குரியவர்கள் மூலம் பெர்லுஸ்கோனி தெரிந்து கொண்டாலும் அதுபற்றி வெளியே தெரியாமல் நடித்தார் எனவும் அந்தப் பத்திரிகை கூறியுள்ளது.
சிரியாவில் ராணுவ அடக்குமுறை: 100 பேர் பலி.
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மீது ராணுவம் கையாண்ட அடக்குமுறையில் 100 பேர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.
இது சிரிய நாட்டு ராணுவத்தின் மிக மோசமான செயல் என்று இங்கிலாந்து, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
சிரியாவில் அரசுக்கெதிராக மார்ச் மாதத்திலிருந்துப் போராட்டம் நடந்து வருகிறது.
ஜனநாயகத்துக்காகப் போராடுவோர் மீது இந்த ஐந்து மாதத்தில் ராணுவம் நடத்திய மிகக் கொடூரமான தாக்குதல் இது என்று சிரியாவில் உள்ள சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்க கடன் உச்சவரம்பு: தொடர்ந்து நீடிக்கும் குழப்பம்.
அமெரிக்காவின் கடன் பெறும் உச்சவரம்பை உயர்த்தும் விடயத்தில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது.
அமெரிக்க பொருளாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள இந்த விடயத்தில் இறுதி முடிவு எடுப்பதில் குடியரசு - ஜனநாயகக் கட்சியினரிடையே கருத்தொற்றுமை ஏற்படவில்லை.
இது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா ஏற்கெனவே கோரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அரசு கடன் பெறுவதற்கான 14.3 டிரில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்த வேண்டுமென்பது அரசு, ஆளும் ஜனநாயகக் கட்சியின் விருப்பம். கடன் அளவை உயர்த்தினால்தான் செலவினங்களை சமாளிக்க முடியும்.
உச்சவரப்பை அதிகரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை. ஆனால் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளில் ஒன்றில் ஜனநாயகக் கட்சிக்கும், மற்றொரு அவையில் குடியரசுக் கட்சிக்கும் பெரும்பான்மை உள்ளது.
இதனால் கடன் உச்ச வரம்பை நிறைவேற்றும் மசோதா குடியரசுக் கட்சியினர் பெரும்பான்மையாக உள்ள அவையில் நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில் இப்பிரச்னைக்கு தீர்வு காண் வகையில் ஞாயிற்றுக்கிழமை, ஒபாமாவுடன் எதிர்க்கட்சியைச் சேர்ந்த செனட் உறுப்பினர்கள் சந்தித்துப் பேசினர்.
இதன் பின்னர் அவர்கள் கூறியது: கடன் உச்சவரம்பை உயர்த்த நாங்கள் சம்மதித்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அது உண்மையில்லை. பேச்சு தொடர்ந்து நடந்து வருகிறது என்று கூறினர்.
அமெரிக்க பொருளாதாரம் கடும் நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில் கடன் உச்ச வரம்பை அதிகரிக்க எதிர்க்கட்சிகள் ஒப்புக் கொள்ள வேண்டுமென்று ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. முக்கியமான இந்த கடன் விடயத்தில் இரு கட்சிகளும் எவ்வாறு எதிர்கொள்கின்றன என்பதை வைத்துத்தான் அத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு அமையும்.
முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அரசு செலவீனங்களைக் குறைப்போம் என்று வாக்குறுதி அளித்துத்தான் குடியரசுக் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
இப்போது கடன் உச்சவரம்பை உயர்த்த ஒத்துழைத்தால் அவர்களது வாக்குறுதிக்கு மாறாக நடந்து கொண்டதாகிவிடும். ஆனால் ஆகஸ்ட் 2ம் திகதிக்குள் கடன் உச்சவரம்பை அதிகரிக்கவில்லையென்றால், அமெரிக்க அரசு புதிய கடன்களைப் பெற முடியாது.
இதனால் பழைய கடன்களைத் திரும்பச் செலுத்த முடியாத நிலைக்கும், பிற செலவுகளை எதிர்கொள்ள முடியாத நிலைக்கும் அமெரிக்க அரசு தள்ளப்படும்.
இதனால் அமெரிக்கப் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்திக்கும். சர்வதேச அளவிலும் இது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Monday, August 1, 2011

அமெரிக்க அரசை விட அதிக பணம் வைத்துள்ள ஆப்பிள்- அதிர்ச்சி தகவல்!


அமெரிக்க அரசை விட ஆப்பிள் நிறுவனத்திடம் அதிக பணம் உள்ளதாம். உலகிலேயே சக்திவாய்ந்த அமெரிக்க அரசின் கஜானாவில் 73.76 பில்லியன் டாலர் உள்ளது. ஆனால் உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளிடம் 75.87 பில்லியன் டாலர் உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் இரு முக்கிய கட்சிகள் தேசத்தின் கடன் வரம்பை உயர்த்துவது குறித்து சண்டைப் போட்டுக்கொண்டுள்ளன. உலகிலேயே மிகப்பெரிய நிறுவனம் அமெரிக்காவின் எண்ணெய் நிறுவனமான எக்ஸான் மொபில். இரண்டாவது இடத்தில் ஆப்பிள் உள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டில் ஆப்பிள் ஐபோனை அறிமுகப்படுத்தியதில் இருந்தே அதற்கு ஏறுமுகம் தான். அடுத்த 3 ஆண்டுகளில் ஆப்பிள் கிடுகிடுவென்று வளர்ந்துவிட்டது. கடந்த ஆண்டு ஐபேடை அறிமுகப்படுத்தியது. அது கோடிக்கணக்கில் விற்று ஏகப்பட்ட லாபம். ஐபோன் மற்றும் ஐபேட் தான் தற்போது சந்தையில் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை 400 டாலரைத் தொட்டுள்ளது. ஆப்பிளுக்கு அடுத்தபடியான பணக்கார நிறுவனம் பில் கேட்ஸின் மைக்ரோசாப்ட். அந்த நிறுவனத்திடம் 40 பில்லியன் டாலர் உள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

இயற்கையின் அழகை வெளிப்படுத்தும் புகைப்படங்கள்.

National Geographic தொலைக்காட்சி நிறுவனத்தினால் எடுக்கப்பட்ட சிறந்த இயற்கை புகைப்படங்கள். இந்த புகைப்படங்கள் பார்ப்பதற்கு மிகவும் அற்புதமாக உள்ளது. 












National Geographic 012 wallpapers and stock photos
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

இன்றைய செய்திகள்.

பருத்தித்துறைல் வெள்ளை நிற நாகம் பிடிபட்டது.
ஐந்து அடி நீளம் கொண்ட அபூர்வமான வெள்ளை நிற நாகபாம்பு ஒன்று பருத்தித்துறையில் உள்ள ஒருவரின் வீட்டின் கோழிக் கூட்டில் பிடிக்கப்பட்டுள்ளது.பருத்தித்துறை, வியாபாரிமூலை, இராவாலை பகுதியில் சி.இராதாகிருஸ்ணன் என்பவரின் வீட்டிலுள்ள கோழிக்கூட்டில் இந்த வெள்ளைநிற நாகம் பிடிபட்டது.தற்போது இந்தப் பாம்பைப் பார்வையிடுவதற்காக பிரதேச மக்கள் ஆர்வத்துடன் அங்கு கூடிய வண்ணம் உள்ளனர்.இது தொடர்பாக வவுனியா வனவிலங்குப் பிரிவுக்கு வீட்டு உரிமையாளரால் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. 


இலங்கை மீது பொருளாதாரத் தடை வேண்டும்: ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தல்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தமிழ்ச் சமூகத்தின் மீது மேற்கொண்ட யுத்தக் குற்றச்செயல்களுக்காக இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்குமாறு மத்திய அரசாங்கத்திடம், தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
2008 – 2009 காலப்பகுதியில் பொதுமக்களை இலக்கு வைத்து அரசாங்கத்தால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அண்மையில் ஐ.நா. அறிக்கை குற்றஞ்சாட்டியுள்ளது.
வடக்கு கிழக்கு கரையோரப் பகுதியான யுத்த வலயத்திலும் யுத்த வலயமற்ற பகுதியிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் வைத்தியசாலை உட்பட பல பகுதிகளில் ஷெல் வீச்சுக்களை மேற்கொண்டது.
அத்துடன், பொதுமக்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டதுடன், அவர்களுக்கான மனிதநேய உதவிகளையும் வழங்க மறுத்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்குமாறு தமிழக சட்டசபையில் கடந்த ஜுன் மாதம் ஜெ.ஜெயலலிதா தீர்மானமொன்றை நிறைவேற்றியிருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் உரையாற்றிய ஜெ.ஜெயலலிதா, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் எம்.பி.கள் இது குறித்து விவாதிப்பார்களென கூறினார்.
ஆம் இலங்கைத் தமிழருக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகள் மற்றும் யுத்தக் குற்றச்செயல்கள் குறித்து தமிழக சட்டசபையில் எங்களது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிச்சயமாக விவாதிப்பார்கள் என அவர் கூறினார்.
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்குமாறும் நாம் வலியுறுத்துகின்றோம். இது குறித்து எங்களது நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதிப்பார்கள் என ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போலி ஆவணங்களை கொண்டு வாகனங்கள் இறக்குமதி.

இலங்கையில் பலம் பொருந்தியவர்கள் போலி ஆவணங்களை சமர்ப்பித்து வாகன இறக்குமதியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த ஆவணங்கள் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் பி.டி.எல். தர்மபால தெரிவித்துள்ளார்.
மோசடியின் அடிப்படையில் இலங்கைக்கு கடந்த 6 மாதங்களுக்குள் 6 சொகுசு வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் கடந்த வருடத்தில் 23 சொகுசு வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டன.
கடந்த வருடத்தில் மாத்திரம் 40 ஆயிர்ம் வாகனங்கள் இலங்கையின் பதிவுசெய்யப்பட்டன.
இவை தொடர்பிலான 18 லட்சம் ஆவணக் கோவைகளை தமது திணைக்களம் உரிய கட்டிட வசதிகள் இல்லாத நிலையில் பாதுகாத்து வைத்துள்ளதாக ஆணையாளர் குறிப்பிட்டார்.
போலியான ஆவணத்தின் கீழ் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுவதால் அரசாங்கத்துக்கு கடந்த வருடத்தின் இரண்டாம் காலாண்டில் மாத்திரம் 4.3 பில்லியன் ரூபாய்கள் நட்டம் ஏற்பட்டதாகவும் ஆணையாளர் கூறினார்.
ரணில் தமது விஜயத்தை இடையில் நிறுத்திவிட்டு நாடு திரும்புகிறார்.

தலைமைத்துவ பிரச்சினையை அடுத்து எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தமது பிரித்தானிய விஜயத்தை இடையில் முடித்துக்கொண்டு நாடு திரும்புகிறார் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.
ரணில் விக்ரமசிங்க, ஆகஸ்ட் 3 ம் திகதியே நாடு திரும்பவிருந்தார். எனினும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக தற்போது நாளைய தினமே அவர் நாடு திரும்பவுள்ளதாக ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.
இதேவேளை கட்சியின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்க விருப்பம் தெரிவித்த பிரதி தலைவர் கரு ஜெயசூரிய இந்தியா சென்றுள்ளார்.
வாகரையில் ஆதிவாசிகளுடன் ஜனாதிபதி.

உலக ஆதிவாசிகள் தினத்தினை முன்னிட்டு வாகரை, சல்லித்தீவில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆதிவாசிகளின் ஒன்றுகூடல் நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இலங்கை ஆதிவாசிகளின் தலைவர் உ.வன்னிலத்தோவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர்களான ஜகத் பாலசூரிய, ரீ.பி.ஏக்கநாயக்க, எஸ்.ஏ.சந்திரசேன, சாலிந்த திஸாநாயக, பிரதியமைச்சர்களான விநாயகமூர்த்தி முரளிதரன், எம்.எல்ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜயவிக்ரம, கிழக்கு முதல்வர் சிவனேசதுரை சந்திரகாந்தன், கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆதிவாசிகளின் தலைவர் உ.வன்னிலத்தோவிற்கு ஜனாதிபதி விசேட அடையாள அட்டை வழங்கிவைத்ததுடன் ஆதிவாசிகள் சுதந்திரமாக நடமாட்டம் செய்வது தொடர்பாக ஆதிவாசிகளுக்கும் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கும் இடையிலான ஒப்பந்தமும் இடம்பெற்றது. ஆதிவாசிகளின் பொருட்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகளும் இந்நிகழ்வில் இடம்பெற்றன.
நாட்டில் ஐம்பத்தேழு பிரதேசங்களில் இருந்து தலா 50 ஆதிவாசிகள் இந்த ஒன்றுகூடலில் கலந்துகொண்டதுடன் அவுஸ்திரலிய நாட்டு ஆதிவாசியொருவரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

எனினும் அவர் எப்போது நாடு திரும்புவார் என்ற விடயம் வெளியாகவில்லை.
நோர்வே படுகொலையாளி இலங்கை உள்ளிட்ட முஸ்லிம்கள் நாடு கடத்தப்பட வேண்டுமென கோரிக்கை.

அண்மையில் நோர்வேயில் பாரிய தாக்குதல்களை மேற்கொண்ட அன்டர்ஸ் பிஹிரிங் பிரீவிக் என்பவர் முஸ்லிம்கள் நாடு கடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் நாடு கடத்தப்பட வேண்டும் என்பதே அவரின் கோரிக்கையாகும்.1518 பக்கங்களைக் கொண்ட விசேட அறிக்கை ஒன்றில் அவர் இந்த விடயங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.2083 ஐரோப்பிய சுதந்திரப் பிரகடனம் என்ற தலைப்பில் அவர் அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளார்.
நான்காம் தலைமுறை யுத்த தந்திரோபாயங்களின் மூலம் ஐரோப்பாவை வெளிச் சக்திகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும்.இதேவேளை பயங்கரவாத அமைப்புக்கள் தொடர்பான தமது உதாரணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஹிஸ்புல்லாஹ் இயக்கங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.அதீதமான அமெரிக்க கலாச்சார தாக்கம் ஐரோப்பாவிற்கு ஆரோக்கியமானதல்ல.
ஐரோப்பாவில்  அமெரிக்க படை முகாம்கள் அதிகளவில் காணப்படுகின்றன.ஐரோப்பா, கனடா, பிலிப்பைன்ஸ், சீனா மற்றும் இலங்கை போன்ற நாடுகளிலிருந்து முஸ்லிம்கள் நாடு கடத்தப்பட வேண்டுமென அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
லிபிய அரசு தொலைக்காட்சி அலுவலகம் மீது நேட்டோ தாக்குதல்.
லிபியாவின் அரசு தொலைக்காட்சி அலுவலகம் மீது நேட்டோ படை நேற்று தாக்குதல் நடத்தியதாக லிபிய அதிகாரிகள் கூறினர்.
இந்தத் தாக்குதல் விடிவதற்கு முன்பாக நடந்தது. இதில் ஒளிபரப்பு துறை ஊழியர்கள் கொல்லப்பட்டனர். 15 பேர் காயம் அடைந்தனர் என லிபியா அரசின் ஆங்கில செய்தி சேனல் இயக்குனர் காலித் பசேல்யா கூறினார்.
இந்தத் தாக்குதல் சர்வதேச தீவிரவாதம் என்றும் அவர் கூறினார். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தை மீறுவதாகவும் இது உள்ளது என அவர் தெரிவித்தார்.
லிபிய தொலைக்காட்சியின் தலைமையகத்தில் நடந்த தாக்குதலுக்கு நேட்டோ பொறுப்பேற்றது. நேட்டோ தாக்குதலில் லிபிய அரசின் 3 தொலைக்காட்சி ஒளிபரப்பு செயற்கைகோள்கள் செயல் இழந்தன என்று நேட்டோ தெரிவித்தது.
லிபிய பத்திரிக்கையாளர்களை பாதுகாக்க சர்வதேச பத்திரிக்கையாளர்கள் முன்வர வேண்டும் என பசேல்யா வேண்டுகோள் விடுத்தார். நாங்கள் லிபிய அரசு தொலைக்காட்சி ஊழியர்கள் ராணுவ இலக்கு நபர்கள் அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
நேட்டோ படைகள் தாக்குதலை துவங்கி 5 மாதம் ஆகிறது. இந்த கால கட்டங்களில் கடாபிக்கு ஆதரவாக அரசு தொலைக்காட்சிகள் செய்திகள் ஒளிபரப்பி ஆதரவு தெரிவித்து வந்தன.
லிபிய தொலைக்காட்சிகள் தற்போதைய கடாபி ஆட்சியை ஆதரிக்கின்றன. நேட்டோ தாக்குதலை எதிர்க்கின்றன. நேட்டோ தாக்குதல் நடத்திய போதும் லிபிய அரசு தொலைக்காட்சிகள் தடை இல்லாமல் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் ஒபாமாவின் செல்வாக்கு சரிந்தது: ஆய்வில் தகவல்.
அமெரிக்க பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால் அதிபர் ஒபாமாவின் செல்வாக்கு சரிந்து வருவதாக கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.
ஒபாமாவின் பதவி காலம் அடுத்த ஆண்டு முடிவடைய உள்ளதால் 2012 நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
அதில் ஜனநாயக கட்சி சார்பில் இரண்டாவது முறையாக ஒபாமா போட்டியிட உள்ளார். இந்நிலையில் சந்தை ஆய்வு நிறுவனமான தி காலப் ஆர்கனைசேஷன் ஒபாமாவின் செல்வாக்கு பற்றி அமெரிக்காவில் கருத்து கணிப்பு நடத்தியது.
அதன் விவரம் பின்வருமாறு: கடந்த 2009ம் ஆண்டு ஜனவரியில் அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்றார். அப்போது அவருக்கு பொதுமக்கள் மத்தியில் 50 சதவீதத்துக்கு மேல் ஆதரவு இருந்தது. இடையில் சரிந்த போதிலும் கடந்த ஜூன் மாதத்திலும் 50 சதவீதமாக இருந்தது.
மே மாதத்தில் அமெரிக்காவுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்க படை கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜூலை மாத நிலவரப்படி 41 சதவீதம் பேர் மட்டுமே ஒபாமாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எனினும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இவரது போட்டியாளரைவிட இது அதிகம்தான்.
இவருடைய ஜனநாயக கட்சியில் இவருக்கு 72 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் குடியரசு கட்சியினரில் 13 சதவீதம் பேர் மட்டுமே ஒபாமாவின் செயல்பாடுகளை பாராட்டி உள்ளனர்.
கட்சி சாராதவர்களில் 34 சதவீதம் பேர் ஒபாமாவின் செயல்பாடு திருப்தி அளிப்பதாக கூறியுள்ளனர். 2010 ஆகஸ்ட் முதல் அமெரிக்க பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது என 52 சதவீதம் பேரும், 2009 மார்ச் முதல் சரியில்லை என 75 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.
துனிஷிய முன்னாள் அதிபருக்கு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை.
துனிஷிய நாட்டின் முன்னாள் அதிபர் பென் அலி மீதான கடத்தல், ஊழல் மற்றும் சொத்து மோசடி உள்ளிட்ட வழக்குகளின் விசாரணை முடிந்து அதிபருக்கு 16 ஆண்டுகள் சிறைத் தண்டணை விதிக்கப்பட்டது.
துனிஷிய நாட்டில் 23 ஆண்டுகளாக கொடுங்கோல் ஆட்சி நடத்தியவர் பென் அலி. இவர் மீது மக்களிடையேயான எதிர்ப்பு அதிகரித்து போராட்டம் வெடித்தது. இதனால் கடந்த ஜனவரி மாதம் நாட்டை விட்டு சவுதி அரேபியாவிற்கு தப்பியோடி அங்கு தலைமறைவானார்.
இந்நிலையில் அதிபர் மீதான போதைப் பொருட்கள், ஆயுதங்கள் பதுக்கல், சொத்து மோசடி, ஊழல் உள்ளிட்ட வழக்குகளின் விசாரணை துனிஷ் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. பென் அலியை தங்களிடம் ஒப்படைக்குமாறு துனிஷிய நாடு எழுப்பியுள்ள கோரிக்கையை சவுதி அரேபியா நிராகரித்துவிட்டது.
பென் அலியின் மீதான வழக்குகளின் விசாரணை முடிந்த துனிஷ் நீதிமன்றம் தனது தீ்ர்ப்பில் முன்னாள் அதிபர் பென் அலிக்கு 16 ஆண்டு சிறைத் தண்டனையும், அவரது மனைவிக்கு 19 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்தது. மேலும் இருவருக்கும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ஈராக்கில் உரிய பாதுகாப்பு இல்லை: அமெரிக்க அதிகாரி கவலை.
கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு ஈராக்கில் உரிய பாதுகாப்பு இல்லை என அமெரிக்க அதிகாரி ஸ்டூவர்ட் பிரஷன் கவலை தெரிவித்துள்ளார்.
இந்த அதிகாரி ஈராக்கில் மறுகட்டமைப்பு பணிகளை பார்வையிடும் அதிகாரி ஆவார். ஈராக்கில் ஷியா தீவிரவாதிகளால் நடந்த தாக்குதல் அபாயகரமாக உள்ளது.
இந்த தீவிரவாதிகள் ஈரானில் பயிற்சி பெற்று உள்ளனர் என்ற தனது ஏஜென்சி அறிக்கையை அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு அனுப்பி உள்ளார்.
ஈராக் - அமெரிக்கா பாதுகாப்பு ஒப்பந்தப்படி இந்த ஆண்டு இறுதியில் 44 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் நாடு திரும்ப உள்ளனர். இந்த நிலையில் ஷியா தீவிரவாதிகள் குறித்து மறுகட்டமைப்பு ஏஜென்சி எச்சரித்து உள்ளது.
அமெரிக்க துருப்புகள் விலகல் குறித்து கடந்த வாரம் ஈராக் பிரதமர் நுரி அல் மாலிசி, அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோ பிடேனுடன் ஆலோசனை நடத்தினார்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஈராக்கிய பொதுமக்கள் 248 பேரும் பாதுகாப்பு படையினர் 193 பேரும் உயிரிழந்துள்ளனர்.
100 க்கும் மேற்பட்டவர்கள் பெரும் ஈராக்கிய நகரங்களில் மனித வெடிகுண்டுகளால் கொல்லப்பட்டுள்ளனர். ஜூன் மாதத்தில் 15 அமெரிக்க துருப்புகள் மற்றும் சர்வதேச மேம்பாட்டுக்கான ஏஜென்சியின் ஒப்பந்ததாரர் ஒருவரும் கொல்லப்பட்டு உள்ளனர்.
கயானா நாட்டில் விமான விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்.
அமெரிக்கா நியூயோர்க்கில் இருந்து கரீபியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737-800 ரக பயணிகள் விமானம் கயானா தலைநகர் ஜார்ஜ்டவுனில் உள்ள ஜெட்டிஜகன் விமான நிலையத்துக்கு நேற்று புறப்பட்டு வந்தது.
இதில் 157 பயணிகளும், 6 விமான ஊழியர்களும் இருந்தனர். நேற்று நள்ளிரவு 1.32 மணியளவில் அந்த விமானம் ஜெட்டிஜகன் விமான நிலையத்தில் தரை இறங்கியது. அப்போது ஈரப்பதமான தட்பவெட்ப நிலை நிலவியது.
இதனால் நிலை தடுமாறிய விமானம் சுமார் 7,400 அடி நீள ஓடுதளத்தில் குட்டிகரணம் அடித்தபடி சென்றது. இறுதியில் இரண்டாக பிளந்தது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் விமானத்தின் கதவை திறந்தபடி முண்டியடித்துக் கொண்டு வெளியேறினார்கள்.

இதற்கிடையே விமான நிலைய அதிகாரிகளும், மீட்பு படையினரும் விரைந்து வந்தனர். அவர்கள் விமானத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி கிடந்தவர்களை உயிருடன் மீட்டனர்.
இந்த விபத்தில் பிளாடெல்பியாவை சேர்ந்த கீதா ராம்சிங்(41) உள்பட பலர் காயம் அடைந்தனர். அவர்களில் பலரின் கால் எலும்பு முறிந்தது. ஆனால் உயிர் சேதம் ஏதுமில்லை.
இந்த விமானம் இரண்டாக பிளந்து நின்ற இடம் ஓடுதளத்தின் இறுதி பகுதியாகும். அதன் அருகே 200 அடி ஆழத்தில் பள்ளத்தாக்கு உள்ளது. அதில் விழுந்து இருந்தால் ஏராளமான உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும். அதிர்ஷ்டவசமாக அதுபோன்று நடக்கவில்லை என்று கயானாவின் அதிபர் பாரத் ஜக்தேவ் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. அது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விமான விபத்து சம்பவம் கயானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF