Tuesday, November 6, 2012

பூமியிலும் அதற்கு அப்பாலும் உயிர் வாழ்க்கையை உணர உதவும் விண்கற்கள்!


நமது சூரிய மண்டலத்தில் தரையுடைய கிரகமான செவ்வாய்க்கும் மிகப் பெரிய வாயுக் கோளமான வியாழனுக்கும் இடையே அடர்த்தியான விண்கற்கள் பெல்ட்(Asteroid belts) காணப் படுகின்றது. இதைப் போலவே விண்வெளியில் சூரிய மண்டலத்துக்கு அப்பால் பல நட்சத்திரங்களை சுற்றியும் மிகப் பெரிய வாயுக் கோள்களுக்கு அருகே விண்கற்கள் பட்டைகள் காணப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் பூமி போல் உயிர் வாழ்க்கை நிலவும் கிரகங்களில் வரலாற்றின் திருப்புமுனையாக விண்கற்களின் தாக்குதல் அமைவதுண்டு. இதன் மூலம் பல உயிர் இனங்கள் அழிவடைகின்றன. பூமியில் வாழ்ந்த இராட்சத ஊர்வனவான டைனோசர்களின் அழிவு இதற்கு சிறந்த உதாரணம்.ஆனால் சமீபத்தில் நாசா விஞ்ஞானிகள் நட்சத்திரங்களைச் சுற்றி விண்கற்கள் பெல்ட் அமைந்துள்ள அளவு மற்றும் இருப்பிடம் ஆகியவை பூமியில் உயிர்வாழ்க்கை இருப்பது போல் சூரிய குடும்பத்துக்கு வெளியேயும் எங்கெங்கு உயிர் வாழ்க்கை இருக்கிறது என்பதற்கான பதிலை தரவல்லன எனக் கூறியுள்ளனர்.
சூரிய குடும்பம் தோன்றியதிலிருந்து பல மில்லியன் கணக்கான விண்கற்கள் மிகப்பெரிய வாயுக் கோளமான வியாழனின் ஈர்ப்பினால் பாதிக்கப்பட்டு பெலிட்களாக அமைந்துள்ளன. இதனால் அக்கோளத்துக்கு அருகே உள்ள தரையுடைய பூமியில் விண்கற்களின் தொடர்ச்சியான தாக்கம் நிகழாமல் உயிர் வாழ்க்கை பாதுகாக்கப் பட்டு வந்துள்ளது.இதனால் ஏனைய நட்சத்திரங்களைச் சுற்றியும் இந்த விண்கற்கள் பட்டையின் அமைவிடமும், அளவும் (Position and Size) அதற்கு அருகே உள்ள உயிர் வாழ்க்கை நிகழக்கூடிய தரையுடைய கிரகங்கள் இருப்பதை ஊர்ஜிதப் படுத்த வல்லது.
மேலும் அவ்வப்போது இத்தகைய உயிர் வாழ்க்கை நிகழக்கூடிய கோள்களுடன் வந்து மோதும் விண்கற்கள் உயிரினங்களின் அழிவுக்கு மட்டுமல்லாது அவை தம்மைப் பாதுகாக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மூலம் பரிணாமம் அடைவதற்கும் உதவுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.இதேவேளை நாசாவின் 'ஸ்பிட்ஷெர்' விண் தொலைக்காட்டி சூரிய குடும்பம் போலவே விண்கற்கள் பட்டையுடைய 90 நட்சத்திரங்களை படம் பிடித்துள்ளது. மேலும் இவற்றை சுற்றி வரும் 520 மிகப் பெரிய கிரகங்களில் (அல்லது வாயுக் கோளங்களில்) வெறும் 19 கிரகங்களே விண்கற்கள் பனிப்பட்டைக்கு வெளியே அமைந்துள்ளன. எனவே அவதானிக்கப் பட்ட விண்கற்கள் பெல்ட் அமைந்துள்ள நட்சத்திரங்களில் வெறும் 4% வீதமே உயிர் வாழ்க்கை இருக்கலாம் என ஊகிக்கக் கூடிய சிறிய கிரகங்களைக் கொண்டிருப்பதாக கருதப் படுகின்றது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF