Saturday, July 2, 2011

இன்றைய செய்திகள்.

அமைச்சரவைப் பத்திரங்கள் இனிவரும் காலங்களில் மும்மொழிகளிலும் சமர்ப்பிக்கப்படவேண்டும்: ஜனாதிபதி.

அமைச்சரவைக்கான மசோதாக்களை இனிவரும் காலங்களில் மும்மொழிகளிலும் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போதே ஜனாதிபதி பிரஸ்தாப உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அதன் பிரகாரம் இனிவரும் காலங்களில் அமைச்சரவை மசோதாக்கள், பாராளுமன்ற மசோதாக்கள், பொதுமக்கள் கவனத்துக்காகச் சமர்ப்பிக்கப்படவுள்ள ஆவணங்கள், சுற்றறிக்கைகள், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் உடன்படிக்கைகள் போன்ற அனைத்தும் மும்மொழிகளிலுமான மொழிபெயர்ப்பைக் கொண்டிருக்க வேண்டும்.ஆயினும் அந்த ஆவணங்கள் ஒரு சில அதிகாரிகளின் கவனத்துக்கு சமர்ப்பிக்கப்படுகின்றவையாக இருக்கும் பட்சத்தில் மாத்திரம் அந்தந்த மொழிகளில் மட்டும் சமர்ப்பிக்கப்பட்டாலும் போதும் என்பதாகவும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சரவை வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.
உலகின் மிக விலை உயர்ந்த கார் அறிமுகம்.
உலகிலேயே விலை உயர்ந்த அதிவேக சூப்பர் கார் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதன் முதலாக பீங்கானை பயன்படுத்தி தயாராகியிருக்கும் கார் விலை ரூ.9.95 கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.உலக அளவில் கார் தயாரிப்பில் முதலிடத்தில் இருக்கும் நிறுவனம் ஜப்பானை சேர்ந்த டொயோட்டோ. இதுவரை 72 லட்சம் கார்களை விற்றிருக்கிறது.இரண்டாம் இடத்தில் இருப்பது அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ். இது 65 லட்சம் கார்களை விற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் இருக்கிறது ஜேர்மனியை சேர்ந்த வோக்ஸ்வேகன் குழுமம். இக்குழுமம் 63 லட்சம் கார்கள் விற்றுள்ளது.
இக்குழுமத்தின் கீழ் 342 நிறுவனங்கள் இருக்கின்றன. அதில் ஒன்றாக பிரான்சின் மோல்ஷெய்ன் நகரை தலைமையிடமாகக் கொண்டு 2000ல் தொடங்கப்பட்ட நிறுவனம் "புகாட்டி". பல கோடி மதிப்புள்ள கார்கள், ஸ்போர்ட்ஸ் கார்களை தயாரித்து வருகிறது.இதன் புதிய தயாரிப்பான "புகாட்டி வேரன் இ.பி.16.4" என்ற ஸ்போர்ட்ஸ் கார் ஜேர்மனி தலைநகர் பெர்லினில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் வெளிப்புற பாகங்கள் பெரும்பாலும் பீங்கானை(போர்ஸ்லைன்) கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் பீங்கான் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் கொனிங்லிச் போர்சீலியன் நிறுவனம் இதை வடிவமைத்து கொடுத்திருக்கிறது. இதன் விலை ரூ.9.95 கோடி. மணிக்கு 431 கி.மீ. வேகம் வரை போகும். இதன்மூலம் உலகிலேயே விலை உயர்ந்த கார், உலகிலேயே அதிவேக ஸ்போர்ட்ஸ் கார் என்ற பெருமையை பெற்றுள்ளது.இதுபற்றி புகாட்டி நிறுவன இன்ஜனியர்கள் கூறுகையில்,"அதிவேக கார்களில் பீங்கானை பயன்படுத்த வேண்டும் என்பது புகாட்டி நிறுவனர் எட்டோர் புகாட்டியின் விருப்பம். அவரது கனவை நனவாக்கும் வகையில் அவரது மறைவுக்கு பிறகும் புகாட்டி நிறுவனம் தொடர்ந்து ஆய்வு செய்து வந்தது. அவரது விருப்பம் தற்போது நிறைவேறியுள்ளது" என்றனர். 


பாகிஸ்தானில் விமான தாக்குதல் தொடர்ந்து நடைபெறும்: அமெரிக்கா.
ஆப்கானிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்களை மேற்கொள்வதற்காக பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள ஜகோபாபாத் மற்றும் ஷாம்சி என்ற இரு விமானப்படை தளங்கள் அமெரிக்க ராணுவத்துக்கு வழங்கப்பட்டிருந்தன.ஷாம்சி விமானப்படை தளத்தை ட்ரோன்(ஆளில்லா விமானம்) தாக்குதலுக்கு அமெரிக்க ராணுவம் பயன்படுத்தியது. பாகிஸ்தான் விமான தளத்தை பயன்படுத்தி அந்த நாட்டில் உள்ள வசிரிஸ்தான் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்தது.
தீவிரவாதிகள் மீது தான் தாக்குதல் நடத்துகிறோம் என பதில் தெரிவித்த அமெரிக்கா பாகிஸ்தான் எதிர்ப்பை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் கடந்த வாரம் பேட்டியளித்த பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் அகமது முக்தர்,"ஷாம்சி விமானப்படை தளம் மூடப்பட்டுவிட்டது. அங்கிருந்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்படவில்லை" என்றார்.இதற்கு பதில் அளித்துள்ள அமெரிக்க அதிகாரிகள் ஷாம்சி தளத்தை காலி செய்யவில்லை. பாகிஸ்தானில் ட்ரோன் தாக்குதல் தொடர்ந்து நடக்கும் என கூறியுள்ளனர்.
ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய அரசு முடிவு: ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.
இங்கிலாந்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை ரத்து செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.இந்த நிலையில் நேற்று நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து நேற்று ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்கள் பணிகளுக்கு செல்லவில்லை. அனைவரும் வேலை நிறுத்தம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதனால் பள்ளிகள் மூடப்பட்டன. அரசு அலுவலகங்களில் பணிகள் முடங்கின. இவை மட்டுமின்றி விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.இங்கிலாந்தின் முக்கிய விமான நிலையங்களான ஹீத்ரு, மான் செஸ்டர் போன்ற இடங்களில் ஊழியர்கள் பணிக்கு வராததால் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன.கடவுச்சீட்டு அலுவலகங்களில் இருந்து ஊழியர்கள் வெளி நடப்பு செய்தனர். வரி வசூலிப்பு அலுவலகங்கள் மற்றும் வேலை வாய்ப்பு மையங்களும் மூடப்பட்டன நேற்று அடையாள வேலை நிறுத்தம் மட்டுமே நடைபெற்றது. இன்னும் சில மாதங்களில் போராட்டம் தீவிரமாகும் என அரசு ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இ.கோலி பக்டீரியா பரவலுக்கு எகிப்து விதைகளே காரணம்: ஐரோப்பிய நோய் கட்டுப்பாட்டு வாரியம்.
உயிருக்கு அபாயம் விளைவிக்க கூடிய இ.கோலி என்ற பக்டீரியா முதலில் ஜேர்மனியில் பரவியது. இந்த நுண்ணுயிர் தாக்கியதில் 48 பேர் ஜேர்மனியில் இறந்தனர்.இந்த இ.கோலி பாதிப்பு பிரான்ஸ் நாட்டிலும் ஏற்பட்டது. இந்த இ.கோலி பக்டீரியா எகிப்தில் இருந்து 2009 மற்றும் 2010ம் ஆண்டு வந்த விதைகள் மூலமாக பரவி உள்ளது என ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்து உள்ளது.
இ.கோலி பாதிப்பால் ஜேர்மனியில் நான்கு ஆயிரம் பேர் பாதிப்படைந்தனர். இதே போன்று பிரான்ஸ் போர் டெக்ஸ் பகுதியில் 15 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த விதைகள் பிரிட்டன் தாம்சன் மற்றும் மார்கென் நிறுவனத்தில் இருந்து பெறப்பட்டது என முதலில் கூறப்பட்டது.இருப்பினும் இதற்கான தொடர்பு உறுதிப்படுத்தப்படவில்லை. இதைத் தொடர்ந்து தாம்சன் அன்ட் மார்கென் நிறுவன விதைகளை உணவுத் தர முகமை ஆய்வு செய்து வருகிறது.
கடந்த 2010ம் ஆண்டு எகிப்தில் இருந்து ஜேர்மனிக்கு விதைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அதே போன்று 2009ம் ஆண்டு எகிப்தில் இருந்து பிரிட்டனுக்கும் அங்கிருந்து பிரான்சுக்கும் விதைகள் அனுப்பப்பட்டன.இ.கோலி பக்டீரியா பரவலுக்கு எகிப்து விதைகளே காரணம் என்று தற்போது ஐரோப்பிய நோய் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது.
உலகின் மிக நீளமான பாலம்.
சீனாவில் கடலுக்கு மேலாக கட்டப்பட்ட உலகின் அதி நீளமான பாலம் பொதுமக்களின் பாவனைக்கென திறந்து வைக்கப்பட்டுள்ளது.குயிங்டாஹோ ஹய்வான் எனப் பெயரிடப்பட்டுள்ள 42.4 கிலோமீற்றர் நீளமான இப்பாலம் சீனாவின் கிழக்குக் கரையோர நகரான குயிங்டாஹோவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இப்பாலமானது இதுவரை காலமும் உலகின் நீளமான பாலம் என்ற பெருமையைப் பெற்றிருந்த அமெரிக்க லூசியான மாநிலத்தில் அமைந்துள்ள பாலத்தினை விட 3 மைல்கள் நீளம் கூடியதாகும்.வெறும் 4 வருடங்களில் சுமார் 960 மில்லியன் பவுண்கள் செலவில் இப்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இப்பாலமானது 5,200 இற்கும் அதிகமான தூண்களை கொண்டுள்ளது.தினசரி 30 ஆயிரம் கார்கள் இப்பாலத்தில் பயணிக்கக் கூடியதாகவிருக்குமென தெரிவிக்கப்படுகிறது..
அணு உலைகளை மூடும் திட்டம்: பாராளுமன்றத்தில் ஒப்புதல்.
ஜேர்மனியில் எதிர்வரும் 2022ஆம் ஆண்டிற்குள் 8 முக்கிய அணு உலைகளை நிரந்தரமாக மூடிவிடுதற்கான ஒப்புதல் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.ஜப்பானில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட சுனாமி தாக்குதலில் புகுஷிமா, டெய்சி ஆகிய அணு உலைகள் வெடித்து சிதறின. இதனால் கதிர்வீச்சு தாக்குதல் ஏற்பட்டது.
இதன் ‌எதிரொலியாக கடந்த மே மாதம் 30ம் திகதியன்று ஜேர்மனி தங்களது நாட்டில் உள்ள 8 முக்கிய அணு உலைகளை வரும் 2022ஆம் ஆண்டிற்குள் நிரந்தரமாக மூடிவிட முடிவு செய்துள்ளதாக அறிவித்தது.இதன்படி நேற்று பாராளுமன்ற கூட்டம் நடந்தது. இதில் கீழ்சபையில் இதற்கான ‌வரை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு 513 உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர். 79 பேர் எதிராக வாக்களித்தனர். 9 பேர் விலகினர்.
உலகின் மிகப்பெரிய தொழில் வளர்ச்சி அடைந்த நாடான ஜேர்மனி தனது மின்சக்தி தேவையினை 23 சதவீதம் அணு உலைகளே பூர்த்தி செய்கின்றன.தற்போது ஜேர்மனியின் இந்த முடிவால் மாற்று எரிசக்தி மூலம் தேவையினை பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இது குறித்து ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மார்க்கெல் கூறுகையில்,"இனி ஜேர்மனியின் மின்தேவையினை புதுப்பிக்கவல்ல எரிசக்தி மூலம் பெறப்படும்" என்றார்.
கம்பிகள் மற்றும் கான்கீரிட் வைத்து மரம் கட்டும் நூதனம்.
கட்டிடங்களுக்கு இணையாக மரம், செடி, கொடிகள் வளர்வதற்காக சிங்கப்பூரில் பிரமாண்ட தூண்கள் கட்டப்படுகின்றன.நகரை பசுமையாக மாற்றும் நோக்கில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிங்கப்பூரின் மத்திய பகுதியில் உள்ளது மெரினா சவுத் மாவட்டம்.
உலகின் "தாவர தலைநகராக" இந்நகரை மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மரம், செடி, கொடிகளையும் இங்கு வளரச் செய்வது, சுற்றுச்சூழலை பாதுகாப்பது, அதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகியவை முக்கிய நோக்கம்.இதன் ஒரு கட்டமாக வானுயர்ந்த கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இணையாக மரங்களுக்காக தனியே பிரமாண்ட தூண்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.


மரங்கள் கிளை பரப்பியிருப்பது போன்ற உருவத்திலேயே கம்பிகள் கட்டப்பட்டு பில்லர்கள் கட்டப்பட்டன. சுமார் 150 உயரத்துக்கு தூண் போல அமைத்து அதன் மேல் பகுதி முழுவதும் தாவரங்கள் அமைக்கப்படுகின்றன. மரக் கிளைகள் போலவே கம்பிகள் கட்டப்பட்டு கான்கிரீட் போட்டு இந்த பில்லர்கள் உருவாக்கப்படுகின்றன.
இந்த பில்லரின் பக்கவாட்டு பகுதிகளிலும் மரங்கள், சிறு செடிகள், கொடிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த ஒவ்வொன்றும் "சூப்பர் ட்ரீ" எனப்படுகிறது.இதுபோல மெரினா சவுத் பகுதியில் பல சூப்பர் ட்ரீக்கள் உருவாக்கப்படுகின்றன. ஒவ்வொன்றையும் தாவர தொகுப்பாக உருவாக்கி அப்பகுதியை முழு பசுமையாக்க வேண்டும் என்பதே நோக்கம் என்கின்றனர் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள்.
நிலாவுக்கு கொண்டு சென்ற கமெராவை விற்க முயன்ற விண்வெளி வீரர் மீது நாசா வழக்கு.
அப்போலோ 14 விண்கல பயணத்தின் போது சந்திரனுக்கு சென்ற விண்வெளி வீரர் ஒரு கமெராவை கொண்டு சென்றார். நிலாவுக்கு கொண்டு சென்ற அந்த கமெராவை அவர் 80 ஆயிரம் டொலருக்கு விற்க முயன்றார்.இந்த நடவடிக்கையை தொடர்ந்து அந்த முன்னாள் விண்வெளி வீரர் மீது அமெரிக்க நாசா விண்வெளி மையம் வழக்கு தொடர்கிறது. எட்வர்டு மிட்சல் என்ற அந்த விண்வெளி வீரர் நிலவின் தரைதளப்பகுதியை படம் பிடித்தார்.
அவர் முறைகேடாக அந்த கமெராவை நிலவு பயணத்தில் கொண்டு சென்றார் என நாசா குற்றம் சாட்டி உள்ளது. உரிய அங்கீகாரம் இல்லாமல் கொண்டு சென்ற அந்த கமெராவை சுயலாபத்திற்காக அந்த வீரர் விற்க முயன்றுள்ளார் என்றும் நாசா கண்டனம் தெரிவித்து உள்ளது.பிரிட்டன் ஏல நிறுவனமான போனம்ஸ் குறிப்பிட்ட கமெராவை ஏலத்தில் விட முயன்ற தகவலை நாசா அறிந்தது. அந்த கமெராவில் சந்திரனின் நில பரப்பை பற்றிய அதிக தகவல்கள் இருந்தன.
ஆராய்ச்சி விண்வெளி தகவல்கள் விற்கப்படுவதாக கருதிய நாசா அந்த விண்வெளி வீரர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. அப்போலோ14  விண்கலம் கடந்த 1991ஆம் ஆண்டு ஆலன் ஷெப்ர்டு தலைமையில் நிலவுக்கு 9 நாள் பயணத்தை மேற்கொண்டது.இந்த பயணக்குழுவில் ஒரு வீரராக எட்வர்டு மிட்சல் இருந்தார். சந்திரனில் நடந்து சென்ற 6வது விண்வெளி வீரர் எட்வர்டு மிட்சல் ஆவார். அவர் விண்வெளி பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். அவர் தனது இணையதளத்தல் கையெழுத்திட்ட தனது பொட்டோவை விற்பனை செய்து வருகிறார்.
ஜெல்லி மீன்கள் புகுந்ததால் பிரிட்டனில் 2 அணு மின் உலைகள் அவசரமாக மூடப்பட்டன.
அணு உலையை குளிர்விக்கும் பகுதியில் ஜெல்லி மீன்கள் புகுந்ததால் பிரிட்டன் அணு மின்நிலையத்தில் இரண்டு அணு உலைகள் அவசரமாக மூடப்பட்டன.இந்த இரண்டு அணு மின் உலைகளும் டோர்னஸ் மின் நிலையத்தில் அமைந்திருப்பவை ஆகும். அணு மின் நிலையத்திற்கு வரும் கடல் தண்ணீர் சுத்திகரிப்பு பகுதியில் அதிக அளவு ஜெல்லி மீன்கள் மற்றும் இன்னும் சில கடல்பொருட்கள் இருந்ததால் அணு மின் உலைகள் உடனடியாக மூடப்பட்டன.மீன்கள் அணு உலைப் பகுதியில் வந்ததால் பொது மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என அணு உலை செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். கிழக்கு லோதியன் டன்பர் பகுதியில் இடிஎப் எனர்ஜி இந்த அணு மின் நிலையத்தை இயக்கி வருகிறது.
பாதுகாப்பை கருத்தில் கொண்டு அணு மின் உலை தற்காலிமாக மூடப்பட்டு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. ஜெல்லி மீன்கள் புகுந்ததால் கதிர் வீச்சு அபாயம் இல்லை என்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.ஜெல்லி மீன்கள் தண்ணீர் செல்லும் பாதையை அடைத்ததால் பிரச்சினை வரலாம் என்ற அச்சமும் ஏற்பட்டது. கடந்த மார்ச் மதம் 11ஆம் திகதி ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக கதிர் வீச்சு அபாயம் ஏற்பட்டு பெரும் பாதிப்பு எற்பட்டது.அந்த இயற்கை பேரிடருக்கு பின்னர் அணு கதிர் வீச்சு விடயத்தில் உலக நாடுகள் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
லாகர்டே விலகலை தொடர்ந்து புதிய பிரான்ஸ் நிதி அமைச்சர் நியமனத்தில் மோதல்.
பிரான்ஸ் நிதி அமைச்சராக இருந்த கிறிஸ்டியானே லாகர்டே சர்வதேச நிதியத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்கிறார். அவர் எதிர்வரும் ஜூலை மாதம் 5ஆம் திகதி இந்த பதவியை ஏற்கிறார்.ஐ.எம்.எப் தலைமை பதவியை ஏற்பது தொடர்ந்து அவர் தற்போது வகிக்கும் பிரான்ஸ் நிதி அமைச்சர் பதவியை விட்டு விலகுகிறார். அவருக்கு பதிலாக புதிய நிதி அமைச்சரை நியமனம் செய்வது குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசியும், பிரதமர் பிரான்கய்ஸ் பிலனும் தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறார்கள்.பிரான்சின் புதிய நிதி அமைச்சரை தேர்வு செய்யும் பணி இந்த தலைவர்களுக்கு எளிதாக இல்லை. ஏனெனில் அந்த பதவிக்கு வர நிதி நிலை அமைச்சர் மற்றும் அரசு செய்தி தொடர்பாளரான பிரான்கய்ஸ் பரோயின் மற்றும் வேளாண் துறை அமைச்சர் ப்ரூனோ லே மேரி இடையே கடும் போட்டி காணப்படுகிறது.
தனக்கு நிதித்துறை அமைச்சர் பதவி கிடைக்காவிட்டால் அமைச்சரவையில் இருந்து விலகி விடுவதாகவும் அவர்கள் எச்சரித்து உள்ளனர். பிரான்சின் உயர் கல்வித் துறை அமைச்சர் வாலரேவும் புதிய நிதி அமைச்சர் பதவிக்கு வர விரும்புகிறார். புதிய அமைச்சர் குறித்த முடிவை ஜனாதிபதியும் பிரதமரும் நாளை அறிவிக்கிறார்கள்.ஐ.எம்.எப்.பின் முதல் பெண் தலைவர் என்ற பெருமை பெற்றுள்ள கிறிஸ்டியானே லாகர்டே புதன்கிழமை நடைபெற்ற  பிரான்ஸ் கேபினட் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டி இருந்தது.எனவே அவர் சர்வதேச நிதியத்தின் தலைமை பதவியை ஜூலை 5ஆம் திகதி ஏற்கிறார். ஐ.எம்.எப் போட்டியில் வெற்றி பெற்றதும் லாகர்டே கூறுகையில்,"முன்னாள் ஐ.எம்.எப் தலைவர் டொமினிக் ஸ்டிராஸ்கானை சந்திக்க விரும்புகிறேன்" என்றார்.
ஜப்பானில் நிலநடுக்கம்: 9 பேர் காயம்.
ஜப்பானின் மத்திய பகுதியில் உள்ள நகனோவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த இடம் தலைநகர் டோக்கியோவில் இருந்து 180 கி.மீ வடமேற்கில் உள்ளது.காலை 8.16 மணிக்கு 5.4 என்ற ரிக்டர் அளவுக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நகனோவில் உள்ள 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மாத்சுமோட்டோ கோட்டையில் விரிசல் ஏற்பட்டது.
அத்துடன் சில பகுதிகளில் சேதமும் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட வேறு சில சம்பவங்களில் ஒரு பெண் உட்பட ஒன்பது பேர் காயம் அடைந்தனர்.இந்த அரண்மனை ஜப்பான் அரசினால் தேசிய சொத்தாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆறு ஆண்டுகளாக பலத்த பாதுகாப்புடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பின்லேடன்: அமெரிக்க அதிகாரி.
ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானின் அபோதாபாத்தில் பலத்த பாதுகாப்போடு 6 ஆண்டுகள் பதுங்கியிருந்ததாக அமெரிக்க அதிகாரி ஜான் பிரெனன் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் தலைவராக உள்ள பிரெனன் அமெரிக்க அதிபரின் பாதுகாப்பு துணை அதிகாரியாகவும், உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரியாகவும் உள்ளார்.
வாஷிங்டனில் உள்ள பால் நிட்ஸ் கல்வி மையத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியது: ஒசாமா பின்லேடன் தான் பதுங்கியிருந்த இடத்தை மிகவும் ரகசியமாக வைத்திருந்ததோடு தன்னைச் சுற்றிலும் அதிகபட்ச பாதுகாப்புடன் 6 ஆண்டுகள் இருந்துள்ளார்.
அந்த கட்டடத்தினுள் இருந்தவர்கள் எவருமே அங்கு வந்த பிறகு வெளியே செல்லவேயில்லை. வெளி உலக தொடர்புக்கு சிலர் மட்டும் வந்து சென்றுள்ளனர். அவர்கள் அங்கிருந்தவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்துள்ளனர்.அபோதாபாத் வீட்டில் மிகவும் நிம்மதியாகவும், தனது பாதுகாப்பு குறித்து எவ்வித அச்சமும் இன்றி இருந்தார். அவர் அங்கிருப்பது பாகிஸ்தானில் உள்ள சில பிரிவினருக்குத் தெரியும் என்பதை ஏற்க முடியாது என்று குறிப்பிட்ட பிரெனன் அல்கொய்தா இயக்கத்தில் உள்ள முக்கிய தலைவர்களில் பலருக்கு அவர் எங்கிருக்கிறார் என்ற விவரம் தெரியாது என்பது தான் உண்மை நிலை.
அவ்வாறு யாரேனும் ஒருவருக்குத் தெரிந்திருந்தால் கூட அது தனது மரணத்துக்கு அழைப்பு விடுத்து விடும் என்பதை ஒசாமா உணர்ந்திருந்தார். அதனாலேயே தான் பதுங்கியிருக்கும் விவரத்தை அவர் யாருக்கும் தெரிவிக்கவில்லை. இத்தகைய சூழலில் அமெரிக்காவின் கடற்படை கமாண்டோக்கள் அதிரடியாக நுழைந்து தாக்குதல் நடத்தியதை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.அபோதாபாத்தில் ஒசாமா பதுங்கியிருந்த விவரம் அந்நாட்டின் உயர்நிலைத் தலைவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை என்று பிரெனன் குறிப்பிட்டார். அபோதாபாத்தில் உள்ள ஒரு வீட்டில் அதுவும் ராணுவ அகாடமி அமைந்துள்ள பகுதியில் பாகிஸ்தானின் தலைநகருக்கு வெகு அருகில் அவர் பதுங்கியிருந்தது எவருக்குமே தெரியவில்லை.
அதனால் தான் அவரால் ஆறு ஆண்டுகள் அங்கு பதுங்கி வாழ முடிந்தது. பாகிஸ்தான் ராணுவத்துக்கோ அல்லது புலனாய்வு அமைப்புக்கோ அவர் பதுங்கியிருந்த விவரம் தெரியவில்லை.இருப்பினும் பின்லேடனுக்கும், அங்கிருந்தவர்களுக்கும் அதிகபட்ச பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. அமெரிக்க கடற்படை கமாண்டோக்கள் மே 2ம் திகதி ரகசியமாக மேற்கொண்ட தாக்குதல் கூட பாகிஸ்தான் அரசுக்குத் தெரிவிக்காமல் மேற்கொள்ளப்பட்டது.
இந்த தாக்குதலை பாகிஸ்தான் அரசுக்குத் தெரிவிக்காமல் மேற்கொண்டது தான் பெரிய கேள்வியாக எழுப்பப்படுகிறது. இருப்பினும் அத்தகைய உரிமையை அமெரிக்காவே எடுத்துக் கொண்டது.இந்த சம்பவத்துக்குப் பிறகு அபோதாபாத் வீட்டை அல்கொய்தா பயங்கரவாதிகள் தங்களது தங்குமிடமாக இதற்கு முன்னர் பயன்படுத்தி வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. அந்த விவரம் பாகிஸ்தானுக்கே தெரியவில்லை. இங்கிருந்து இஸ்லாமாபாத் மற்றும் வஜிரிஸ்தான் பகுதிக்கு அவர்கள் சென்றுள்ளனர் என்று பிரெனன் குறிப்பிட்டார்.
அபோதாபாத் வீட்டில் கைப்பற்றப்பட்ட சில ஆவணங்களைப் பார்க்கும் போது அல்கொய்தாவின் எதிர்காலம் குறித்த அச்சம் பின்லேடனின் மனதில் இருந்தது தெரியவந்துள்ளதாக பிரெனன் குறிப்பிட்டார். அமெரிக்காவுக்கு எதிராக அதிக அளவில் தாக்குதல்களை மேற்கொள்ள அவர் அழைப்பு விடுத்தார்.ஆனால் அதற்கு அவரது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் பல ஆண்டுகள் எத்தகைய தாக்குதலும் நடத்தாமல் அவர் இருந்துள்ளார். அத்துடன் மூத்த தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக கைதாவது அல்லது கொல்லப்படுவது அவரை மிகுந்த கலக்கமடையச் செய்துள்ளது.
இவ்விதம் உயிரிழந்தவர்களுக்கு மாற்றான முன்னணி தலைவரை அவரால் உடனடியாக உருவாக்க முடியவில்லை. நீண்ட போருக்கு அல்கொய்தா தயாரில்லை என்பதோடு இந்த இயக்கம் தொடர்பாக மக்கள் மனதில் இருந்த அபிப்ராயம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வெறுப்பு ஏற்படத் தொடங்கியது.இதற்கு காரணம் அல்கொய்தா மேற்கொண்ட தாக்குதலில் அப்பாவி பொதுமக்களும், குறிப்பாக அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்களும் உயிரிழந்தது இந்த இயக்கத்தின் மீதான அபிப்ராயத்தை முற்றிலுமாக சிதைத்து விட்டது என்று பிரெனன் குறிப்பிட்டார்.
ஏமன் அதிபரின் கோரிக்கைகள் நிராகரிப்பு.
ஏமனில் ஆட்சி மாற்றம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பேச்சு நடத்தும்படி அமைச்சர்களுக்கு அந்நாட்டு அதிபர் அலி அப்துல்லா சலே உத்தரவிட்டுள்ளார்.ஏமன் நாட்டை 33 ஆண்டு காலம் ஆட்சி செய்தவர் அதிபர் அலி அப்துல்லா சலே. துனிசியாவைத் தொடர்ந்து ஏமனில் அப்துல்லா சலேவுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.இவரை ஆட்சியில் இருந்து விலகும்படி கடந்து ஐந்து மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு சர்வதேச நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் கடந்த மாதம் 3ம் திகதி தலைநகர் சானாவில் உள்ள அப்துல்லா சலேவின் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் காயமடைந்தார். தற்போது அவர் சவுதி அரேபியாவில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில் சலேயை ஏமன் வெளியுறவு அமைச்சர் அபுபக்கர் அல் குயிர்பி சந்தித்து பேசினார். சந்திப்பிற்கு பின் பேட்டியளித்த அல் குயிர்பி,"ஆட்சி மாற்றம் தொடர்பாக அரசியல் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அதிபர் அறிவுறுத்தியுள்ளார்" என்றார்.
அதிபர் சலேயின் இந்த அழைப்பை ஏமன் எதிர்க்கட்சிகள் நிராகரித்து விட்டன. மேலும் அதிபர் பதவியில் இருந்து அப்துல்லா சலே விலக வேண்டும் என சவுதி அரேபியா உட்பட ஆறு வளைகுடா நாடுகளும் கோரிக்கை விடுத்துள்ளன.இதனால் அப்துல்லா சலேவுக்கு இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது. சவுதி அரேபியாவில் சலே தற்போது சிகிச்சை பெற்று வருவதால் அவரது மகன் மற்றும் குடும்ப உறவினர்கள் அரசு மற்றும் ராணுவப் பதவிகளை வகித்து வருகின்றனர்.
மனித உரிமை மீறிலில் ஈடுபட்ட பொலிஸ் படைகளுக்கு அமெரிக்கா பொருளாதார தடை.
சிரியா ஆட்சியின் மனித உரிமை மீறல் செயல்களுக்கு ஆதரவு அளித்த அந்நாட்டு பொலிஸ் படை மற்றும் ஈரான் தேசிய பொலிசுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.சிரியாவின் நான்கு பெரிய பாதுகாப்பு படைகளில் ஒன்றான சிரியா அரசியல் பாதுகாப்பு இயக்குனரகம் அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் துணை அமைப்பாக செயல்படுகிறது.இந்த அமைப்பினர் பெரியளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. அதனால் இந்த படைப்பிரிவு மற்றும் சிரியா விமானப் படை புலனாய்வு பிரிவு மற்றும் ஈரான் தேசிய பொலிஸ் தலைவர் மற்றும் துணை தலைவர் மீது அமெரிக்கா நிதித்துறை பொருளாதார தடை விதித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவின் பயங்கரவாதம் மற்றும் நிதி புலனாய்வு பிரிவு செயலர் டேவிட் எஸ் கோகென் கூறியதாவது: சிரியாவில் மனித உரிமை மீறல் செயல்களுக்கு ஈரான் நாட்டு ராணுவம் மற்றும் பாதுகாப்பு படை ஆதரவு அளித்து வருவது தற்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. அமைதியான வழியில் கிளர்ச்சியாளர்கள் போராட வழிவிட வேண்டும்.இதை விட்டு அப்பாவி கிளர்ச்சியாளர்கள் மீது வன்முறையை ஏவக் கூடாது. வன்முறைக்கு முடிவு கட்டி ஆட்சி மாற்றத்திற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை அந்நாட்டு அதிபர் பஷர் அல் அசாத் எடுக்க வேண்டும்.இதற்காகவே தற்போது இரு நாட்டு பொலிஸ் படை மீது பொருளாதார தடை கொண்டு வரப்பட்டுள்ளது. சிரியா மக்களுக்கு உரிமைகள் கிடைக்க அதிபர் அசாத் உறுதி அளிக்க வேண்டும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

Friday, July 1, 2011

விண்டோஸ் ட்ரைவர்களை அப்டேட் செய்வதற்கு.


விண்டோஸ் ட்ரைவர்களை அப்டேட் செய்ய இணையத்தில் ஏராளமான மென்பொருள்கள் உள்ளன.Smart Driver Updater என்ற மென்பொருள் உள்ளது. இந்த மென்பொருள் மூலம் இணையத்தின் உதவியுடன் ட்ரைவர்களை அப்டேட் மற்றும் புதியதாகவும் நிறுவிக் கொள்ள முடியும்.
மேலும் இந்த Smart Driver Updater உதவியுடன் ட்ரைவர்களை பக் அப் மீண்டும் கணணியில் நிறுவிக் கொள்ள முடியும்.இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணணியில் நிறுவிக் கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் Start Scan என்னும் பொத்தானை அழுத்தி கணணியில் உள்ள ட்ரைவர்களை ஸ்கேன் செய்யவும். தற்போது விடுபட்ட ட்ரைவர்களை பட்டியலிடும்.
பின் வேண்டிய ட்ரைவர்களை இணையத்தின் உதவியுடன் உங்கள் கணணியில் பதிவேற்றம் செய்து கொள்ளவும். வேண்டுமெனில் ட்ரைவர்களை பக் அப் செய்து கொள்ளவும் முடியும்.இந்த மென்பொருள் மூலம் பக் அப் செய்து மீண்டும் ட்ரைவர்களை எளிமையாக நிறுவிக் கொள்ள முடியும். இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

உலகில் உள்ள அனைத்து தாவரங்களின் விவரங்களையும் அறிந்து கொள்வதற்கு.


தாவரங்கள் பற்றி நமக்கு தெரியாத தகவல்கள் மற்றும் அதன் குண நலன்களை படங்களுடன் அறிந்து கொள்ள ஒரு இணையதளம் உதவி புரிகிறது.இயற்கை நமக்கு கொடுத்த ஒரு அரிய பொக்கிஷம் தான் தாவரங்கள் என்று கூறினால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு பல அரிய மூலிகைகள் இன்றும் மனிதரின் பல நோய்களை குணப்படுத்தி வருகிறது. இப்படி நமக்கு தெரியாத தாவரங்களை படத்துடன் விபரமாக தகவல்களை கொடுக்க ஒரு தளம் உள்ளது.இத்தளத்திற்கு சென்று நாம் வலது பக்கம் இருக்கும் Search என்ற கட்டத்திற்குள் எந்த தாவரத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமோ அதன் பெயரை கொடுத்து Search என்ற பொத்தானை சொடுக்கினால் போதும்.
அடுத்து வரும் திரையில் நாம் தேடிய தாவரத்தை பற்றிய முழுவிபரமும் நமக்கு கிடைக்கும். இந்த தாவரத்திற்கு வேறு என்ன பெயர்கள் எல்லாம் இருக்கிறது. எந்த நாட்டில் இந்த தாவரம் அதிகமாக காணப்படுகிறது. இதன் அறிவியல் பெயர்கள் மற்றும் இந்த தாவரத்தினால் நமக்கு ஏற்படும் நன்மை என்ன என்பது முதல் அனைத்து தகவல்களையும் கொடுக்கிறது.பல இலட்சம் தாவரங்களின் தகவல்கள் இத்தளத்தில் உள்ளது. இனி நாம் எந்த தாவரத்தையும் விரிவாகவும் தெளிவாகவும் தெரிந்து கொள்ளலாம்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

குரோம்{google chromr} உலாவியில் ப்ளாஷ் விளம்பரங்களை தடுப்பதற்கு.


கூகுள் குரோம் உலாவியில் பிளாஷ் விளம்பரங்கள் சில நேரங்களில் நமக்கு சலிப்பையும் வெறுப்பையும் ஏற்படுத்தும் வண்ணம் இருக்கும்.இது போன்ற பிளாஷ் விளம்பரங்களை கட்டுபடுத்த குரோமில் புதிதாக வந்திருக்கும் நீட்சி உதவுகிறது. மிகப்பெரிய இணையதளத்திற்கு சென்றால் கூட நம்மை விடாமல் தொடரும் ஒன்று தான் பிளாஷ் விளம்பரங்கள்.எதற்காக பிளாஷ் விளம்பரங்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர் என்றால் விரும்பும் வகையில் அனிமேசன் உருவாக்கி அதை சிறிய அளவிலான கோப்பாக மாற்றி விளம்பரதாரர்கள் மக்களை ஈர்க்கின்றனர்.
பல நேரங்களில் ஒரு சில தளங்களில் தேவையில்லாத பிளாஷ் விளம்பரங்கள் நமக்கு வெறுப்பை உண்டு பண்ணுகிறது. இனி இது போன்ற பிளாஷ் தொல்லைகளை நீக்குவதற்காக குரோம் உலாவியில் ஒரு நீட்சி உள்ளது.குரோம் உலாவியில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் தளத்திற்கு சென்று Install என்ற பொத்தானை சொடுக்கி இந்த நீட்சியை நிறுவிக் கொள்ளவும். அடுத்து Flash ஐகானை சொடுக்கி Block Flash on this Site என்பதை சொடுக்கி பிளாஷ் விளம்பரங்கள் ஏதும் இல்லாமல் பார்க்கலாம்.
Option என்பதை சொடுக்கி ஏற்கனவே நாம் பிளாஷ் கோப்புகள் பார்க்க வேண்டாம் என்று Block செய்த தளங்களை நமக்கு வேண்டும் போது Unblock செய்யும் ஆப்சனும் இருக்கிறது.பிளாஷ் விளம்பரங்களின் தொந்தரவை நீக்க விரும்பும் அனைவருக்கும் இணையதளத்தை வேகமாக பார்க்க நினைப்பவர்களுக்கும் இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு.


வீடியோக்களை தரவிறக்கம் செய்ய நாம் பெரும்பாலும் நாடுவது Youtube தளம் ஆகும். இந்த தளத்தில் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய பல வழிகள் உள்ளன.இருப்பினும் இணையத்தில் இருக்கும் அனைத்து வீடியோக்களையும் தரவிறக்கம் செய்ய முடியாது. ஒரு சில குறிப்பிட்ட தளங்களில் உள்ள வீடியோக்களை மட்டுமே தரவிறக்கம் செய்ய முடியும்.
நாம் என்னத்தான் முயன்றாலும் ஒருசில தளங்களில் உள்ள வீடியோவை மட்டும் நம்மால் தரவிறக்கம் செய்யவே முடியாது. ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலாக இணையத்தில் கிடைக்கும் வீடியோகள் அனைத்தையும் தரவிறக்கம் செய்ய ஒரு அருமையான மென்பொருள் உள்ளது.அதுதான் All Video Downloader. இந்த மென்பொருளின் மூலம் சுமார் 280 தளங்களில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்ய முடியும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது.
இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக் கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். தோன்றும் விண்டோவில் வீடியோ URL யை உள்ளிட்டு Download என்னும் பொத்தானை அழுத்தவும்.பின் வீடியோ தரவிறக்கம் ஆக தொடங்கும். இந்த மென்பொருள் சப்போர்ட் செய்யக்கூடிய வீடியோ போர்மட்டுகள் avi, wmv, mpeg1, mpeg2, mp4, mov, flv, iPod™, iPod Touch™, iPad™, iPhone™, Psp™, Ps3 ™, DVD.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

இன்றைய செய்திகள்.

ஐ.தே.க.வின் காலி ஆர்ப்பாட்டத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கக் கூடாது: ஆளுங்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் நிசாந்த முத்துஹெட்டிகம.

ஐ.தே.க.வினால் காலியில் முன்னெடுக்கப்படவுள்ள அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கக் கூடாது என்று ஆளுங்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் நிசாந்த முத்துஹெட்டிகம வலியுறுத்தியுள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சிக்கு துணிச்சல் இருக்குமாயின் காலி மாவட்டத்தில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடாத்திக்காட்டட்டும், பார்க்கலாம் என்று ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நிசாந்த முத்துஹெட்டிகம பகிரங்கமாக சவால் விடுத்திருந்தார்.அச்சவாலை ஏற்றுக் கொண்டுள்ள ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்துக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளவுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் முதலாவது ஆர்ப்பாட்டத்தை எதிர்வரும் 01ம் திகதி காலி எல்பிட்டியில் நடாத்தவுள்ளது.
அவ்வாறான நிலையில் நேற்று பத்தேகம பிரதேச பாடசாலையொன்றில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பினர் நிசாந்த முத்துஹெட்டிகம மேற்கண்டவாறு பொலிசாருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.காலியில் எனக்கெதிராக 01ம் திகதி ஆர்ப்பாட்டமொன்றை நடாத்த ஐ.தே.க. தயாராகியுள்ளது. அன்றைய தினம் நானும் எட்டாயிரம் பேருடன் ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்துக்குச் செல்லவுள்ளேன். அந்த ஆர்ப்பாட்டத்துக்கு பொலிசார் பாதுகாப்பு வழங்கக் கூடாது.
அவ்வாறு தேவையில்லாமல் பொலிஸ் பாதுகாப்பை வழங்கி ஏற்பட்ட களேபரம் காரணமாகவே முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பதவியை இராஜினாமாச் செய்ய நோ்ந்தது. அவர் ஒரு முட்டாள். புதிய பொலிஸ் மா அதிபர் புத்திசாலி. அவர் ஆர்ப்பாட்டத்துக்கு பாதுகாப்பு வழங்க மாட்டார் என்று எதிர்பார்க்கின்றோம் என்றும் அவர் மேலும் கருத்து வெளியிட்டுள்ளார்.அமைச்சர் மோ்வின் சில்வா பாணியில் பாராளுமன்ற உறுப்பினர் நிசாந்த முத்துஹெட்டிகம சவால் விடுத்திருந்த போதிலும், ஐ.தே.க. ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டம் அன்றைய தினம் கட்டாயமாக நடைபெறும் என்று ஐ.தே.க.வின் காலி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் சர்வதேச நடவடிக்கைகளில் சீனாவின் யுவான் நாணயம்.
சீனாவின் யுவான் நாணயத்தை இலங்கை ஊடாக சர்வதேச நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த இலங்கை மத்திய வங்கி அனுமதி அளித்துள்ளது.இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு வசதிகளை மேம்படுத்தும் முகமாகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மத்திய வங்கி மேலும் 13 நாடுகளின் வெளிநாட்டு நாணயங்களை சர்வதேச வங்கி நடவடிக்கைகளுக்காக இலங்கையில் பயன்படுத்தவும் அனுமதி அளித்துள்ளது.இவற்றில் அவுஸ்திரேலிய டொலர், கனேடியன் டொலர், டொன்மார்க் க்ரோனர், யூரோ, ஹொங்கொங் டொலர், ஜப்பானிய யென், நியூசிலாந்து டொலர், நோர்வே க்ரோனர், ஸ்டெர்லிங் பவுண், சிங்கப்பூர் டொலர், சுவிஸ் பிராங்க் மற்றும் அமெரிக்க டொலர் என்பன அடங்கும்.
விடுதலைப் புலிகள் திருகோணமலையில் புதைத்து வைத்துள்ள தொண்ணூறு கோடி பணத்தைக் கண்டுபிடிக்க தேடுதல் வேட்டை.
விடுதலைப் புலிகளினால் திருகோணமலையில் புதைத்து வைக்கப்பட்டுள்ள தொண்ணூறு கோடி ரூபாவை தேடிப்பிடிக்கும் முயற்சியில் பாதூகப்புத்தரப்பினர் ஈடுபட்டுள்ளனர்.விடுதலைப் புலிகள் திருகோணமலை மாவட்டத்தில் பலமாக இயங்கிய காலப்பகுதியில் பிரஸ்தாப தொகைப் பணம் பிரதேச மக்களிடமிருந்து கப்பமாகப் பெறப்பட்டு சேகரிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.அதனை பிளாஸ்டிக் கொள்கலன்களில் இட்டு தம்பலகாமத்தை அண்மித்துள்ள சூரங்கல் பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் புதைத்துவைத்துள்ளதாக கிடைத்துள்ள இரகசியத் தகவலொன்றையடுத்தே அதனைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை பொலிசாருடன் இணைந்து இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்தை விடுவிக்கும் நோக்கில் இராணுவ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்ததன் காரணமாகவே விடுதலைப் புலிகள் அமைப்பினர் அந்தளவு பாரிய தொகைப் பணத்தை பூமிக்கடியில் புதைத்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பிரஸ்தாப பணத்தொகையைப் புதைத்து வைப்பதில் முக்கிய பங்காற்றிய விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் மூவரில் இருவர் இராணுவத்தினருடனான மோதல்களின் போது கொல்லப்பட்டுவிட்டனர். மற்றொருவர்  வெளிநாட்டுக்குத் தப்பியோடி விட்டார் என்றும் பாதுகாப்புத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
தமிழர்கள் தேவையற்ற அதிகாரங்களைக் கோரக்கூடாது: சரத் பொன்சேகா.
தமிழர்கள் தேவையற்ற அதிகாரங்களைக் கோராமல் சிங்களவர்களுடன் இணைந்து வாழப் பழக வேண்டும் என்று சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு விசாரணையில் சமூகமளிப்பதற்காக நேற்று நீதிமன்றத்துக்கு வந்து திரும்பிச் செல்லும் வழியில் ஊடகவியலாளர்களிடம் ஓரிரண்டு வார்த்தைகள் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வடக்கில் வாழும் தமிழர்கள் அனாவசியமான அதிகாரங்களைக் கோராமல், இந்தியாவில் இருக்கும் அதிகாரப் பரவலாக்கல் மாதிரியை முன்னுதாரணமாகக் கொண்டு அதிகாரத்தை வழங்குமாறு கோராமல் சிங்களவர்களுடன் இணைந்து வாழத் தீர்மானிக்க வேண்டும்.தென்னிலங்கை சிங்களவர்களும் வடக்கில் வாழும் தமிழர்களுடைய அழகான கலாசார அம்சங்களைப் புரிந்து கொண்டு, அவர்களின் தனித்தன்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அரசாங்கம் வடக்கில் தேவையற்ற பிரச்சினைகளை மீண்டும் உருவாக்கப் பார்க்கின்றது.  இல்லாத பிரச்சினைகளை மீண்டும் உருவாக்கி, அதனை வைத்து அரசியல் செய்வது தான் அரசாங்கத்தின் நோக்கமாகும்.அதன் காரணமாகத் தான் வடக்கின் அரசியல்வாதிகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு அங்கு மீண்டும் பயங்கரவாத சூழலொன்றை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது என்றும் அவர் மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.
சிறுகோள்கள் பூமியில் மோதினால் பேரழிவிற்கு உண்டாகும் நாடுகளின் பட்டியல் வெளியீடு.
விண்வெளியில் உள்ள சிறு கோள்கள் பூமியில் மோதுண்டால் பேரழிவிற்கு உள்ளாகக்கூடிய நாடுகளின் பட்டியலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.பிரித்தானியாவின் சவுத்ஹெம்டன் பல்கலைக்கழக நிபுணர்களே இப்பட்டியலை வெளியிட்டுள்ளனர்.இப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகள் பாரிய அழிவுகளைச் சந்திக்கலாமெனவும் அதன் மூலம் அந்நாடுகள் மீளமுடியாமல் போகுமெனவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சீனா, அமெரிக்கா, இந்தோனேசியா, இந்தியா,ஜப்பான் ஆகிய நாடுகள் இத்தகைய சிறு கோள்களின் தாக்குதலுக்குள்ளானால் அங்கு பாரிய உயிரிழப்புக்கள் நிலவும் சாத்தியம் நிலவுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் இத்தாக்குதலின் போது நாடுகளின் பொதுக்கீழ் கட்டுமான வசதிகளும் பாரிய அழிவிற்கு உள்ளாகுமெனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
சுமார் 12 மைல்கள் விட்டமுடைய சிறுகோளொன்று பூமியில் மோதுண்டால் இங்குள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகள் அனைத்தும் முற்றாக அழிவடையுமென ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.இத்தகைய ஒரு தாக்குதல் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்ததாகவும் இதன் போதே டைனோசர்கள் முற்றுமாக அழிந்தாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
நாடுகளின் பட்டியல் பின்வருமாறு:
1. சீனா.
2. இந்தோனேசியா.
3. ஜப்பான்.
4. இந்தியா.
5. பிலிப்பைன்ஸ்.
6. இத்தாலி.
7. பிரித்தானியா.
8. பிரேசில்.
9. நைஜீரியா.
10. அமெரிக்கா.
பிரான்ஸ் அதிபர் மீது தாக்குதல் நடத்திய நபர் கைது.
பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசியை ஒருவர் தாக்கி கீழே தள்ளினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி தெற்கு பிரான்சில் உள்ள டொலுயீசில் மேயர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் அவர் பிராக்ஸ் நகருக்கு சென்றார்.
அங்கு நின்று கொண்டிருந்த ஒரு கூட்டத்தை தாண்டிச் செல்கையில் திடீர் என்று ஒருவர் சர்கோசியின் சட்டையைப் பிடித்து இழுத்தார். இதில் சர்கோசி நிலை தடுமாறி கீழே விழுந்தார்.உடனே அவர் சுதாரித்துக் கொண்டு எழுந்து விட்டார். இதைப் பார்த்த காவலர்கள் சர்கோசியைத் தாக்கியவரை கைது செய்தனர். அந்த நபர் ஏன் தாக்கினார் என்று உடனடியாகத் தெரியவில்லை.
பின்லேடன் குடும்பத்தை விடுவிக்க வேண்டும்: உமர் பின்லேடன் வேண்டுகோள்.
பாகிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ள ஒசாமா பின்லேடன் குடும்பத்தினரை விடுவிக்க வேண்டும் என்று அவரது மகன் உமர் பின்லேடன் கோரிக்கை விடுத்துள்ளார்.கத்தார் தலைநகர் டோஹாவில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறியதாவது: பாகிஸ்தான் தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். அந்நாட்டு அரசின் பிடியில் உள்ள பின்லேடனின் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரை விடுவிக்க வேண்டும்.
அவர்கள் சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். அந்த அப்பாவி குழந்தைகளையும் பெண்களையும் பாகிஸ்தான் அரசு பாதுகாக்க வேண்டும்."கத்தார் பின்லேடன் குழுமம்" என்ற குடியிருப்பு கட்டுமான நிறுவனத்தை உமர் பின்லேடன் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
லிபியா மீது பிரான்ஸ் ஆயுதங்கள் வீச்சு: ஆப்பிரிக்க ஒன்றியம் கடும் கண்டனம்.
லிபியாவில் கடாபி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் குழுக்கள் பகுதியில் பிரான்ஸ் ஆயுதங்கள் வான் வழியே வீசப்பட்டு உள்ளன.இதனால் அந்தப் பிராந்தியம் முழுவதும் அபாய நிலைக்கு ஆளாகி உள்ளது. பிரான்சின் இந்த நடவடிக்கைக்கு ஆப்பிரிக்க ஒன்றியம் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது.லிபிய தலைநகர் திரிபோலிக்கு தென்மேற்கே பழங்குடியின பேராளிகள் பிராந்தியம் உள்ளது. இங்கு தங்களது ஆயுதங்கள் வீசப்பட்டதை பிரான்சும் ஒப்புக் கொண்டுள்ளது.
இதுகுறித்து ஆப்பிரிக்க ஒன்றிய கொமிஷன் தலைவர் ஜுன் பிங் கூறுகையில்,"பிரான்ஸ் நடவடிக்கையால் போரில் உருக்குலைந்த சோமாலியா பிரச்சனை லிபியாவில் உள்ளது" என்றார்.ஈக்வடோரியல் கினியா பகுதியில் ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்களின் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் லிபிய விவகாரம் தீவிரமாக விவாதிக்கப்படுகிறது.
லிபியாவில் உள்நாட்டு போர் அபாயம், நாடு துண்டாடப்படும் நிலை, சோமாலியா போன்ற அவலநிலை, நாடு முழுவதும் ஆயுதங்கள், தீவிரவாத அபாயம் போன்றவை ஏற்படும் சூழல் உள்ளது என ஜுன் பிங் எச்சரித்தார். இந்த அபாய நிலை அருகாமையில் உள்ள நாடுகளுக்கும் ஏற்படலாம் என அவர் தெரிவித்தார்.லிபியாவுக்கான ஆப்பிரிக்க ஒன்றிய அமைதித் திட்டம் மார்ச் மாதம் துவங்கப்பட்டது. அது இன்னும் செயல்பாட்டில் உள்ளது. அரசியல் பேச்சுவார்த்தை மேற்கொள்ள போர் நிறுத்தம் தேவை என்றும் அவர் கூறினார்.
ஈரான் நடத்திய ரகசிய ஏவுகணை சோதனை: இங்கிலாந்து குற்றச்சாட்டு.
அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று இலக்குகளை தாக்கும் ஏவுகணை சோதனைகளை நடத்த ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்துள்ளது.ஆனால் தடையை மீறி ரகசியமாக அணு ஆயுத ஏவுகணை சோதனையை கடந்த வாரம் ஈரான் நடத்தியுள்ளது என இங்கிலாந்து குற்றம் சாட்டியுள்ளது.மிகவும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த ஏவுகணை இஸ்ரேல் அல்லது வளைகுடா நாடுகளைச் சென்று தாக்கும் திறன் கொண்டது என்று இங்கிலாந்து கூறியுள்ளது.
இதுபற்றி இங்கிலாந்து வெளியுறவு துறை செயலாளர் வில்லியம் கேக் கூறுகையில்,"கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி இதுவரை மூன்று ஏவுகணை சோதனைகளை ஈரான் ராணுவம் ரகசியமாக நடத்தியுள்ளது. தற்போது அணு ஆயுதங்களை சுமந்து சென்று இலக்குகளை தாக்க கூடிய ஏவுகணை சோதனையை நடத்தி இருக்கிறது. இது ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்துக்கு விரோதமானது" என்றார்.ஆனால் இங்கிலாந்தின் இந்த குற்றச்சாட்டை ஈரான் அரசு மறுத்துள்ளது. ஈரானுக்கு எதிராக உலக நாடுகளை திசை திருப்ப இங்கிலாந்து மேற்கொள்ளும் சூழ்ச்சி இது என்று அந்நாட்டு வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
நியூயோர்க் விமான நிலையத்திற்குள் படையெடுத்த ஆமைகள்.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள கென்னடி விமான நிலையம் ஜமைக்கா வளைகுடா பகுதியின் முனையில் அமைந்துள்ளது.இப்பகுதியில் வசிக்கும் ஆமைகள் முட்டையிடும் சீசனில் கடற்கரையை நோக்கி கூட்டமாக செல்வது வழக்கம்.
கென்னடி விமான நிலையத்தில் பதுங்கியிருந்த சுமார் 150 ஆமைகள் நேற்று காலை 6.45 மணியளவில் ஓரே நேரத்தில் கடற்கரையை நோக்கி வெளியேறத் தொடங்கின.விமான நிலையத்தின் பிரதான ஓடுபாதையில் ஏராளமான ஆமைகள் ஊர்ந்து சென்றதை பார்த்த விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் விமான போக்குவரத்தை மாற்றியமைத்தனர்.பிஸியான காலை நேரத்தில் புறப்பட தயாராகி கொண்டிருந்த விமானங்கள் அனைத்தையும் மாற்று ஓடுபாதை வழியாக இயக்கினார். இதனால் விமானங்கள் 30 நிமிடங்கள் காலதாமதமாக இயக்கப்பட்டன.
கணணி திருடர்களால் அல்கொய்தாவின் ஓன்லைன் இணையதளம் சீர்குலைவு.
இணையதளம் வழியாக வீடியோக்கள் மற்றும் செய்திகள் அனுப்பி தொடர்பு கொள்ளும் அல்கொய்தாவின் நடவடிக்கையை கணணி திருடர்கள் சீர்குலைத்துள்ளதாக பயங்கரவாதத் தடுப்பு வல்லுநர் ஒருவர் கூறினார்.அடையாளம் தெரியாத நபர்களால் கடந்த சில நாட்களாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.
அல்கொய்தாவின் ஓன்லைன் தொடர்புகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன. இணையதளத்தில் ஒரே ஒரு நம்பத்தகுந்த விநியோக சேனல் கூட அந்த அமைப்புக்குக் கிடைக்கவில்லை என அல்கொய்தாவின் தொலைத்தொடர்பு நடவடிக்கைகளை கண்காணித்து வரும் பிளாஷ்பாயின்ட் குளோபல் பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் இவான் கோல்மன் தெரிவித்தார்.இந்த சேதத்தை சரிப்படுத்தி மீண்டும் தங்கள் நெட்வொர்க்கைப் பெற அவர்களுக்கு பலநாட்கள் பிடிக்கும் என்றும் அந்த தடுப்பு வல்லுநர் கூறுகிறார்.
சவூதியில் தடையை மீறி கார் ஓட்டிய பெண்கள் கைது: பெண்கள் அமைப்பினர் கடும் கண்டனம்.
சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட தடையுள்ள நிலையில் கார் ஓட்டிச் சென்ற ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டனர்.உலகிலேயே சவுதி அரேபியாவில் தான் பெண்கள் கார் ஓட்ட தடை உள்ளது. சட்ட ரீதியான தடையில்லை என்றாலும் மத ரீதியான வாய்மொழி உத்தரவாக அமலில் உள்ளது.
1960ல் சவுதி அரேபியாவில் பெண்கள் கல்வியில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதனால் தற்போது அந்நாட்டின் பல்கலைக்கழகங்களில் 58 சதவீதம் பெண்கள் கல்வி கற்கின்றனர்.ஆனாலும் பணியிடங்களில் வெறும் 15 சதவீதம் பெண்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். பெண்களை பெரியளவில் பணியில் சேர்க்கும்படி அந்நாட்டு தனியார் நிறுவனங்களுக்கு அரசு உத்தவிட்டு வருகிறது.
சவுதியில் பெட்ரோலிய பொருட்களின் விலை குறைவு என்பதால் அரசு சார்பில் போக்குவரத்து வாகனங்கள் இயக்கப்படுவது இல்லை. அனைவரும் கார் வைத்திருக்கின்றனர்.ஆனால் பெண்கள் கார் ஓட்டக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளதால் இவர்கள் ஒவ்வொரு முறை வீட்டை விட்டு முக்கிய வேலைகளுக்காக வெளியே செல்லும் போது வீட்டில் ஆண்களை அல்லது டிரைவர்களையே நம்பி இருக்க வேண்டியுள்ளது. இதுபோன்ற காரணங்களால் வீட்டில் ஆண்கள் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதி டிரைவர்களின் சம்பளமாக சென்று விடுகிறது.
சவுதி மன்னர் அப்துல்லா கூறுகையில்,"பெண்கள் கார் ஓட்டுவது சமுதாயம் சார்ந்த விடயம். இந்த விடயத்தில் மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்" என்று கூறிவிட்டார். இந்நிலையில் 1990ல் ரியாத்தில் கார் ஓட்டிச் சென்ற 47 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.அவர்கள் அனைவரும் தங்களது வேலையை இழந்தனர். நாட்டில் இருந்து வெளியேற இவர்களுக்கும், இவர்களது கணவர்களுக்கும் ஓராண்டு காலம் தடை விதிக்கப்பட்டது.
கடந்த 20 ஆண்டுகளாக கார் ஓட்டுவதற்கு அனுமதி கோரி அந்நாட்டின் பெண் அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனாலும் மாற்றம் நிகழவில்லை. இந்நிலையில் கடந்த 17ம் திகதி ரியாத்தில் 40 பெண்கள் துணிந்து கார் ஓட்டினர். கணவர்களை காரில் அமர வைத்து கடைகளுக்கு ஷாப்பிங் சென்றனர்.இதை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் வரவேற்றிருந்தார். கடந்த இரு வாரங்களாக கார் ஓட்டி வந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களில் கார் ஓட்டிய ஐந்து பெண்கள் அந்நாட்டு அரசால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு பெண் உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
காபூல் ஹோட்டல் தாக்குதல்: தலிபான் தீவிரவாதிகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா எச்சரிக்கை.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் இன்டர் காண்டினன்டல் ஹோட்டல் மீது தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் 5 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் நேற்று அதிகாலை முடிவுக்கு வந்தது.ஆப்கானிஸ்தான் கமண்டோக்கள் நேட்டோ ஹெலிகாப்டர் உதவியுடன் தலிபான்கள் தாக்குதலை முறியடித்தனர். இந்த தாக்குதலின் போது ஸ்பெயின் விமான ஓட்டுநர் உள்பட 12 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
தீவிரவாதிகள் மீதான தாக்குதலில் 9 தலிபான்கள் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் பகுதியில் முந்தய நிலையை காட்டிலும் பாதுகாப்பு உள்ளது. எனவே அங்கு உள்ள துருப்புகளில் 33 ஆயிரம் வீரர்களை அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் திரும்ப பெறுவோம் என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறி இருந்தார்.அவரது கருத்தை பொய்ப்பிக்கும் வகையில் தலிபான் தீவிரவாதிகள் காபூல் நகரில் கடுமையாக தாக்கி உள்ளார்கள். தீவிரவாதிகளின் எதிர்பாராத தாக்குதல் ஒபாமாவை அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது.
ஆப்கானிஸ்தானில் எங்கள் பணி முடிவடையவில்லை என்பதை இந்த தாக்குதல் உணர்த்துகிறது என புதன்கிழமை இரவு அவர் தீவிரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.தீவிரவாதிகள் எங்கள் எல்லை சோதனை சாவடி வழியாக வரவில்லை. அவர்கள் மேற்கு மலைப்பகுதி வழியாக ஊடுருவி உள்ளனர் என்று பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதல் நடந்த போது பல்வேறு இடங்களை சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் ஒரு மாநாட்டில் பங்கேற்க ஹோட்டலுக்கு வந்திருந்தனர். அங்கு அயல் நாட்டு உயர் அதிகாரிகளும் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வடகொரியாவில் அவலம்: புற்களை தின்று உயிர் வாழும் மக்கள்.
வடகொரியாவில் ரேஷனில் வழங்கும் உணவுப் பொருட்கள் குறைக்கப்பட்டுள்ளதால் அந்நாட்டு மக்களில் ஒரு பகுதியினர் புற்களை சாப்பிட்டு உயிர் வாழும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.வடகொரியாவில் ஏழைகள் என கருதப்படும் 23 லட்சம் மக்களுக்கு ரேஷனில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் தற்போது ஒருவருக்கு ஒரு நாளைக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்களின் அளவு 150 கிராமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் உண்ண உணவின்றி இம்மக்கள் புற்களை உண்டு உயிர் வாழ்கின்றனர்.இதுகுறித்து வடகொரியாவின் பயோங்யாங்கில் உள்ள வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு அலுவலகத்திற்கான சுவிஸ் ஏஜன்சி கதரினா ஜெல்வெஜர் கூறியதாவது: வடகொரியாவில் ஏழைத் தொழிலாளர்களுக்கு ரேஷனில் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
ஆனால் நாட்டிற்கு கிடைத்து வந்த நன்கொடைகள் குறைந்து சர்வதேச அளவில் விலைவாசி மற்றும் இறக்குமதி மீதான செலவு அதிகரித்துள்ளதால் ஒரு தொழிலாளருக்கு ஒரு நாளைக்கு ரேஷனில் வழங்கப்படும் உணவுப் பொருளின் அளவு 150 கிராமாகக் குறைக்கப்பட்டுள்ளது.கடந்த 18 மாதங்களாக ரேஷனில் வழங்கப்படும் உணவுப் பொருளின் அளவு பாதியாகக் குறைக்கப்பட்டள்ளதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனால் சில பகுதிகளில் குறிப்பாக மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிலங்களைத் தோண்டி புல் மற்றும் மூலிகை இலைகளை பறித்து சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வருகின்றனர்.
கடந்தாண்டில் குளிர் பருவம் நீடித்ததால் உருளைக்கிழங்கு உற்பத்தி குறைந்துவிட்டது. மேலும் அணு ஆயுத உற்பத்தி தொடர்பாக வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் வெளிநாட்டு உதவிகளும் குறைந்துள்ளன.கடந்த 2008ம் ஆண்டில் உலக உணவு வழங்கல் திட்டத்தின் கீழ் வடகொரியாவுக்கு 1 லட்சத்து 36 ஆயிரம் டன் உணவு வழங்கப்பட்டது. இது கடந்தாண்டில் 55 ஆயிரம் டன்களாகக் குறைந்தது.
ஆனால் நடப்பு மாதத்தில் வெறும் 11 ஆயிரம் டன் உணவுப் பொருட்கள் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களைப் பெற தவறான வழிகளில் உணவு உதவியை பயன்படுத்த மாட்டோம் என்று வடகொரியா உறுதியளிக்க வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.மேலும் வடகொரியாவுக்கு வழங்கப்பட்டு வந்த 3 லட்சத்து 50 ஆயிரம் டன் உரமும் கடந்த 2007ம் ஆண்டில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் நேற்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் போது ஏற்பட்ட உயிர் மற்றும் பொருட்சேதங்கள் பற்றிய விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பெங்குளூ என்ற நகரத்திலிருந்து தென்மேற்கு திசையில் 175 கி.மீ தூரத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று காலை 11.19 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவில் 5.6 என பதிவான இந்த நிலநடுக்கத்தினால், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தின் காரணமாக ஏற்பட்ட உயிர் மற்றும் பொருட்சேதங்கள் குறித்த தகவல்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.
மேலும் சிலி நாட்டின் துறைமுக நகரமான வல்பாரைசோவிலிருந்து தென்மேற்கு திசையில் 94 கி.மீ தொலைவில் தலைநகர் சாண்டியாகோவின் மேற்கு திசையில் 136 கி.மீ தொலைவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவுகோலில் 5.5 என பதிவான இந்த நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி ஆபத்து ஏதும் இல்லை என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. கடந்த ஆண்டு சிலி நாட்டில் ஏற்பட்ட பூகம்பத்தால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
547 நாட்களுக்கு பின்னர் பத்திரிக்கையாளர்களை விடுவித்த தலிபான்கள்.
கடந்த 547 நாட்களுக்கு முன்னர் இரண்டு பிரான்ஸ் பத்திரிகையாளர்களை தலிபான் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். 2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர்கள் கடத்திச் சென்றனர்.அவர்களது நிலை என்ன என்று தெரியாத நிலையில் திடீரென விடுவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் விடுவிக்கப்பட்ட தகவலை எல்சீ பேலஸ் நேற்று அறிவித்தது.
கடந்த 18 மாதங்களுக்கு முன்னர் வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் ஹெலார்வே மற்றும் ஸ்டெபானே என்ற இரு பத்திரிகையாளர்கள் கடத்தப்பட்டனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு வடகிழக்கே உள்ள மாகாணமான காபிசா மலைப் பகுதியில் 2009ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் திகதி பிரான்ஸ் பத்திரிகையாளர்களை தலிபான்கள் கடத்தினார்கள்.
பத்திரிகையாளர்கள் எதிர்பாராத தருணத்தில் விடுவிக்கப்பட்ட நிகழ்வு அவர்களது குடும்பத்தினரை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பத்திரிகையாளர் விடுவிக்கப்பட்ட விடயம் மிகுந்த சந்தோஷத்தை தருவதாக உள்ளது.அவர்கள் விடுதலைக்கு ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமித் கர்சாய் மேற்கொண்ட நடவடிக்கையை பாராட்டுவதாக பிரான்ஸ் ஜனாதிபதி சர்கோசியின் அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிரான்ஸ் பத்திரிகையாளர் விடுவிப்பு தகவலால் பாரிஸ் நகரில் பத்திரிகையாளர்களின் ஆதரவாளர்களும், உடன் வேலை பார்க்கும் பணியாளர்களும் குவிந்தனர். தலிபான்கள் விடுவித்த ஒரு பத்திரிக்கையாளரின் பெயர் ஸ்டெபானே போனேர். அவருக்கு 46 வயது ஆகிறது.கமெரா மேனாக பணிபுரியும் அவர் ஈராக் போர் நிகழ்வுகளை படம் பிடித்து உள்ளார். அவர் 2000ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானுக்கு தொடர்ந்து சென்று வருவது குறிப்பிடத்தக்கது.தலிபான்களிடம் பிடிபட்ட மற்றொரு பத்திரிகையாளர் ஹெலர்வே கெஸ்குரே ஆவார். அவருக்கு வயது 47 ஆகிறது. இவர் முன்னாள் யுகோசுலாவியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போர் நிகழ்வு குறித்த தகவல்களை நேரில் சென்று எழுதி வந்தார்.
பாகிஸ்தானில் மேலும் பல இடங்களில் தாக்குதல் நடத்தப்படும்: தலிபான்கள் எச்சரிக்கை.
அல்கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதற்கு பழி வாங்க பாகிஸ்தானில் மேலும் பல இடங்களில் தாக்குதல் நடத்துவோம் என்று தலிபான்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.தெஹ்ரிக் இ தலிபான் என்ற தீவிரவாத இயக்கத் தலைவர் வாலி உர் ரெஹ்மான் என்பவர் இது குறித்து தெரிவிக்கையில்,"பாகிஸ்தானில் 10 இடங்களைத் தாக்க தேர்ந்தெடுத்துள்ளதாகவும், அதில் முதல் இடமாகவே மெஹ்ரான் கப்பற்படைத் தளத்தைத் தாக்கியதாகவும்" கூறினார்.கடந்த மாதத்தில் கராச்சியிலுள்ள மெஹ்ரான் கப்பற்படைத் தளத்தை தலிபான்கள் தாக்கி இரு உளவு விமானங்களை சுட்டு வீழ்த்தினர். 10க்கும் மேற்பட்ட வீரர்களையும் கொன்றனர்.
இந்நிலையில் மேலும் 9 ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைத் தாக்கப் போவதாக மிரட்டல் விடுத்துள்ள ரெஹ்மான் பாகிஸ்தான் ராணுவம் அமெரிக்காவின் கைப்பாவையாக செயல்படுவதாகக் குற்றம்சாட்டினார்.இன்னும் 8 ஆண்டுகளுக்கு பாதுகாப்புப் படைகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தத் தேவையான திட்டங்கள் தங்களிடம் இருப்பதாகத் தெரிவித்த ரெஹ்மான் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கு நாடுகளையும் தாக்கப் போவதாக எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா நேட்டோ உள்ளிட்ட நாடுகளில் விரைவில் தாக்குதல் நடத்தவுள்ளதாகத் தெரிவித்த அவர் அவற்றில் பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவையே முதல் குறியாகும் என்று எச்சரித்தார். ரெஹ்மானின் தலைக்கு அமெரிக்கா ரூ.27 கோடி பரிசுத் தொகை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.மே 2ம் திகதி பின்லேடன் கொல்லப்பட்டதற்குப் பிறகு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைத் தவிர வேறு எந்த நாடுகளிலும் தலிபான்கள் தாக்குதலில் ஈடுபடவில்லை.அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் தாக்குதல் நடத்த முயன்ற தலிபான்களின் திட்டம் முறியடிக்கப்பட்டாலும், மேற்கு நாடுகளில் ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் அவர்களின் திறன் மற்றும் தாக்குதல் வலிமை குறித்த எச்சரிக்கை உணர்வு ஏற்பட்டுள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

பேஸ்புக்கிற்கு போட்டியாக கூகுள் ப்ளஸ் அறிமுகம்.


இதுகுறித்து கூகுள் நிறுவன பொறியியல் பிரிவு மூத்த துணை தலைவர் குண்டோத்ரா தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளதாவது: சமூக இணையத்தளம் எனப்படும் சமூகவலை தளங்களில் மக்கள் பெரும் ஈடுபாடு காட்டி வருகின்றனர்.அவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதமாக சமூக இணையதளத்தை உருவாக்கும் முயற்சியில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. தற்போது கூகுள் பிளஸ் என்ற பெயரில் புதிய தொழில்நுட்பத்திலான சமூக இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.இந்த புதிய சமூக இணையத்தளம் பேஸ்புக் தளத்தை ஒத்திருக்கும் போதிலும் அதைவிட கூடுதல் வசதிகளை பெற்றுள்ளது. இந்த புதிய சேவையினை ஆண்ட்ராய்ட் ஓபரேடிங் சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் கைத்தொலைபேசிகள் விற்கும் விற்பனை மையங்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்றும், தற்போதைய அளவில் சோதனைக்காக இது அறிமுகப்படுத்தப்பட்டிருப்பினும் வருங்காலங்களில் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்க்கிள்ஸ், ஸ்பார்க்ஸ், ஹேங்அவுட்ஸ் மற்றும் மொபைல் உள்ளிட்ட சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாக இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகுள் பிளசில் உள்ள சர்க்கிள்கள், பேஸ்புக்கின் தகவல் பகிர்ந்து கொள்ளும்( இன்பர்மேசன் ஷேரிங்) சேவையை ஒத்திருத்தாலும், இது பேஸ்புக்கைப் போல தனது தகவலை அனைவருக்கும் தெரிவிக்காமல் உபயோகிப்பாளருக்கு நெருக்கமான நண்பர்களுக்கு மட்டும் தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.அதாவது உபயோகிப்பாளர்களின் உண்மையான தகவல்களை உரிய நண்பர்களுக்கு மட்டும் தெரிவிப்பது என்ற கொள்கையுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கிளவுட் தொழில்நுட்பமுறையில் இங்கு பொட்டோக்கள் பதிவேற்றம் செய்யப்பட உள்ளதால் இன்ஸ்டன்ட அப்லோட் இதில் சாத்தியமாகிறது.

இது இதன் மற்றொரு சிறப்பம்சமாகும். மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாக அதுவும் பேஸ்புக்கில் இல்லாத சிறப்பம்சமாக இதில் வீடியோ சாட் வசதி உள்ளது. ஒரே சமயத்தில் பல நண்பர்களுடன் வீடியோ சாட் முறையில் தொடர்பில் இருப்பது இந்த சேவையின் மூலமே சாத்தியமாகி உள்ளதாக அவர் அதில் தெரிவித்துள்ளார்.600 மில்லியன் பயனாளர்களைக் கொண்டு சமூக இணையதள உலகில் முடிசூடா மன்னனாக விளங்கிய பேஸ்புக்கிற்கு தங்கள் நிறுவனத்தின் கூகுள் பிளஸ் கடும் சவாலாக அமையும் என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF