
விண்வெளியில் பூமியைச் சுற்றி வலம் வரும் அதியுயர் திறனுடைய ஹபிள் விண் தொலைக் காட்டி (HST) பிரபஞ்சம் பற்றிய அதி நுண்ணிய புகைப்படங்களைப் படம் பிடித்து சமீபத்தில் பூமிக்கு அனுப்பியுள்ளது. இப்புகைப் படங்கள் பிரபஞ்சத்தில் மிகுந்த தூரத்தில் உள்ள அண்டங்களையும் நட்சத்திரங்கள் தோன்றிய புதிதில் எவ்வாறு மின்னத் தொடங்கின என்பதையும் தெரிவிக்கின்றன.எனினும் இப்புகைப்படங்கள் மிக எளிமையாகவும் விளக்கமாகவும் அமையவில்லை. இதற்குக் காரணம் இப்புகைப்படங்களில் காணப்படும் சில அடையாளங்கள் அதிக தூரத்திலும் செறிவு குறைவாகவும் உள்ள நட்சத்திரங்களைக் குறிப்பதனால் ஆகும். மேலும் குறித்த இந் நட்சத்திரங்களில் இருந்து வரும் ஒளியை கண்டு பிடிப்பதற்கு வானில் உள்ள ஒரு சிறிய புள்ளியில் 500 மணித்தியாலங்களுக்கு மேல் ஹபிள் தொலைக் காட்டி கவனம் செலுத்தியுள்ளது.
இவ்வாறு எடுக்கப் பட்ட புகைப்படம் மிகவும் தரமாக உள்ளது என பிரிட்டனின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞான ஆராய்ச்சிக் குழுவின் உறுப்பினரான Dr. Michele Trenti கருத்துத் தெரிவித்துள்ளார்.இப்புகைப் படங்கள் யாவும் ஹபிளின் XDF (eXtreme Deep Field ) எனும் நவீன தொழிநுட்ப வசதியுடைய கமெராவால் சுமார் 22 நாட்களாக எடுக்கப் பட்டவையாகும். இத் தொழிநுட்பம் மூலம் அண்டங்கள் தோன்றி எவ்வாறு பரிணாமம் அடைந்து வருகின்றன என்பதை அவதானிக்க முடியும்.எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு விண்ணுக்கு செலுத்தப் படவுள்ள James Webb Space Telescope, ஹபிள் தொலைக்காட்டியை விட அதி உயர் தரமுடைய லென்ஸ் மற்றும் கண்ணாடியை உடையது என்பது குறிப்பிடத்தக்கது.




பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF