Monday, June 11, 2012

முத்துகள் உருவாகுவது எப்படி?


முத்து என்பது ஆபரணங்களில் பயன்படுத்தப்படும் ஒருவகைப் பொருளாகும். இது இயற்கையில் நீரில் வாழுகின்ற முசெல் (mussel) வகையைச் சேர்ந்த முத்துச்சிப்பி போன்ற சில உயிரினங்களிலிருந்து பெறப்படுகின்றது. மிகப் பழங் காலத்திலிருந்தே முத்து விரும்பி வாங்கப்படும் ஒன்றாக இருந்து வந்துள்ளது.


உயர் தர முத்துகள் எப்படி உருவாகின்றன என்றால், கடலில் உள்ள சில புல்லுருவிகள் (தம்மால் நேரடியாக உணவுப்பொருட்களை உருவாக்க முடியாமல் சத்துக்காக பிற தாவர இனங்களைச் சார்ந்திருப்பவை), சிலநேரங்களில் சிப்பியின் வாய் வழியாக உள்ளே தவறிச் சென்று விடுகின்றன.அப்போது சிப்பியின் உட்பாகத்தில் ஓர் உறுத்தல் ஏற்பட்டு, நாக்கர் திரவத்தை அதன் மீது பொழியும். அவ்வாறு பொழியும்போது அந்தப் புல்லுருவி மடிந்துவிடும். அதன் மீது நாக்கர் திரவம் பல அடுக்குகளில் படிந்துவிட, அது விலை உயர்ந்த முத்தாக மாறிவிடுகிறது. இம்முறையிலேயே சிறு மணல் துகள் உள்ளே சென்றாலும் அது முத்தாகிவிடுகிறது. இது போல் இயற்கையாக உருவாகும் முத்துக்கள் தான் மிகுந்த விலை மதிப்பு உடையதாகும்.
செயற்கை முத்து எவ்வாறு உருவாக்கப்படுகிறது?


கடல் நீரில் உள்ள கால்சியம் கார்பனேட் என்ற தாதுப் பொருளையும் மற்றும் சில அங்ககப் பொருட்களையும் சிப்பி உட்கொள்வதால் முத்து தோன்றுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிப்பியினுள் ஏதேனும் சிரியப் பொருள் சென்றுவிட்டால் அதற்கு ஓர் உறுத்தல் ஏற்பட்டு தன்னிடம் உள்ள நாக்கர் என்ற ஒருவிதத் திரவத்தை சுரந்து அதன் மீது மூடிவிடும். அதைத் தெரிந்துகொண்ட சீனர்கள் சிப்பி வாய் திறந்திருக்கும்போது அதனுள் ஈயத்தால் செய்த சிறு புத்தர்சிலையைப் புகுத்தினார்கள். சிறிது காலம் கழித்து சிப்பியைத் திறந்து பார்க்கும்போது முத்துத் திரவத்தால் புத்தர் சிலை பொதியப்பட்டிருக்கும்.


ஜப்பானியர்கள் சிப்பியின் வாய் வழியாகச் சிறு தானியத்தை உள்ளே தள்ளிவிடுவார்கள். அவ்வாறு தள்ளப்பட்ட தானியத்தின் மீது நாக்கர் திரவம் படிந்து நன்கு விளைந்த முத்தாக வெளியில் எடுக்கப்பட்டு நல்ல விலைக்கு விற்பனையாகிறது.1896 இல் ஜப்பானைச் சேர்ந்த கொக்கிச்சி மிக்கிமோட்டோ என்பவர் செயற்கையாக முத்துக்களை வளர்க்கும் முறையொன்றை விருத்தி செய்து அதற்காக உரிமம் ஒன்றையும் பெற்றுக்கொண்டார். இம்முறையில் முசெல் வகை உயிரினத்தின் ஓட்டிலிருந்து செய்யப்பட்டுப் பளபளப்பாக்கப்பட்ட நுண்துகள் இன்னொரு முத்துச்சிப்பியின் திசுவினால் சுற்றப்பட்டு முத்துச்சிப்பியின் உடலுக்குள் செலுத்தப்படும். இச்சிப்பிகள் ஒரு கூட்டினுள் இடப்பட்டு நீருக்குள் இறக்கப்படும். இவை முத்துக்களை உருவாக்கச் சுமார் மூன்று தொடக்கம் ஆறு ஆண்டுகள் வரை எடுக்கும்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF