Saturday, June 30, 2012

சூரியக் குடும்பம் – சில சுவையான தகவல்கள்!


சூரியக் குடும்பம் எவ்வாறு தோன்றியது? இதற்கு உறுதிப் பூர்வமான கொள்கையோ, பதிலோ இதுவரை கண்டறியப் படவில்லை. சூரியக் குடும்பம் தோன்றியது குறித்து இதுவரை பல்வேறான கருத்துக்கள் கூறப் பட்டு வந்துள்ளன. தொடக்கத் தில் 18-ஆம் நூற்றாண்டில் புகையுருக் கோட்பாடு என்ற தத்துவம் ஒன்று கூறப்பட்டது. பல வாயுக்களால் அமைந்த பெரும் தொகுதி ஒன்று, சுழற்சியினால் மெதுவாகக் குளிர்ந்து சுருங்கத் தொடங் கியது. அச்சுருக்கத்தின் காரண மாக, அந்தத் தொகுதி முழுவ தும் ஈர்ப்பு-சக்தியின் அணைப்பினால் சுழற்சி வேகம் மேலும் அதிகரித்தது; அதனால் அத்தொகுதியின் வெளிப்பரப்பின் வேகம்  மிகவும் அதிகமாக, ஈர்ப்பை மீறத் தொடங்கியது. இதிலிருந்து சிறு சிறு துண்டுகள் விடுபட்டுக் கோள்கள் உருவாயின. நடுப்பகுதி மட்டும் சூரியனாக ஒளியையும், வெப்பத்தையும் அளித்துக் கொண்டுள்ளது. இவ்வாறு புகையுருக் கோட்பாடு, சூரியக் குடும்பத்தின் தோற்றம் பற்றிக் கூறுகிறது.


பின்னாட்களில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சியால் தொலைநோக்கி கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் ஈர்ப்பு விசையை மீறி இடைப்பட்ட துண்டுகள் வெளியேற முடியாது என்று அறியப்பட்டது. இவற்றின் காரணமாக இக்கொள்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை.18 ஆம் நூற்றாண்டில் சூரியக் குடும்பத் தோற்றம் பற்றிய கொள்கை உருவானது. விண்வெளியில் திரியும் மற்றொரு விண்மீன் சூரியனின் அருகே வர நேர்ந்தபோது, ஈர்ப்பின் காரணமாக, சூரியனது வாயுக்களை விண்வெளியில் அது கவர்ந்து ஈர்த்தது;  அவ்வாறு சூரியனிலிருந்து பிரிந்த வாயுக்கள் குளிர்ந்து கோள்களாக உருவாயின என்று அக்கொள்கை விளக்கமளிக்கிறது. இரு விண்மீன்களுக்கு இடையேயுள்ள தூரம் மிக அதிகமாகையால் சூரியனை நோக்கி அதன் அருகே மற்றொரு விண்மீன் வந்திருக்கும் என்பது ஏற்புடையதாக இல்லை.


இறுதியாகத் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள கொள்கை ஒன்று உள்ளது. அது பின்வருமாறு விளக்கமளிக்கிறது. வெகுகாலத்திற்கு முன் ஒரு மிகப் பெரிய விண் முகில் இருந்தது. அதன் ஒரு பகுதியில் நிறைச் செறிவு ஏற்பட்டது. இப்பகுதி ஏனைய பகுதிகளை ஈர்க்க ஆரம்பித்தது. அதாவது நியூட்டனின் ஈர்ப்பு விதியின் படி, இரு பகுதிகளான விண்முகிலில் நிறை ஈர்ப்புக் செறிவு மிகுந்த பகுதி, மறுபகுதியை ஈர்க்க ஆரம்பித்தது. இதன் பின் சொந்த நிறை ஈர்ப்பினால் விண் முகில் சுருங்கத் தொடங்கியது. இந்நிலையில் இது ஒரு வாயுப் பந்து போல் சுருங்கச் சுருங்கச் சுழலும் வேகமும் அதிகரித்தது. காலப்போக்கில் இதன் மையப் பகுதி குமிழ் போன்றும் சுற்றுப்பகுதி வட்டுப் போன்ற அமைப்பையும் பெற்றது. .இதன் பின்னர் வெளிப்புற வட்டின் சுழற்சி வேகம் அதிகரித்ததால் மையப் பகுதியில் உள்ள குமிழ் மேலும் சுருங்கியது. இதனால் மையத்தில் வெப்பம் அதிகரித்து மையப்பகுதி ஒரு விண்மீனாக (சூரியன்) மாறியது.  சுற்றியுள்ள வட்டு உடைந்து சிறு பகுதிகளாகப் பிரிந்து வெவ்வேறு கோள் மீன்களாக மாறின.


சூரியனுக்கு அருகில் உள்ள கோள்களான புதன், வெள்ளி, புவி மற்றும் செவ்வாய் ஆகியன மிக அதிகமான வெப்ப நிலையிலிருந்து குளிர்ந்து உருவானவை. இதனால் இவை திடக் கோளங்களாகக் காணப்படுகின்றன. இவற்றில் சிலிக்கான், இரும்பு போன்ற தாதுக்கள் காணப்படுகின்றன. இத்திடக் கோளங்களைச் சுற்றி மென்மையான வாயு மண்டலம் காணப்படுகின்றது. ஆனால் சூரியனிலிருந்து தொலைவில் உள்ள கோள்கள் உயர்வெப்ப நிலையை அடையாது குளிர்ந்த வாயு நிலையிலேயே சுழன்று வருகின்றன. இவை பெரும்பாலும் ஹீலியம், ஹைடிரஜன் ஆகிய வாயுத் தனிமங்களைக் கொண்டவையாகக் காணப்படுகின்றன.


சூரியனுக்கு அருகிலிருந்து இருக்கும் இடப்படி முறையே புதன், வெள்ளி, புவி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் என அமைந்துள்ளன. சூரியனுக்கும் புவிக்கும் இடையே அமைந்துள்ள கோள்களான புதன், வெள்ளி ஆகிய இரண்டும் உட்கோள்கள் (Inner Planets) என்று அழைக்கப்படுகின்றன. புவியைத் தாண்டிச் சுற்றி வரும் கோள்களான செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியன வெளிக்கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன. சூரியனைச் சுற்றி வரும் இக் கோள்மீன் அனைத்தின் பாதையும் நீள்வட்டமே. அதே வேளையில் இவை ஏறக்குறைய ஒரே தளத்தில் அமைந்துள்ளன.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF