அல்கொய்தா, தலிபான்கள், ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற தீவிரவாத அமைப்புகளுடன் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவுத்துறைக்கும் தொடர்பு உண்டு என்று அதில் கூறப்பட்டுள்ளது.இந்த அறிக்கை 2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவலால் பாகிஸ்தான் அரசு அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் பொதுமக்களை ராணுவம் கொன்று குவிக்கிறது.எனவே மக்களுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் களம் இறங்கி உள்ளன. அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையில் பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் ராணுவமும் உள்ளது.அதில் பிரிட்டன், பிரான்ஸ் நாட்டு ராணுவ போர் விமானங்கள் குண்டு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் இத்தாலி ராணுவம் இதுவரை தாக்குதலில் ஈடுபடவில்லை.
இந்த நிலையில் இத்தாலியின் விமானப்படை போர் விமானங்களும் கடாபியின் ராணுவ தளங்கள் மீது குண்டு வீச முடிவு செய்துள்ளது.இது குறித்து இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி, அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தெரிகிறது.
அப்போது கடாபியின் ராணுவ தளங்களின் மீது மட்டும் இத்தாலி போர் விமானங்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தும் என அறிவித்தார். இரக்கமின்றி கொன்று குவிக்கும் கடாபி ராணுவத்திடம் இருந்து பொதுமக்களை காப்பாற்றவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.அதுவும் உடனடியாக குண்டுவீச்சு தாக்குதல் நடத்த உள்ளது. இதற்கான அறிக்கையை பிரதமர் பெர்லுஸ்கோனி அலுவலகம் வெளியிட்டது.
சிரியாவில் தீவிரமடையும் போராட்டம்: 11 பேர் சுட்டுக் கொலை
அரபு நாடான சிரியாவில் அதன் அதிபர் அசாத்துக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டரா நகரில் நேற்று ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் மீது சிரிய ராணுவத்தினர் நடத்திய பீரங்கித் தாக்குதலில் ஐந்து பேர் பலியானதாக செய்திகள் வெளியாயின. சிரியாவில் முதலில் அரசியல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படக் கோரி துவங்கிய மக்கள் ஆர்ப்பாட்டங்கள், தற்போது அதிபர் பஷர் அல் அசாத் பதவி விலகியே தீர வேண்டும் என்ற கோரிக்கையில் வந்து நின்றுள்ளது.
கடந்த வாரம் அவசர நிலைச் சட்டம் ரத்து உள்ளிட்ட சில சீர்திருத்தங்களை அதிபர் அசாத் அறிவித்தார். ஆயினும் மக்கள் தங்கள் நிலையில் இருந்து மாறவில்லை. 22ம் திகதி அதிபருக்கு எதிராக நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அந்த ஆர்ப்பாட்டங்களின் மீது பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 95 பேர் பலியாயினர். மறுநாள் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலியாயினர். நேற்று முன்தினம் நாட்டின் வடபகுதியில் உள்ள ஜப்லா நகரில் 13 பேர் கொல்லப்பட்டனர். பலியானோரின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டோரின் மீதும் பொலிசார் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில் டரா நகரின் பல்வேறு பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிரியா ராணுவ வீரர்கள் பீரங்கிகள் மூலம் சுட்டுத்தள்ளியதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்தனர். இதற்கு ஆதாரமாக தாங்கள் எடுத்த வீடியோக்களையும் அவர்கள் வெளியிட்டனர்.
வெளிநாட்டு நிருபர்கள் சிரியாவில் நுழையத் தடை விதிக்கப்பட்டிருப்பதால் அங்கே என்ன நடக்கிறது என்று முழுமையாகத் தெரியவில்லை. டரா நகரம் ஜோர்டான் நாட்டு எல்லையில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ளது. நேற்று டரா நகரை ஒட்டிய சிரியா எல்லை மூடப்பட்டு விட்டதாக ஜோர்டான் நாட்டு தகவல் தொடர்புத் துறை அமைச்சர் தெரிவித்தார்.
சுவிஸ் வங்கி கணக்கு; இந்தியர்களின் பெயர் விரைவில் வெளியீடு: விக்கிலீக்ஸ் நிறுவனர்

சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்துள்ள இந்தியர்களின் பெயர்கள் விரைவில் வெளியிடப்படும் என்று விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜுலியன் அசாஞ்ஜே கூறியுள்ளார்.இந்தியாவைச் சேர்ந்த ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் இன்று அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணத்தை ரகசியமாக முதலீடு செய்துள்ளவர்களின் பட்டியலில் இந்தியர்களின் பெயர்களையும் கண்டேன். விரைவில் அந்த பட்டியலை இணையதளத்தில் வெளியிடுவோம். கறுப்புப் பண விவகாரத்தில் இந்திய அரசு மெத்தனமாக உள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் ஜெர்மன் அரசு தீவிரம் காட்டி வருகிறது. வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்பதில் ஜெர்மன் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. எனினும், ஜெர்மனை விட இந்தியர்களின் பணமே சுவிஸ் வங்கிகளில் அதிகமாக பதுக்கப்பட்டுள்ளது." என்று அசாஞ்ஜே கூறியுள்ளார்.
ஜுலியன் அசாஞ்ஜேவின் தகவலால், சுவிஸ் வங்கிகளில் ரகசிய கணக்கு வைத்துள்ள இந்தியாவைச் சேர்ந்த அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
இன்னும் 5 ஆண்டுகளில் அமெரிக்காவின் ஆதிக்கம் முடிவடையும்: அதிர்ச்சித் தகவல்
உலகின் மிகப்பெரும் பொருளாதார நாடு என்ற அந்தஸ்தை அமெரிக்கா இன்னும் 5 ஆண்டுகளில் இழக்கிறது.2016ம் ஆண்டில் அமெரிக்கப் பொருளாதார நிலையைக் காட்டிலும் சீனாவின் பொருளாதாரம் உயர்ந்து இருக்கும் என சர்வதேச நிதியம் மதிப்பிட்டுள்ளது.
2012ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெறுபவர் தனது 4 ஆண்டு கால பதவி முடிவில் அமெரிக்கப் பொருளாதாரம் சீனாவுக்கு அடுத்த நிலையில் வந்து இருக்கும் நிலையை காண்பார்.
வாஷிங்டனை மையமாகக் கொண்ட சர்வதேச நிதியத்தின் மதிப்பீட்டை அரசியல் தலைவர்கள் ஏற்க மறுக்கிறார்கள். ஏனெனில் பெய்ஜிங் தொழில்நுட்பம் அமெரிக்காவைக் காட்டிலும் பின்தங்கியே உள்ளது.சீனாவில் வாழ்பவர்களில் பெரும்பாலானவர்கள் வறுமையில் உள்ளனர். ஆசிய நாடான சீனா அமெரிக்காவைக் காட்டிலும் தனி மனித உற்பத்தியில் பின்தங்கியே உள்ளது என அவர்கள் கூறுகிறார்கள்.
2009ம் ஆண்டில் சர்வதேச நிதிய மதிப்பீட்டின் படி அமெரிக்க தனிநபருக்கு உள்நாட்டு உற்பத்தியில் 28 ஆயிரம் பவுண்ட் ஆக இருந்தது. ஆனால் சீன தனிநபர் உள்நாட்டு தயாரிப்பு 2500 பவுண்ட் ஆக இருந்தது.சீனா விலைவாசியை கட்டுப்பாட்டுக்குள் வைத்து நாணய மதிப்பை நிலைநிறுத்தி உள்ளது. உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்காவை சீனா மிஞ்சும் போது அதன் ஆதிக்கத்திற்கு அமெரிக்கா அடிபணியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மெக்சிகோவில் கண்டுபிடிக்கப்பட்ட 177 சடலங்கள்.
மெக்சிகோவின் வடகிழக்குப் பகுதியில் போதை மருந்து கும்பல் அங்கு வரும் பயணிகளை கடத்துகின்றனர்.கடத்தப்பட்டவர்களில் 18 பேர் மத்திய அமெரிக்கர்கள் மற்றும் 6 சீன தொழிலாளர்கள் என பொது பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
அமெரிக்க எல்லைக்கு அருகாமையில் மெக்சிகோவின் வடமேற்கு நகரம் ரெய்னோசா உள்ளது. இங்கு போதை மருந்து கடத்தல் கும்பல்கள் அபரித வர்த்தகம் நடைபெற உதவும் பாதையை கைப்பற்ற மோதிக் கொண்டு இருக்கிறார்கள்.இங்கு பயணிகளை போதை மருந்துக் கும்பல் கடத்திச் செல்கின்றனர். பொலிசார் தற்போது கடத்தல்காரர்களிடம் இருந்து விடுவித்துள்ள 51 பேரில் 14 பேர் குவாண்ட மாலாவைச் சேர்ந்தவர்கள்.
தலா 2 பேர் ஹோண்டுராஸ் மற்றும் சால்வடார் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். 27 பேர் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்த மாதத் துவக்கத்தில் பொலிசார் கடத்தப்பட்ட 68 பேரை விடுவித்தனர்.ரெய்னோசா பகுதி சான்பிரான்டோ நகரில் இருந்து 160 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு புதைக்கப்பட்டு இருந்த 177 உடல்களை பொலிசார் கண்டுபிடித்தனர்.
நைஜீரியாவில் கலவரம்: 500 பேர் பலி
நைஜீரியாவில் நடைபெற்று வரும் அதிபர் தேர்தலில் ஏற்பட்ட வன்முறையில் சுமார் 500 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.நைஜீரியாவில் வடக்கு பகுதி, தெற்கு பகுதி என இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கு பகுதியில் இஸ்லாமியர்களும், தெற்கு பகுதியில் கிறிஸ்தவர்களும் அதிகளவில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அந்நாட்டிற்கு அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்று வருகின்ற சூழ்நிலையில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது.இதில் குறிப்பாக வடக்கு பகுதியை சேர்ந்த கடுனா பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் வன்முறை சம்பவத்தின் போது கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.
தெற்கு பகுதியைக் காட்டிலும், வடக்குப் பகுதி பொருளாதாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றில் பின்தங்கியிருப்பது மக்களிடையே வெறுப்பை அதிகரித்துள்ளது. இதுவே வன்முறைக்கு அடிப்படை காரணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
கடாபி கட்டிடத்தை நேட்டோ வான்படை தாக்கியது.
லிபியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தும் கடாபியின் அதிகாரத்தை ஒடுக்குவதற்கும், பொது மக்களை காப்பாற்றவும் நேட்டோ படைகள் முகாமிட்டுள்ளன.இந்த நேட்டோ படைகள் லிபியா தலைநகர் திரிபோலியில் கடாபியின் வளாகப் பகுதியில் வான்வழித் தாக்குதலை நடத்தின. இந்தத் தாக்குதலில் கடாபியின் கட்டிடம் மிக மோசமாக சேதம் அடைந்தது. இன்று அதிகாலை லிபிய தலைவரின் கட்டிடத்தை 2 சக்தி வாய்ந்த ஏவுகணைகள் தாக்கியதாக தகவல் வெளியானது.
இந்த தாக்குதலில் 3 தொலைக்காட்சி நிறுவனங்கள் தற்காலிகமாக செயல் இழந்தன. ஒளிபரப்பும் தடை செய்யப்பட்டது. திரிபோலியில் இதுவரை நடந்த தாக்குதலில் இந்த தாக்குதல் மிகப் பயங்கரமானது ஆகும். நேட்டோ படைகள் அப்பாவி மக்களைக் கொல்லும் லிபிய ராணுவத்தை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
லிபிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஆப்பிரிக்க கூட்டமைப்பின் அமைதிக் குழு வந்த போது கடாபி பயன்படுத்திய கட்டிடம் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக கூறப்படுகிறது. குண்டு வெடிப்பு காரணமாக லிபிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் 30 நிமிடம் தடைபட்டன.போராட்டக்காரர்கள் ஆதிக்கம் உள்ள மிஸ்ரட்டா பகுதியில் தாக்குதலை நிறுத்தியதாக லிபிய ராணுவம் கூறியது. ஆனால் ஞாயிற்றுக்கிழமையும் அங்கு லிபிய ராணுவம் குண்டுகளை வீசின.
சிரிய வன்முறை: உலக நாடுகள் கடும் கண்டனம்.
சிரியாவில் அதிபருக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் வலுத்து வருகின்றது. மக்களை ஒடுக்குவதற்காக சிரிய அரசு வன்முறையில் இறங்கியுள்ளது.சிரியாவின் இந்த போக்கிற்கு உலக நாடுகள் அனைத்தும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அங்குள்ள அமெரிக்கர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறும்படி அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
சிரியாவின் டரா நகரில் நேற்று ஆர்ப்பாட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை. எனினும் பீரங்கிகளுடன் ராணுவம் ரோந்து வந்தது. வீடுகளின் கூரைகளில் ஏறி நின்ற படி ராணுவ வீரர்கள் கண்மூடித்தனமாக சுட்டனர். நேற்று முன்தினம் மட்டும் டரா நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் பலியாகினர். நேற்று நாடு முழுவதும் 500 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இதுமட்டுமில்லாமல் டவுமா நகரிலும் நேற்று பீரங்கிகளுடன் ராணுவம் ரோந்து சுற்றியது. அந்நகரில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் பலியாகினர். ஜனநாயக முறையில் போராடி வரும் மக்கள் மீது கட்டற்ற வன்முறையை அவிழ்த்து விடும் சிரிய அரசுக்கு ஐ.நா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று பிரான்ஸ், ஜேர்மனி, பிரிட்டன் மற்றும் போர்ச்சுகல் நாட்டின் பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அதே நேரம் சிரியாவின் மீது பொருளாதாரத் தடைகள் விதிப்பது குறித்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் சிரியாவுக்கான அமெரிக்க தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், பிற அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறும்படி அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
சர்வதேச அளவில் தேடப்படும் அல் கொய்தா இயக்கத்தின் முக்கிய தலைவர் பலி.
சர்வதேச அளவில் தேடப்படும் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் பலியானார்.அமெரிக்கா தலைமையிலான சர்வதேச பாதுகாப்பு துணை ராணுவம் (ஐ.எஸ்.ஏ.எப்) ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மற்றும் அல் கொய்தாக இயக்கத்துக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ளது.
இந்த இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஆப்கான் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் உள்ள குனார் மாகாணத்தில் நடந்த விமானத் தாக்குதலில், அபு ஹப்ஸ் அல் நஜ்தி என்ற அப்துல் கனி என்பவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவர் பல்வேறு அபாயகரமான பயங்கரவாத தாக்குதல்களுக்குத் திட்டமிட்டவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம் சவுதி அரேபியாவின் உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் இவர் தேடப்படும் 85 பயங்கரவாதிகளில் ஒருவராக உள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரான்சில் அணு மின்சாரத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் வேட்பாளர்.
பசுமை கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நம்பிக்கையுடன் வலம் வரும் நிகோலஸ் ஹீலாட் நீண்ட மௌனத்திற்கு பின்னர் அணு மின்சாரத்திற்கு எதிராக குரல் கொடுத்தார்.நிகோலசின் இந்த முடிவால் அணு மின்சாரத்தை ஆதரிக்கும் பிரான்சின் 55 சதவீத மக்களின் ஆதரவை அவர் இழக்கும் நிலை உள்ளது.
ஜப்பானில் உள்ள புகுஷிமாவில் கடந்த 11ம் திகதி 9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் நாட்டின் முதன்மையான அணு மின் நிலையம் சேதம் அடைந்து கதிர்வீச்சு பரவியது. இதனால் ஜப்பான் மக்கள் உடல் நலனுக்கு பாதிப்பு ஏற்பட்டது.ஜப்பான் அணு விபத்து உலக நாடுகளுக்கு எச்சரிக்கையை தந்த போதும் பிரான்ஸ் அணு மின்சாரம் மீது இன்னும் நம்பிக்கை வைத்துள்ளது. நாட்டில் உள்ள 55 சதவீத மக்கள் அணு மின்சாரத்திற்கு ஆதரவாக உள்ளனர்.
2012 ஆம் ஆண்டு பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இதில் பசுமைக் கட்சியின் வேட்பாளராக களம் இறங்கும் நிகோலஸ் இது நாள் வரை அமைதி காத்து வந்தார். உக்ரேனில் உள்ள செர்னோபிள் அணு விபத்து ஏற்பட்டதன் 25ம் ஆண்டு நினைவு நிகழ்ச்சி ஸ்ட்ராஸ் போர்க் நகரில் நடந்தது. இதில் நிகோலஸ் தனது அணு மின்சாரம் எதிர்ப்பு நிலையை வெளியிட்டார்.
பிரான்சின் 75 சதவீத மின்சாரம் அணு மின் நிலையங்கள் மூலமாக பெறப்படுகிறது. பிரான்சில் 1973ம் ஆண்டு கடுமையான எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் அங்கு அணு மின்சாரம் அவசியமானது. பிரான்சில் தற்போது 58 அணு உலைகள் செயல்பாட்டில் உள்ளன. அணு மின் நிலையங்களுக்கு பசுமைக் கட்சி எதிர்ப்பு தெரிவிக்கிறது. பிரான்சின் பெரும்பாலான மக்கள் இதனை ஏற்கவில்லை.
கனடாவில் அல்கொய்தா அமைப்பினர்: விக்கிலீக்ஸ் அதிர்ச்சித் தகவல்
கனடாவின் மொன்றியல் நகரில் அல்குவைதா அமைப்பின் முக்கிய பிரிவொன்று செயற்பட்டதாகவும், அங்கிருந்தே அமெரிக்காவுக்கு எதிரான தாக்குதல்கள் நடத்த திட்டமிடப்பட்டதாகவும் விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா குறித்த புதிய ரகசியத் தகவல்களை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது. அதில் குவாண்டமோ சிறையில் உள்ள மொரிஷியஸ் தீவிரவாதி மொன்றியல் அல்கொய்தா தீவிரவாதப்பிரிவின் தலைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீவிரவாதப் பிரிவு அமெரிக்காவில் தொடர் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டு உள்ளன.அமெரிக்கத் தூதரகங்கள் உலக நாடுகளில் உள்ளன. இந்த தூதரகங்களின் முக்கிய ரகசியச் செய்திகளை விக்கிலீக்ஸ் இணையதளம் தொடர்ந்து வெளியிட்டு அமெரிக்காவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவை தாக்குவதற்கு திட்டமிட்ட அல்கொய்தா தீவிரவாதப் பிரிவு மொன்றியலில் உள்ளது என தகவல்களை வெளியிட்டு உள்ளது. இந்த தீவிரவாதிகள் தெரிவு செய்யப்பட்டு மாண்ட்ரீல் மசூதியில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது சிறையில் உள்ள தீவிரவாத நபர் மொன்றியல் மசூதியில் சில காலம் இமாம் ஆகவும் பணியாற்றினார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1999ம் ஆண்டு நவம்பர் 26ம் திகதி ஜேர்மனியில் இருந்து முகமது இத் சிலாகி மொன்றியல் வந்தார். ரமலான் மாதத்தில் அவர் மொன்றியல் மசூதியின் இமாம் ஆனார். ஆர்.சி.எம்.பியும், சி.எஸ்.ஐ.எஸ் படைபிரிவும் அகமது ரெசாம் என்பவருடன் முகமது குய்த்சிலாகிக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்தியது.
இந்த விசாரணைக்கு பின்னர் முகமது குய்த் சிலாகி கனடாவை விட்டு வெளியேறினார். அகமது ரெசாம் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டவர் ஆவார். சிலாகியும், ரெசாமும் மொன்றியலில் 4 நாட்கள் சந்தித்து உள்ளனர். சிலாகி 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி முதல் 3 பேரை தீவிரவாதப் பயிற்சிக்கு தெரிவு செய்தார்.
பின்லேடனை பிடிக்க முற்பட்டால் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும்: அல்கொய்தா மிரட்டல்
தங்களுடைய இயக்கத் தலைவர் பின்லேடனை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிக்க முற்பட்டால் ஐரோப்பியக் கண்டம் முழுவதையும் அணுகுண்டு வெடித்து தகர்த்து விடுவோம் என்று அல் கொய்தா பயங்கரவாதிகள் எச்சரித்துள்ளனர். அமெரிக்க வெளியுறவுத்துறையின் ரகசியக் கோப்புகளை அம்பலப்படுத்தி வரும் விக்கிலீக்ஸ் இணையதளம் இந்தத் தகவலை இப்போது தெரிவிக்கிறது. கியூபா நாட்டில் அமெரிக்கா பராமரித்து வரும் குவாந்தநாமோ சிறை முகாமில் உள்ள 780 ரகசியக் கைதிகள் பற்றிய குறிப்புகளைத் திரட்டிய போது இந்த மிரட்டல் பற்றிய குறிப்புகள் விக்கிலீக்ஸ் இணைய தளத்திடம் சிக்கியுள்ளன.
இந்த மிரட்டலுக்கு அஞ்சித்தான் அமெரிக்காவும், பிற மேலை நாடுகளும் பின்லேடனை நெருங்கிய போதிலும் பிடிக்காமல் விட்டுவிட்டார்களா அல்லது உண்மையிலேயே அவர் இருக்கும் இடம் தெரியாமல் நழுவவிட்டுவிட்டார்களா என்று தெரியவில்லை.ஆனால் அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் தான் தளங்களாக அப்போதும் இப்போதும் விளங்குகின்றன என்பதையும், பின்லேடன் சாகவில்லை இன்னும் இவ்விரு நாடுகளில் மறைந்து வாழ்கிறார் என்பதையும் இந்த இணையதளம் தெரிவிக்கும் ரகசியத் தகவல் உணர்த்துகிறது.
அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தில் அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானத்தைச் செலுத்தி வெடிக்க வைத்த போது பின்லேடனும் அவருடைய சகாக்களும் கராச்சி நகரில் பாதுகாப்பான ஓரு வீட்டில் இருந்து கொண்டு தொலைக்காட்சியில் பார்த்து திருப்திப்பட்டிருக்கிறார்கள்.அதே நேரத்தில் ஏமன் நாட்டில் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க போர்க்கப்பல் யு.எஸ்.எஸ் கோலில் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்கு மூளையாகச் செயல்பட்டவர் கராச்சி நகரிலேயே பின்லேடன் தங்கியிருந்த வீட்டுக்கு அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். 2001க்குப் பிறகே அந்தச் சம்பவம் நடந்தது.
இந்தோனேசியாவின் பாலி தீவில் 2002ல் நடந்த மிகப்பெரிய குண்டுவெடிப்புக்கு மூளையாகச் செயல்பட்டவர். 2001ல் இந்தச் சம்பவம் நடந்த அன்றே உயிரி வேதியியல் வெடிகுண்டுகளைத் தயாரிப்பதற்கான ரசாயனக் கொள்முதலில் கராச்சி கடை வீதியில் இறங்கினார்.
செப்டம்பர் 11ல் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட மறுநாளே அல்கொய்தாவின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் கராச்சியை விட்டு வெளியேறி ஆப்கானிஸ்தான் நாட்டில் ஓரிடத்தில் கூடினர். அமெரிக்காவுக்கும் பிற மேலை நாடுகளுக்கும் எதிராக இதே பாணியில் நீண்டகாலத்துக்கு நாச வேலைகள் மூலம் எப்படி தாக்குதல் நடத்துவது என்று தங்களுக்குள் நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டனர்.பின்லேடன் மட்டும் அல்லாது அவருடைய தளபதி அய்மான் அல் ஜவாஹிரியும் இந்த சதிக் கூட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டார். குவாந்தநாமோ சிறையில் இருக்கும் அல்கொய்தா பயங்கரவாதிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதத்தில் முக்கியமானவர்களாக இருக்கின்றனர்.
செப்டம்பர் 11 தாக்குதல் நடந்த 4 நாள்களுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் நாட்டின் காந்தஹார் மாநிலம் சென்று தன்னுடைய தளபதிகளை அழைத்துப் பேசினார் பின்லேடன். அல்லா மீது நம்பிக்கை இல்லாத மேலை நாட்டு ராணுவத்துக்கு எதிராக கடைசிச் சொட்டு ரத்தம் இருக்கும் வரை நாம் போராடியே தீர வேண்டும். அல்லாவின் திருப்பெயரால் போரிட்டு வெற்றி பெறுவோம் என்றார்.
அதன் பிறகு 3 வாரங்களுக்கு பின் லேடனும் அவருடைய தளபதிகளும் ஆப்கானிஸ்தானின் குறுக்கும் நெடுக்குமாகப் பயணம் செய்து தங்களுடைய தளபதிகளையெல்லாம் எச்சரிக்கைப்படுத்தி அடுத்தடுத்து எப்படி தாக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தனர்.அமெரிக்கப்படைகள் தங்களை நெருங்கிவிட்டதால் கைது செய்யப்படுவோம் அல்லது கொலை செய்யப்படுவோம் என்று அஞ்சிய பின்லேடனும், மூத்த நிர்வாகிகளும் ஷூரா என்று அழைக்கப்படும் பழங்குடி தலைக்கட்டுகளை அழைத்து அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு வழிகாட்டும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் விருந்தினர் இல்லத்துக்கு அருகிலேயே துணிகரமாக ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டார் பின்லேடன். தன்னுடைய அமைப்பைச் சேர்ந்த வீரர்களைப் பயிற்சி முகாம்களிலிருந்து உடனே வெளியேறி மேற்கத்திய ராணுவத்தையும் அவர்களுடைய தளங்களையும் கிடைக்கும் எந்த ஆயுதம் மூலமாவது தாக்கி அழிக்குமாறு கட்டளையிட்டார்.
ஜப்பானில் இறந்தவர்களை தேடும் முயற்சியில் ஈடுபடும் ரோபோ.
ஜப்பானில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கமும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி பேரலையிலும் சிக்கி உயிரிழந்தோரை கடலில் தேடும் பணியில் 2 ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.கடந்த 5 நாள்களாக மேற்கொள்ளப்பட்ட பணியில் இதுவரை எவரது சடலமும் கிடைக்கவில்லை என ஜப்பான் அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். கடலுக்கடியில் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்த ரோபோக்களில் கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அத்துடன் சோனார் கருவியும் உள்ளது. இரண்டு ரோபோக்களில் ஒன்று ஜப்பானிலும், மற்றொன்று அமெரிக்காவிலும் தயாரிக்கப்பட்டதாகும். இப்பகுதியில் கடலில் சீற்றம் அதிகமாக இருப்பதால் தேடும் பணியில் ஈடுபடுவது சிரமம் என நீச்சல் வீரர்கள் தெரிவித்ததால் ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டன.
கடலில் மூழ்கிய காரைக் கண்டுபிடித்த ரோபோக்கள் அதில் உயிரிழந்தோர் எவரேனும் உள்ளனரா என்றும் தேடியது. ரோபோக்கள் எடுத்த படப்பதிவுகள் செய்தியாளர்களுக்கு காட்டப்பட்டன. கடலில் கலந்துள்ள கதிர்வீச்சின் அளவை அறிய மற்றொரு ரோபோ பயன்படுத்தப்பட உள்ளது.