குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களிடமிருந்து அதிகளவு தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மில்லியனுக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ள போதிலும், ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு இந்த விடயங்கள் பற்றி ஆலோசனை வழங்க நிபுணர் குழு நியமிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
நிபுணர் குழுவின் அறிக்கை இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயற்திறன் இன்மையை வெளிப்படையாக காட்டுகின்றது என குறிப்பிட்டுள்ள அவர், வெளிவிவகார அமைச்சு காத்திரமாக செயற்பட்டிருந்தால் நிபுணர் குழு அறிக்கை பகிரங்கப்படுத்தப்படுவதனை தடுத்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இறுதிக்கட்ட யுத்தம் மற்றும் யுத்தத்தின் பின்னரான நடவடிக்கைகள் குறித்து இலங்கை அரசாங்கம் சரியான பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.இதேவேளை, ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எந்தவிதமான பதிலையும் அளிக்க கூடாது என்பதே பெரும்பான்மையான இலங்கை அரசியல்வாதிகளின் நிலைப்பாடாகக் காணப்படுகின்றது.
அமெரிக்காவின் தென் கிழக்கு பகுதிகளான அலபாமா, அர்கனாஸ், ஒக்லாஹாமா மிஸூரி ஆகிய பிரதேசங்களை கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக கடுமையாக தாக்கிவரும் புயல் கற்று மற்றும் டோர்னாடோ சூராவளி காற்றினால் இதுவரை 250 ற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வருடத்தில் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ள மிக மோசமான அனர்த்தமாக இது பதிவாகியுள்ளது. நேற்று முன் தினம் புதன்கிழமை அலபாமாவை தாக்கிய புயல் காற்றில் 162 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது இவ் எண்ணிக்கை 250 ஆக அதிகரித்துள்ளது.
இரு நாட்களுக்கு முன்னர், புயல் காற்றில் சிக்கி சின்னாபின்னமான வீடுகள் போக, சில கட்டிடங்கள் எஞ்சியிருந்தன. நேற்று மீண்டும் இப்பகுதிகளில் வீசிய புயல் காற்றினால், அவையும் முற்றாக தேசமாகியுள்ளன.அல்பாமா,அர்கன்ஸாஸ், ஜோர்ஜியா, இலினொய்ஸ், கெண்டகி, மிசிசிப்பி, மிஸூரி, ஓக்லஹோமா, டென்னெஸ் பகுதிகள் இப்புயல் காற்றில் கடுமையாக பாதிப்படைந்துளன.
பாதிப்படைந்த இடங்களை பார்வையிடுவதற்காக சம்பவ இடங்களிற்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா விரைந்துள்ளார்.2000 ற்கு அதிகமான இராணுவ துருப்புக்கள் மீட்பு பணிகளுக்கென களமிறக்கபப்ட்டுள்ளன. முன்னதாக, இதே போன்றதொரு டோர்னாடோ புயல் காற்று 1974ம் ஆண்டு ஏப்ரல் 3ம் திகதி இடம்பெற்ற போது 310 பேர் உயிரிழந்தனர்.
அதற்கடுத்து அமெரிக்காவை தாக்கிய மிக மோசமான டோர்னேடோவாக இது பதிவாகியுள்ளது. கடந்த திங்கட்கிழமை முதல் 300 க்கு அதிகமான டோர்னாடோக்கள், இப்பகுதிகளை தாக்கியுள்ளன. கடந்த புதன் கிழமை மாத்திரம் 130 டோர்னேடோக்கள் வீசியுள்ளன.இதேவேளை இன்று சனிக்கிழமையும், அப்பகுதிகளில் கடுமையான புயல்காற்றுடன் கூடிய மழைபெய்யக்கூடும் என அமெரிக்க வானிலை மைய நிலையம் அறிவித்துள்ளது.
தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருப்பதால் தென்கொரியாவில் அதன் பயன்பாடு குறைந்து வருகிறது.அதே சமயம் விலை உயர்வை பயன்படுத்தி தென்கொரிய மக்கள் தங்களின் தங்கப் பற்களை விற்றும் வருவாய் ஈட்டி வருகின்றனர். தென்கொரிய மக்கள் பல் மருத்துவர்களிடம் தங்களின் தேய்ந்து போன தங்கப் பற்களை திரும்பக் கேட்காமல் புதிய பற்களை பொருத்திச் செல்வது தான் வழக்கம்.
ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அகற்றப்பட்ட தங்களது பழைய தங்கப் பற்களை மருத்துவரிடம் இருந்து கேட்டு வாங்கிச் சென்று கடைகளில் விற்று விடுகின்றனர்.கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் இருந்து தங்கப் பற்கள், பற்குழியை அடைக்க பயன்படுத்திய தங்கப் பொடி உள்ளிட்டவற்றை வாங்கியுள்ளதாக "கோல்டு செவன்" என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நம் சங் வூ தெரிவித்தார்.
தென்கொரியாவில் பழைய தங்கப் பல் ஒன்றுக்கு 40 ஆயிரம் வொன் முதல் ஒரு லட்சம் வொன்(ரூ.1700 - ரூ.4240) வரை கிடைக்கிறது. இந்நாட்டில் குழந்தைகளின் முதலாண்டு பிறந்த நாளின் போது 3.75 கிராம் கொண்ட தங்க மோதிரம் பரிசளிப்பது பாரம்பரிய வழக்கம்.தங்கம் விலை உயர்வு காரணமாக இப்போது ஒரு கிராம் கொண்ட மோதிரங்களுக்கு கூட கிராக்கி அதிகரித்துள்ளது. மேலும் 18 காரட் கொண்ட தங்க மோதிரங்களுக்கு பதிலாக 9 காரட் கொண்ட தங்க மோதிரங்களை நகை கடைக்காரர்கள் அதிகளவில் விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர்.
அரச திருமணம்: விழாக்கோலம் பூண்டது லண்டன்.
இங்கிலாந்து இளவரசர் வில்லியம், கதே மிடில்டன் திருமணம் லண்டனில் நாளை நடைபெறுகிறது.இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. நாளை நடைபெறும் திருமண ஊர்வலத்துக்கு நேற்று ஒத்திகை பார்க்கப்பட்டது. இதில் கதே பெற்றோர் மற்றும் இளவரசர் ஹாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இங்கிலாந்து மக்களுக்கு அரச குடும்பத்தினர் மீது தனிப் பாசம் உள்ளது. அதிலும் குறிப்பாக இளவரசர் வில்லியம் மற்றும் ஹாரி மீது அதிக பாசம் வைத்துள்ளனர். இளவரசி டயானா மறைந்த போது சிறுவர்களாக இருந்த வில்லியம் மற்றும் ஹாரி ஆகியோர் தாயின் சடலத்தின் பின்னால் சோகத்துடன் அணிவகுத்து சென்ற போது இங்கிலாந்து மக்கள் பலர் கண்ணீர் விட்டனர்.
நீண்ட இடைவெளிக்குப்பின் அரச குடும்பத்தில் நடைபெறும் முக்கிய திருமணம் என்பதால், இங்கிலாந்து மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். திருமணம் நடைபெறும் வெஸ்ட் மின்ஸ்டர் அபே பகுதியில் மக்கள் இப்போதே உற்சாகத்துடன் குவியத் தொடங்கியுள்ளனர்.
இங்கிலாந்து மக்கள் சுமார் 6 லட்சம் பேர் நாளை லண்டனில் கூடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. சாலை முழுவதும் தேசிய கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருமண ஊர்வலம் நாளை காலை ராணுவ அணிவகுப்புடன் தொடங்குகிறது. இதில் ஆயிரம் வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.காலை 10.15 மணிக்கு மாப்பிள்ளை வில்லியம், இளவரசர் ஹாரி ஆகியோர் வெஸ்ட்மின்ஸ்டர் அபே பகுதிக்கு வருகின்றனர். மணப்பெண் கதே தனது பெற்றோருடன் லண்டனில் உள்ள காரிங் ஓட்டலில் இருந்து 10.51 மணிக்கு புறப்படுகிறார்.
திருமண சடங்குகள் 11 மணிக்கு தொடங்குகின்றன. பின் புதுமண தம்பதியருடன் பிரம்மாண்ட ஊர்வலம் தொடங்கும். இந்த ஊர்வலம் பக்கிங்காம் அரண்மனையை மதியம் 12.30 மணிக்கு சென்றடையும். மதியம் 1.25 மணியளவில் அரண்மனையின் பால்கனியில் ராணி எலிசபெத் மற்றும் புதுமணத் தம்பதியர் நின்றபடி மக்களின் வாழ்த்துக்களை ஏற்பர்.அதைத் தொடர்ந்து விமானப்படை விமானங்களின் அணி வகுப்பு நடக்கிறது. இங்கிலாந்து அரச குடும்பத்தின் திருமண நிகழ்ச்சியை உலகம் முழுவதும் சுமார் 200 கோடி பேர் தொலைக்காட்சி மூலம் பார்ப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
விழாக்கோலத்துக்கு லண்டன் தயாராகி வரும் நிலையில் நாளை லண்டனில் கன மழை பெய்வதற்கு 70 சதவீத வாய்ப்புகள் இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. திருமணத்துக்கு வந்துள்ள வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் அரச குடும்பத்தினருக்கு ராணி எலிசபெத் இன்று இரவு பிரமாண்ட விருந்தளிக்கிறார்.
இளவரசர் வில்லியமின் திருமணத்தை கண்டுகளிக்க இங்கு கிளிக் செய்யவும்.
விண்ணில் சீனாவின் புதிய ஆய்வுக் கூடம்.
எதிர் வரும் 2020ம் ஆண்டுக்குள் 60 டன் எடையுள்ள மிகப்பெரிய விண்வெளி ஆய்வுக்கூடத்தை விண்ணில் நிறுவ சீனா தயாராகி வருகிறது.இதற்கான மாதிரி சோதனைக்கூடம் ஒப்புதலை பெற்றுள்ள நிலையில் அடுத்தகட்ட பணிகள் தொடங்கியுள்ளன. புதிய சோதனைக்கூடத்துக்கான பெயரை பரிந்துரைக்கும்படி வல்லுநர்கள் மற்றும் பொதுமக்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிய சோதனைக்கூடத்தை விண்வெளியில் நிறுவுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்து வருகிறது. இதன் முதல் முயற்சியாக பொருட்களை சுமந்து செல்லும் கார்கோ விண்கலம் தயார் நிலையில் உள்ளது.விண்ணில் ஆய்வுக்கூடத்தை நிறுவ தேவையான பொருட்களை இது சுமந்து செல்லும். முதல் மாதிரி ஆய்வுக்கூடமானது 18.1 மீற்றர் நீளமும், 4.2 மீற்றர் விட்டமும், 20 முதல் 22 டன் எடை கொண்டதாக அமைக்கப்பட்டு செயல்படத் துவங்கும். பின்னர் படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணில் அமைக்க உள்ள இந்த சர்வதேச விண்வெளி மையத்துக்கு "டியான்காங்-1" என்று பெயரிடப்படலாம் என்று தெரிகிறது. இந்த மையத்தை வெறுமனே ஆராய்ச்சிக்காக மட்டும் பயன்படுத்தாமல் ஒரு சுற்றுலா தளம் அளவுக்கு மாற்றவும் சீன விண்வெளி ஆராய்ச்சி துறை திட்டமிட்டுள்ளது.அங்கு குடியிருப்பு போன்ற தொகுப்புகளை உருவாக்கி பலரை அனுப்பவும் திட்டமிட்டிருக்கின்றனர்.
தனது பிறப்புச் சான்றிதழை சமர்பித்தார் ஒபாமா.
நீண்ட கால சர்ச்சைக்குப் பிறகு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது பிறந்த இடம் குறித்த தகவலை வெளியிட்டார்.கடந்த 2008ம் ஆண்டில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் வேட்பாளராக ஒபாமா போட்டியிட்டார். அப்போது இவரின் பிறப்பு மற்றும் இருப்பிடம் குறித்த சர்ச்சை ஒன்று எழுந்தது.
இருப்பினும் நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று அதிபர் பதவியில் அமர்ந்தார். இருந்தாலும் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினர் அதிபரின் மீது சந்தேகங்களை எழுப்பி வந்தன.இந்நிலையில் வரும் 2012ம் ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ள ஒபாமா தன்னுடைய பிறந்த இடம் குறித்த சான்றிதழை வெளியிட்டார்.
அதில் ஹவாய் தீவின் ஹோனோலுநகரில் 1961ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4ம் திகதி பிறந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிர்கட்சிகளின் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குனர் டான் பெபியர் தெரிவித்தார்.அதிபர் பதவி மற்றும் துணை அதிபர் பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள் அமெரிக்க பிரஜையாக இருக்க வேண்டும் என்பது நியதியாகும்.
பாகிஸ்தானில் தொடர் தாக்குதல்: அதிர்ச்சியில் உறைந்த மக்கள்.
நேற்று முன்தினம் பாகிஸ்தானில் ராணுவ பேருந்து ஒன்றை தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்தனர். இச்சம்பவத்தில் 6 பேர் பலியானார்கள்.இந்நிலையில் இன்று மேலும் ஒரு ராணுவ பேருந்தை தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்துள்ளனர். பாகிஸ்தானில் உள்ள துறைமுக நகரமான கராச்சியில் இருந்து ராணுவ அதிகாரிகளை ஏற்றிக் கொண்டு வந்த பேருந்தே இத்தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.அப்போது அந்த பேருந்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் பேருந்தில் இருந்த ராணுவ அதிகாரிகள் தூக்கி வீசப்பட்டனர். பேருந்தில் பயணம் செய்த ஏராளமான வீரர்கள் பலியாகி விட்டனர்.
அவர்கள் எத்தனை பேர் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. 2 பேர் மட்டும் இறந்து இருப்பதாக முதல் கட்ட தகவலில் பொலிசார் தெரிவித்தனர். மேலும் 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் கராச்சி நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.கடந்த இரண்டு நாட்களில் ஏற்பட்ட மூன்றாவது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
தனது மூன்று குழந்தைகளைக் கொன்ற தாய்க்கு 16 ஆண்டு சிறைத் தண்டனை.
மூன்று குழந்தைகளைக் கொன்ற தாய் தெரசா ரிகிக்கு 16 ஆண்டு கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.கடந்த ஓகஸ்ட் மாதம் தனது எடின்பர்க் இல்லத்தில் 47 வயது ரிகி தனது 8 வயது இரட்டையர் குழந்தைகள் ஆஸ்டின், லூக் மற்றும் 5 வயது மகள் செசிலியா ஆகியோரைக் கத்தியால் குத்திக் கொன்றார். குழந்தைகளை வைத்துக் கொள்வது தொடர்பான கருத்து வேறுபாட்டில் அவர் இந்த தீவிர முடிவை எடுத்தார்.
குழந்தைகள் ரத்த வெள்ளத்தில் அடுத்தடுத்து இறந்து கிடந்தனர். கட்டிடத்தில் எரிவாயு வெடிப்பு ஏற்பட்ட போது அந்தக் குழந்தைகள் கொடூரமாகக் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தைகளைக் கொன்ற அமெரிக்கா தாய் ரிகி தானும் தற்கொலைக்கு முயன்று இரண்டாவது மாடியில் இருந்து குதித்துள்ளார். இதில் அவர் மோசமாக காயம் அடைந்தார்.
கிளார்சோ உயர் நீதிமன்றம் அவருக்கு 16 ஆண்டு கால சிறைத் தண்டனையை இன்று விதித்தது. ரிகியும் அவரது கணவர் பாங்குலேவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். பாங்குலே ஷெல் பிரிட்டன் என்ஜினியர் ஆவார்.குழந்தைகளை தங்கள் வசம் வைத்துக் கொள்வது தொடர்பாக இருவருக்கும் இடையே சட்டப் போராட்டம் நீடித்து வந்தது. இந்த நிலையில் ரிக் தனது குழந்தைகளைக் கொன்றுள்ளார்.
சீனாவில் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய நச்சு கலந்த பால்பவுடர் கைப்பற்றப்பட்டது.
சீனாவின் தெற்குபகுதியைச் சேர்ந்த ஒரு நகரத்தில் "மெலமைன்" எனப்படும் நச்சுப்பொருள் கலந்த 26 டன் பால்பவுடரை அந்நாட்டு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.மெலனைன் என்ற ரசாயனப் பொருள் பால்பவுடரில் கலந்துள்ள புரதச் சத்துக்களை அளவிட்டு அறிவதற்காக பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு விதமான நச்சுப் பொருளும் கூட.சீனாவில் உள்ள சோங்கிங் என்ற நகரில் இருக்கும் ஐஸ்கிரீம் தயாரிக்கும் கடையில் இருந்து மெலமைன் கலந்த 26 டன் பால்பவுடரை பொலிசார் கைப்பற்றினர்.
இந்த பால்பவுடர் முழுவதும் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. இன்னும் உபயோகப்படுத்தப்படவில்லை. இந்த வழக்கு விசாரணை குறித்து ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.சீனாவில் 2008ல் "மெலமைன்" கலந்த பாலை குடித்ததால் ஆறு குழந்தைகள் பலியாகினர். மேலும் மூன்று லட்சம் குழந்தைகள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடத்தப்பட்ட 4 பிரெஞ்சு நபர்களின் வீடியோவை அல்கொய்தா வெளியிட்டது.
வடக்கு ஆப்பிரிக்க பிரிவைச் சேர்ந்த அல்கொய்தா தீவிரவாதிகள் நைஜீரியாவில் கடத்திச் சென்ற 4 பிரெஞ்சு நபர்களின் புதிய வீடியோவை வெளியிட்டனர்.ஆப்கானிஸ்தானில் இருந்து பிரான்ஸ் துருப்புகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்பது அல்கொய்தா தீவிரவாதிகளின் கோரிக்கை ஆகும். கோரிக்கை ஏற்கப்படாத பட்சத்தில் கடத்தப்பட்ட பிரெஞ்சு நபர்களுக்கு விபரீத விளைவு ஏற்படும் என அல்கொய்தா பிரிவினர் எச்சரித்து உள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதம் கடத்திச் செல்லப்பட்ட பிரெஞ்சு நபர்களின் வீடியோ டேப்பை செவ்வாய்க்கிழமை அல்கொய்தா அமைப்பினர் வெளியிட்டனர். பிரெஞ்சு நபர்கள் முழங்காலிட்டபடி நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களைச் சுற்றி துப்பாக்கிகளை ஏந்தியவாறு அல்கொய்தாவினர் நிற்கின்றனர்.பிணை நபர்களாக கொண்டு செல்லப்பட்டவர்களின் முகங்கள் மறைக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 11 மற்றும் 13ம் திகதிகள் இடையே ஓடியோச் செய்தியும் தரப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் போரில் பிரான்சுக்கு முழு ஈடுபாடு கிடையாது. எனவே அந்த துருப்புகள் உடனடியாக அங்கிருந்து விலக வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசி உடனடியாக பதிலளிக்க வேண்டும் என அல்கொய்தாவினர் எச்சரித்துள்ளனர்.நைஜீரியாவில் கடந்த செப்டம்பர் மாதம் 4 பிரெஞ்சு அரிவா மற்றும் வின்சி ஊழியர்கள் உள்பட 7 அயல் நாட்டவர்களை அல்கொய்தா தீவிரவாதிகள் கடத்தினர்.
அரச திருமணத்தில் எங்களுக்கு முழு ஈடுபாடு இல்லை: பிரிட்டன் மக்கள்
பிரிட்டனில் பொருளாதார நெருக்கடி காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர்.
இந்நிலையில் நடக்கவிருக்கும் இளவரசர் வில்லியம் திருமணத்தில் பிரிட்டன் மக்கள் அதிகளவில் ஈடுபாடு காட்டவில்லை. பிரிட்டனில் அரச குடும்ப திருமணங்களைப் பொறுத்தவரை உலகப் போர், பொருளாதார நெருக்கடி என்பன போன்ற ஒருவித நெருக்கடி காலகட்டங்களிலேயே நடந்திருக்கின்றன.
இளவரசர் வில்லியமின் திருமணமும் இதற்கு விதிவிலக்கல்ல. பிரிட்டன் தற்போது பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இதனால் அங்கு ஆயிரக்கணக்கானோர் தங்கள் வேலையை இழந்து விட்டனர். பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது. பிரிட்டன் நாணயமான பவுண்ட்டின் நிலை பலவீனமாக இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
பிரிட்டன் மக்களின் மனநிலையும் வேறு விதமாக உள்ளது. இவ்வளவு பொருளாதார நெருக்கடியில் இப்படி ஆடம்பரமாக திருமணம் நடத்த வேண்டுமா என்று அவர்கள் கோபத்தில் உள்ளனர். அதனால் அவர்கள் திருமண விருந்தில் கலந்து கொள்ள விரும்பவில்லை என்றும், அரச பரம்பரை நீடிப்பதை விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஆனால் திருமணத்திற்கு ஆகும் செலவு அனைத்தையும் அரச குடும்பமும், மணமகள் கதே மிடில்டன் குடும்பமும் பகிர்ந்து கொள்ளும் என்று பக்கிங்ஹாம் அரண்மனை சமீபத்தில் குறிப்பிட்டிருந்தது. திருமணத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடு உள்ளிட்ட சிலவற்றுக்கு மட்டும் அரசு செலவழிக்கும் என்று தெளிவாக்கப்பட்டிருந்தது.
சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 35 சதவீதம் பேர் அவரவர் வீடுகளில் தொலைக்காட்சி மூலம் திருமணத்தைப் பார்க்கப் போவதாகவும், 35 சதவீதம் பேர் திருமணத்தைப் புறக்கணிக்கப் போவதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சிரியா மீது ஐரோப்பிய தடை: ஜேர்மனி தீவிர ஆர்வம்
சிரியா நாட்டில் அரசு துருப்புகளுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சிரியா மீதான ஐரோப்பிய தடைக்கு ஜேர்மனி தீவிர ஆதரவு தெரிவித்துள்ளது. ஜேர்மனி நிலை குறித்து அரசுச் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் செய்பெர்ட் பெர்லினில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,"சிரியத் துருப்புகள் கடுமையான மனித உரிமை மீறலை மேற்கொண்டுள்ளது. எனவே ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்ளும் கடுமையான நடவடிக்கைக்கு ஜேர்மனி முழு ஆதரவு அளிக்கும்" என்றார்.
இந்த தடை நடவடிக்கையின்படி சிரியா அதிகாரிகள் பயணம் மேற்கொள்ள கட்டுப்பாடு கொண்டு வரப்படும். அவர்களது சொத்துக்களும் முடக்கப்படும். அதே போன்று ஐரோப்பிய ஒன்றியம் மூலமாக அளிக்கப்படும் பொருளாதார உதவிகளும் நிறுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரியாஸ் பெஸ்கே கூறியதாவது: பிரஸ்சல்ஸ் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெறும் ஒரு கூட்டத்திற்கு ஜேர்மனி அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றிய தடை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துகிறது.
இந்தக் கூட்டத்தில் சிரியா மீது கடும் தடை நடவடிக்கை எடுப்பதற்கான கருத்துருவை ஜேர்மனி அளிக்கிறது. சிரியாவில் நிலவும் பதட்ட நிலையைக் குறித்து விவாதிக்க ஐ.நா முடிவு எடுத்ததை ஜேர்மனி வரவேற்றுள்ளது.
பாதுகாப்புக் கவுன்சிலில் ஜேர்மனி நிரந்தரமற்ற உறுப்பினராக உள்ளது. சிரியா மனித உரிமைக் கவுன்சிலில் இடம்பெறுவதற்கு ஜேர்மனி எதிர்ப்பு தெரிவிக்கிறது என்றும் அரசு செய்தித் தொடர்பாளர் செய்பெர்ட் கூறினார்.
கனடாவின் மணிடோபா மாகாணத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சில ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரால் மணிடோபா மாகாணத்திற்கு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.அருகாமையில் உள்ள சாஸ்க் கட்ச்வான் பகுதியிலும் வெள்ள நீர் ஊடுருவும் நிலை உள்ளது. மணிடோபா மாகாண அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.
கியூ அபெல்லே ஆறு, அசினிபோய்னே ஆறு மற்றும் சோரிஸ் ஒட்டிய பகுதிகளில் வெள்ள நீர் புகும் அபாயம் உள்ளது. லே டெலிவர் அருகே ரெட் ஆறு நீர் மட்டம் 784.15 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.வின்னிபெக் பகுதியில் ஜேம்ஸ் அவென்யூவில் கண்காணிக்கப்பட்டதில் ரெட் ஆறு நீர் மட்டம் குறைந்தது. இருப்பினும் அசிபோய்னே பகுதியில் நீர் வரத்து அதிகரிக்கும் என அதிகாரிகள் கூறினர். சாஸ்க் கட்ச் வான் பகுதியிலும் வெள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ரேமோமர் என்ற இடத்திலேயே ஒரு பெண் உட்பட பலர் வீட்டில் மழை நீர் சூழ்ந்ததில் பரிதவித்து நின்றனர். மழை வெள்ளம் காரணமாக மக்கள் கார் பயன்படுத்துவதை தவிர்க்கின்றனர். மழை நீரில் சிக்கிக் கொண்ட வாகனங்கள் பழுதடைந்து பாதி வழியிலேயே நிற்கின்றன.வெள்ள நீர் ஆற்றில் மட்டும் அல்ல முக்கியச் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றனது. மழை வெள்ளப் பாதிப்பால் தூய்மையான குடிநீர் பெறுவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. பெருக்கெடுத்து ஓடி வரும் வெள்ள நீரால் மக்கள் தங்கள் அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்வதிலும் சிரமம் ஏற்பட்டது.
கடாபியை கொலை செய்யவே நேட்டோ படை முயற்சிக்கிறது: ரஷ்ய பிரதமர் குற்றச்சாட்டு.
லிபிய அதிபர் கடாபியை கொலை செய்யவே அவரது அரண்மனை மீது நேட்டோ படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதின் குற்றம் சாட்டியுள்ளார்.லிபிய தலைநகர் திரிபோலியில் உள்ள அரண்மனையில் கடாபி தங்கியுள்ளார். 2 நாட்களுக்கு முன் இந்த கட்டிடத்தின் மீது நேட்டோ படை விமான தாக்குதல் நடத்தியது. அதில் கட்டிடத்தின் ஒரு பகுதி பலமாக சேதமடைந்தது.
இந்நிலையில் டென்மார்க் சென்றுள்ள ரஷ்ய பிரதமர் புதின் இது பற்றி கூறியதாவது: லிபியாவில் நடக்கும் உள்நாட்டு கலவரத்தால் தடை செய்யப்பட்ட பகுதியில் விமானம் பறக்க கூடாது என ஐ.நா உத்தரவை ஏற்றுக் கொள்ளலாம்.ஆனால் ஒவ்வொரு இரவும் கடாபி தங்கியிருக்கும் கட்டிடம் மீது நேட்டோ படை விமான தாக்குதல் நடத்துகிறது. ஏனெனில் கடாபியை கொலை செய்யவே நேட்டோ முயற்சிக்கிறது.
இல்லையெனில் கடாபி தங்கியிருக்கும் கட்டிடம் மீது ஏன் தாக்குதல் நடத்த வேண்டும். அதன் உள்நோக்கம் கடாபியை கொல்ல வேண்டும் என்பதே என்று புதின் தெரிவித்தார்.இதற்கு மறுப்பு தெரிவித்த நேட்டோ படை கமாண்டர் சார்லஸ் பவுச்சர்டு கூறுகையில்,"கடாபி அரண்மனையில் இருக்கும் ராணுவ வீரர்களை நோக்கியே தாக்குதல் நடத்துகிறோம். கடாபியை குறிவைத்து அல்ல" என்று தெரிவித்தார்.
இந்தியாவுடன் மேம்பட்ட உறவை ஏற்படுத்த வேண்டும்: கனடா
இந்தியாவுடனான ஒருங்கிணைந்த உறவை அனைத்து துறைகளிலும் மேம்படுத்த வேண்டும் என்று கனடாவின் எதிர்க்கட்சியான சுதந்திர கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.கனடா-இந்தியா அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த வட்ட மேஜை கலந்தாய்வில் இந்த முடிவு வலியுறுத்தப்பட்டது. இந்தியாவுடன் வர்த்தக உறவு மட்டுமின்றி, குடியேற்றம், சுற்றுலா, கல்வி உள்ளிட்ட துறைகளிலும் உறவுகளை மேம்படுத்த வேண்டும் என்று சுதந்திர கட்சியின் முன்னணி தலைவர்கள் வலியுறுத்தினர்.
இந்தக் கூட்டத்தில் சுதந்திர கட்சியின் முக்கிய தலைவர்களான பாப் ரே, ஜான் மெக்கலம், மரியா மின்னா, ராப் ஓலிபன்ட், ராணா சர்க்கார் ஆகியோர் பங்கேற்றனர். இந்தியா-கனடா இடையிலான உறவு மேலும் வலுவடைந்து வருவதற்கு கனிஷ்கா விமான விபத்தில் கனடா காட்டி வரும் ஒத்துழைப்பே காரணம் என பாப் ரே சுட்டிக்காட்டினார்.முந்தைய சுதந்திர கட்சி ஆட்சியிலிருந்த போது ஜி8 அமைப்பிலிருந்து முன்னேறி ஜி20 நாடுகள் பட்டியலில் கனடா சேர வேண்டியதன் அவசியம் உணரப்பட்டது. இந்த அமைப்பில் வளரும் நாடுகளான இந்தியாவும் இடம்பெற்றுள்ளதை ரே சுட்டிக் காட்டினார்.
இந்தியாவுக்கு கனடா குழு பயணம் மேற்கொண்டு இரு நாடுகளிடையிலான உறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று மெக்கலம் குறிப்பிட்டார். இந்திய மாணவர்களைக் கவர்வதில் அவுஸ்திரேலியா அதிக தீவிரம் காட்டி வருகிறது. இதே போல விசா வழங்கும் நடைமுறைகள் தளர்த்தப்பட்டால் இந்திய மாணவர்கள் கனடாவுக்கு வருவது அதிகரிக்கும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
நிறுவனங்களுக்கான வரி 18 சதவீதமாகத் தொடர வேண்டும் என்றும் இதன் மூலம் வரி செலுத்துவோர் சேமிக்கும் அளவு 600 கோடி டொலராக உயரும் என்றும் அவர் கூறினார். நிறுவன காப்பீடு பிரிமீயம் முறையில் மாற்றம் செய்தால் வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை குறையும் என்று குறிப்பிட்ட ராப் ஒலிபன்ட், 20 ஆண்டுகளுக்கு முன்னரே குஜராத் மாநிலம் மிகச் சிறப்பாக முன்னேறும் என குறிப்பிட்டதாகக் கூறினார்.
அல் கொய்தா அமைப்புக்கு ஆட்களை தெரிவு செய்யும் மசூதிகளின் பட்டியல் வெளியீடு.
உலகத்தையே அதிர வைக்கும் அல் கொய்தா அமைப்பினர் தங்களுக்கு தேவையான பயங்கரவாதிகளைத் தெரிவு செய்யும் மசூதிகளின் பட்டியலை அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் கண்டறிந்துள்ளது.ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளில் வலுவான தளத்தைக் கொண்டுள்ள அல் கொய்தா பயங்கரவாதிகள் உலகையே அச்சுறுத்தும் வகையிலான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இருப்பினும் கனடாவின் மொன்றியல் நகரிலிருந்து கராச்சி வரையில் மசூதிகள் இஸ்லாமிய மையங்களில் அல் கொய்தா அமைப்புக்கு ஆள் சேர்க்கும் இடங்களின் பட்டியலை பென்டகன் தயாரித்துள்ளது.
இந்த பட்டியலில் கியூபாவில் உள்ள குவாந்தநாமோ வளைகுடா, மொன்றியலில் உள்ள அல்சுனா மசூதி, கராச்சியில் உள்ள அபு பகிர் சர்வதேச பல்கலைக்கழகம், ஏமனில் உள்ள திமஜ் மையம், வடக்கு லண்டனில் உள்ள பின்ஸ்பரி பூங்கா மசூதி, இத்தாலியின் மிலன் நகரில் உள்ள மசூதி, பிரான்ஸின் லியோன் நகரில் உள்ள லினெக் மையம், காபூலில் உள்ள வாஸிர் அக்பர் கான் மசூதி ஆகியவற்றில் அல் கொய்தா அமைப்புக்கு ஆள் சேர்ப்பு நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அல் கொய்தா அமைப்பினர் தங்களது மையத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுவதை பிரான்ஸில் உள்ள லெனக் மைய காப்பாளர் மறுத்துள்ளார். சிறந்த நன்னடத்தையுடன் செயல்படுவதால் உலகிலேயே மிகவும் பிரபலமாக இந்த மையம் விளங்குகிறது.
அப்படியிருக்கும் போது இதுபோன்ற முட்டாள் தனமான செயல்களில் இந்த மையம் ஈடுபடுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அமெரிக்காவுக்கான பிரான்ஸ் தூதரிடம் தங்களது கண்டனத்தைத் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.இதுபோன்ற தகவல்களை வெளியிடுவது திட்டமிட்டே மசூதியின் மீது களங்கம் கற்பிக்கும் நடவடிக்கையாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.